சிவனேன்னு தானே இருந்தேன்.. உதவி செய்த பாவமோ?

Mar 2, 2026 - 21:02
 0
சிவனேன்னு தானே இருந்தேன்.. உதவி செய்த பாவமோ?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

நான் பள்ளி ஆசிரியை. என் மகன் வீட்டிற்கு ஒருமுறை சென்றபோது நிகழ்ந்தது இது. வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டு கருத்துக்களைக் கேட்க ஆவலாய் உள்ளேன்.

பொதுவாக மக்களிடம் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் குணம் குறைந்து வருவதாக ஒரு அங்கலாய்ப்பு இருந்துகொண்டே இருக்கிறது. என் மனதை சலனத்துக்கு உள்ளாக்கிய ஒரு உண்மை சம்பவத்தைச் சொல்கிறேன்.

சென்னையின் நாகரீகமான ஒரு பல மாடிக் குடியிருப்பில் என் மகன் குடும்பத்துடன் வசிக்கிறான். ஒருமுறை நான் அங்கு சென்றிருந்தேன். பகல் 12 மணியிருக்கும். நான் வரவேற்பு அறையில் அமர்ந்து இருந்தேன். வாசல் கதவருகில் யாரோ நிற்பதுபோல் நிழல் தெரிந்தது. ஒரு 65 வயது மதிக்கத்தக்க பெண் நின்றிருந்தார். பக்கத்து வீட்டில் வசிப்பதாகவும் தான் வெளியே சென்றிருந்தபோது கணவர் வீட்டைப் பூட்டிக்கொண்டு எங்கு சென்றார் எனத் தெரியவில்லை, சாவியும் இல்லை என்றும் கூறினார்.

 வீட்டுக்குள் வந்து அமரும்படியும் தண்ணீர் வேண்டுமா என்றும் கேட்டேன். பிடிவாதமாக வீட்டிற்குள் வர மறுத்தார். 

‘செல் போன் கையில் எடுத்துப்போகவில்லையா’? என்று கேட்டபோது மறந்து வீட்டில் வைத்துச் சென்றதாகக் கூறினார். என்னுடைய போனில் உங்கள் கணவருடன் பேசுகிறீர்களா என்று கேட்டு, அவர் சொல்லச் சொல்ல டயல் செய்தேன். போன் ஒலித்தது. பதில் இல்லை. சிறிது நேரம் கழித்துத் திரும்பவும் அவர் கேட்டதால் மறுபடியும் போனில் டயல் செய்தேன். பதில் இல்லை.

சிறிது நேரத்தில் 70 வயது மதிக்கத் தக்க ஒரு ஆண் வந்தார். தன்னை அந்தப் பெண்மணியின் கணவர் தொடர்புகொண்டதாகவும் கதவைத் திறந்து விடும்படி கூறினார் என்று சொல்லிக்கொண்டே நடந்தார். என்னிடம் ஒருவார்த்தை அந்தப் பெண்மணி பேசாமல் வந்தவருடன் சென்றுவிட்டார். வந்தவர் யார் என்று தெரியவில்லை. சாவி எப்படி அவரிடம் இருக்கிறது என்றும் எனக்குத் தெரியவில்லை.

நான் வீட்டிற்குள் வந்து சாப்பிட்டுவிட்டு படுத்தேன். சிறிது தூங்கிவிட்டேன். என் போன் ஒலித்தது. முன்பின் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு. பச்சை பட்டனைத் தொட்டதும் எதிர் முனையிலிருந்து ‘நீங்க யாருங்க’ என்று கோபமான பெண் குரல் கேட்டது. தூக்கக் கலக்கத்தில் குரலை வைத்து சற்று முன் பேசிய பெண்மணியின் குரல் தான் அது என்று என்னால் யூகிக்க முடியவில்லை.

‘நீங்கள் தானே அழைத்தீர்கள், நீங்க யாரு, என்ன கேட்கிறீர்கள்’? என்று கேட்டேன். 

‘என் கணவனுக்கு இரண்டு முறை போன் செய்திருக்கிறீர்கள்? நீங்க யாருங்க?  என்று மறுபடியும் அதே கோபமான குரல். 

‘என் கணவனுக்கு இரண்டு முறை போன் செய்திருக்கிறீர்கள்’ என்ற வார்த்தைகள் எனக்குள் ஒரு வெளிச்சத்தைக் கொடுத்தது. நீங்கள்தானே நம்பர் கொடுத்து உங்கள் கணவரை அழைக்கச் சொன்னீர்கள் என்று கேட்டவுடன் போன் துண்டிக்கப்பட்டது. அடுத்த வார்த்தை இல்லை.

நான் அந்த பெண்மணிக்கு உதவிதானே செய்தேன். அந்தப் பெண்மணியின் கணவருக்கு நிச்சயமாக 70 வயதுக்கு மேல் இருக்கும். இந்த வயதிலும் சந்தேகமா? 

அடுத்தடுத்த வீடுகளில் இருக்கிறோம். மறுபடியும் மாடிப்படிகளில், லிப்ட்டில் ஏறும்போதும் இறங்கும் போதும் பார்க்கவேண்டியிருக்கிறது. 

நான் ஏதோ தவறு செய்ததுபோல் விலகிச் செல்கிறேன். இனி யாருக்கும் உதவி செய்யக்கூடாது என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது.

 -விஜயலட்சுமி சங்கரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0