"உன் மனைவியை என்னால் மறக்க முடியல" - காதலியின் கணவருக்கு மெசேஜ் அனுப்பியவருக்கு அரிவாள் வெட்டு

Oct 29, 2026 - 16:00
0
"உன் மனைவியை என்னால் மறக்க முடியல" - காதலியின் கணவருக்கு மெசேஜ் அனுப்பியவருக்கு அரிவாள் வெட்டு

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெங்கம்புதூர் அருகேயுள்ள தெற்கு புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் (27). இவர் கட்டடம் கட்டும் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 7 ஆண்டுகளாக இவர் பறக்கை அருகேயுள்ள மேலப்புல்லுவிளையைச் சேர்ந்த தங்கமலர் (26) என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக தங்கமலர் விவேக்கிடம் சரிவர பேசுவதில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் தங்கமலருக்கும் பழவிளை அருகே உள்ள பூவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கப்பலில் வேலை செய்து வரும் திவேக் (28) என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இதை அறிந்த விவேக் தொடர்ந்து தங்கமலரையும் அவரது கணவர் திவேக்கையும் போனில் டார்ச்சர் செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. தங்கமலருக்கு போன் செய்து பழைய காதல் விவகாரங்களைப் பேசியதுடன், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படியும் விவேக் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் தங்கமலர் போன் எடுக்காமல் இருந்ததால் அவரது கணவர் திவேக்கின் போனுக்கு, "உன் மனைவியை என்னால் மறக்க முடியவில்லை" என மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இதனால் திவேக், தங்கமலர் ஆகியோர் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

காயம் அடைந்த விவேக்
காயம் அடைந்த விவேக்

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு விவேக் பைக்கில் தங்கமலரைப் பார்க்க, அவரது வீடு இருக்கும் பகுதியில் சுற்றி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட திவேக்கும் அவரது மனைவி தங்கமலர் மற்றும் திவேக்கின் உறவினரான தெற்குசூரங்குடி அருகே உள்ள கீழமாவிளையைச் சேர்ந்த சுயம்புலிங்கம் (32) ஆகியோர் காரில் விவேக்கைப் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

விவேக் பறக்கை அருகே உள்ள திருநகர் சந்திப்பில் சென்று கொண்டிருக்கும் போது அவரது பைக் மீது காரால் மோதியுள்ளனர். கீழே விழுந்த விவேக்கை அனைவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டியுள்ளனர்.

தங்கமலர் அவரது கணவர் திவேக்
தங்கமலர் அவரது கணவர் திவேக்

இதில் விவேக்கிற்குப் பின் தலை, கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்ததையடுத்து திவேக் உள்ளிட்டவர்கள் தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த விவேக்கை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User