`பத்துக்கு பத்து வீட்ல மொத்த குடும்பமும் வசிச்ச‌தை நினைச்சா..' - புதுமனை புகுந்த‌ பழைய ஜோக் தங்கதுரை

Jun 16, 2026 - 19:31
0
`பத்துக்கு பத்து வீட்ல மொத்த குடும்பமும் வசிச்ச‌தை நினைச்சா..' - புதுமனை புகுந்த‌ பழைய ஜோக் தங்கதுரை

சென்னையில் புது வீடு வாங்கிக் குடியேறி இருக்கிறார் `பழைய ஜோக்' தங்கதுரை.

விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தங்கதுரை. டிவியிலிருந்து சினிமா பக்கமும் வந்தவர் 'டிடி ரிட்டர்ன்ஸ்' 'பன்னிக்குட்டி' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருந்தார். இப்போது சில படங்கள் கைவசம் இருப்பதாகவும் தெரிகிறது.

தற்போது சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி சில தினங்களுக்கு முன் கிரஹப் பிரவேசம் நடத்தியிருக்கிறார்.

நடிகர்கள் விஜய் சேதுபதி, செந்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அமைச்சர் ராஜ்மோகன், தவெக எம்.எல்.ஏ ஸ்ரீநாத் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தப் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்டனர்.

தங்கதுரையிடம் பேசினோம்.

Thangadurai

''சென்னையில ஓட்டு வீட்டுல குடியிருந்தோம். சமைக்க, படுக்க எல்லாம் ஒரே ரூம்தான். ஆனா குடும்பம் பெரியது. மழைக் காலம் வந்தா கேக்கவே வேண்டாம் மழைத் தண்ணீரும் சாக்கடைத் தண்ணீரும் சேர்ந்து உள்ள வந்துடும். பெரிய இரும்புக் கட்டில்ல எல்லா சாமான்களையும் தூக்கி வச்சுட்டு அக்கம் பக்கத்துல தெரிஞ்சவங்க வீடு, சமுதாயக் கூடம்னு போய் தங்குவோம். சின்ன வீடுங்கிறதாலேயே என்ன நினைப்பாங்களோனு பள்ளிக் கூடத்துல இருந்து நண்பர்கள் யாரையும் வீட்டுக்கு கூப்பிட்டு வரமாட்டேன். ஆனாலும் எங்க அப்பா எங்களையெல்லாம் நல்லா படிக்க வச்சார். நான் பத்தாவதுல ஸ்கூல் அளவுல மூணாவது இடம்.

பெரிய குடும்பமா இருந்ததாலேயே அடிக்கடி வீடு மாற வேண்டி வந்தது. ஹவுசிங் போர்டு வீட்டுல கொஞ்ச நாள் இருந்தோம். வாடகை வீடுகள்ல கசப்பான அனுபவம்கிறது ரொம்ப பேருக்கு இருக்கும். நானுமே அதையெல்லாம் கடந்துதான் வந்தேன். ரீவைன்ட் பண்ணிப் பார்த்தா சமயத்துல கண்ணுல நம்மை அறியாமலேயே தண்ணி வந்திடுது. பத்துக்குப் பத்துல தொடங்கி அப்புறம் சிங்கிள் பெட் ரூம் வீடு, டபுள் பெட் ரூம் வீடுன்னு கொஞ்சம் கொஞ்சமா அடி எடுத்து வச்சோம்.

தங்கதுரை

எப்படியோ முட்டி மோதி இன்னைக்கு சென்னையின் முக்கியமான இடமான கோயம்பேட்டில் 19 வது மாடியில சொந்தமா ஒரு ஃபிளாட்டை வாங்கிட்டேன்.

'நம்ம குடும்பத்துல சொந்த வீடு வாங்குகிற முதல் தலைமுறை'னு பெருமையாச் சொன்னார் அப்பா. சாதாரண கூலி வேலை செஞ்சுகிட்டே கஷ்டத்துக்கு மத்தியிலயும் அஞ்சாறு பிள்ளைகளை படிக்க வச்சு நல்லவிதமா ஆளாக்கி விட்ட அவர் பண்ணினதுதான் சாதனை'' என்றவர், தன்னுடைய புது வீடு குறித்து உற்சாகமாகத் தொடர்ந்தார்..

``மூணு பெட்ரூம் வீடு. நீச்சல் குளம், லைபரரி, விளையாட கிரவுண்டு என எல்லா வசதியும் இருக்கிற கேட்டட் கம்யூனிட்டி ஏரியா. எனக்கு கிடைக்காத வசதி வாய்ப்புகள் என் பிள்ளைக்குக் கிடைச்சிருக்குங்கிறதுல சந்தோஷமா இருக்கு. அதேபோல சொந்தக்காரங்க எல்லாரையும் ஃபங்ஷனுக்குக் கூப்பிட்டேன்.

சிலர் கண் பட்டுடும்னு கிரஹப் பிரவேசத்தை கிராண்டா செய்ய வேண்டாம்னு சொல்வாங்க. என்னால இதை ஏத்துக்க்க முடியலை. என் சொந்த பந்தம், அண்ணன் தம்பி பங்காளிங்க எல்லாமே ஒண்ணுமண்ணாவே கஷ்டப்பட்டுட்டுதான் இருந்தோம். அதுல ஓரளவு வசதி வந்த நான் புதுசா ஒரு வீட்டை வாங்கிக் குடியேறுகிறப்ப அவங்களுக்கும் அது ஒரு உத்வேகத்தைத் தருமில்லையா?

நாம நல்லவிதமா யோசிச்சா நமக்கும் நல்லதுதான் நடக்கும்னு உறுதியா நம்புறேன்" என நெகிழ்ச்சியுடன் முடித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User