தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்புகள்... எல் நினோ தாக்கம் காரணமா?

Oct 03, 2026 - 15:00
0
தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்புகள்... எல் நினோ தாக்கம் காரணமா?

இந்த ஆண்டு எல்-நினோ தாக்கத்தால் இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட குறைந்துள்ள நிலையில், தமிழகத்திலும் மழை வெயில் மாறுபாடு, வெப்பநிலை மாற்றம், ஈரப்பதத்தில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்படுகின்றன. இப்படியான வானிலை மாற்றங்கள் கொசுக்கள் பெருகுவதற்கும், வைரஸ் மற்றும் பிற தொற்றுநோய்கள் பரவுவதற்கும் சாதகமான சூழலை உருவாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பரவும் காய்ச்சல்| Represental Images
பரவும் காய்ச்சல்| Represental Images

தமிழகத்தில் சுமார் 18,000 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், 9 பேர் இதற்கு உயிரிழந்ததாகவும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதுதவிர, H1N1 வைரஸ் பாதிப்பான பன்றிக் காய்ச்சல், உண்ணிக் காய்ச்சல், பருவ கால காய்ச்சலான ப்ளூ என பல்வேறு பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இந்த பாதிப்புகள் ஆண்டுதோறும் ஏற்படும் சராசரி பாதிப்பைக் காட்டிலும் சற்று அதிகரித்துள்ளன. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் அதிகரித்துவரும் காய்ச்சல் பாதிப்புகளுக்கு எல்-நினோ தான் காரணமா என்று விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த நோய்த்தொற்று சிறப்பு மருத்துவரான சுப்ரமணியன் சுவாமிநாதன்.

"பொதுவாக, சில குறிப்பிட்ட வைரஸ் தொற்றுகள் குறிப்பிட்ட சீசன்களில் அதிகமாகப் பரவும். ஆனால், சமீபத்திய மாதங்களில் காய்ச்சல் மற்றும் தொற்றுகளின் நிலவரத்தில் சில மாற்றங்கள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில், பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கணிசமாக இருந்தது. பருவநிலை மாற்றங்களுடன் டெங்கு பாதிப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தற்போது, 'டிக் ஃபீவர்'(Tick fever), உண்ணிக் காய்ச்சல் என்று பொதுவாக குறிப்பிடப்படும் 'ஸ்க்ரப் டைஃபஸ்' (Scrub typhus) பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

டெங்கு

எல்-நினோ காரணமா?

வானிலை, மழைப்பொழிவு, வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவையும் தொற்றுகள் பரவுவதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எல் நினோ போன்ற காலநிலை மாற்றங்களும் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், எல் நினோ மட்டுமே ஒரே காரணம் என்று கூற முடியாது. பல்வேறு உள்ளூர் சுற்றுச்சூழல் மற்றும் பருவகால காரணிகளும் தொற்றுகள் பரவுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இன்ஃப்ளூயன்சா (Influenza) ஒரு சுவாச வைரஸ் தொற்று என்பதால், அதன் பரவல் பருவநிலையைப் பொறுத்து மாறுபடலாம். மறுபுறம், டெங்கு பாதிப்பு பெரும்பாலும் ஏடிஸ் (Aedes) கொசுக்கள் பெருகுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் இருப்பதாலும், மழைப்பொழிவு மற்றும் தண்ணீர் தேங்குவது கொசுக்கள் பெருகுவதற்கான இடங்களை அதிகரித்து, தொற்று பரவும் அபாயத்தையும் அதிகரிக்கலாம்.

டெங்கு

உண்ணிக் காய்ச்சல், ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சல் போலவே தோன்றக்கூடும். இது கொசுக்கள் மூலம் பரவும் நோய் அல்ல. Orientia tsutsugamushi என்ற பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று. இது Chiggers எனப்படும் மிகச்சிறிய பூச்சிகளின் கடியால் மனிதர்களுக்குப் பரவுகிறது. புல்வெளி, புதர், அடர்ந்த செடிகள் நிறைந்த பகுதிகளில் இருப்பவர்களுக்கு இந்தத் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

பல தொற்றுகள் அதே அறிகுறிகள்

பல தொற்றுகளிலும் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, சோர்வு மற்றும் குளிர் நடுக்கம் போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகள் ஏற்படலாம். அதனால்தான் தொடர்ந்து நீடிக்கும் காய்ச்சலை அலட்சியப்படுத்தக்கூடாது. அறிகுறிகள் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், அவற்றுக்கான காரணங்களும் சிகிச்சைகளும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கலாம். எனவே, சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்ளக் கூடாது.

மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன்

ஓரிரு நாள்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தாலோ, அதிகமாக இருந்தாலோ, மூச்சுத்திணறல், கடுமையான பலவீனம், குழப்ப மனநிலை, சிறுநீர் வெளியேற்றம் குறைதல், தொடர்ந்து வாந்தி அல்லது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும் வேறு அறிகுறிகள் இருந்தாலோ, மருத்துவப் பரிசோதனை அவசியம். காய்ச்சலுக்கான காரணத்தை ஆரம்பத்திலேயே கண்டறிவது, தாமதமின்றி சரியான சிகிச்சையைத் தொடங்க உதவும்.

வீடு மற்றும் பணியிடங்களைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். புல்வெளிகள் அல்லது புதர்கள் நிறைந்த பகுதிகளில் நேரம் செலவிடும்போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, நெரிசலான இடங்களில், குறிப்பாக சுவாசத் தொற்று அறிகுறிகள் இருந்தால் மாஸ்க் அணிவது, இருமல், தும்மலுக்குப் பிறகு கைகளை சோப்பால் நன்றாகக் கழுவுவது போன்ற சுவாச சுகாதாரத்தைப் பின்பற்றுவது, சுவாசத் தொற்றுகள் பரவுவதைக் குறைக்க உதவும்.

மாஸ்க்

வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் நோய்களின் பரவல் முறையைப் பாதிக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டு, ஆண்டு முழுவதும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது முக்கியம்" என்கிறார் மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User