தமிழ்நாட்டைச் சுற்றிப் பார்க்க பாஸ்போர்ட் வந்தாச்சு! – ஸ்பெஷலான 'Philately Passport' பற்றி தெரியுமா?
பாஸ்போர்ட் என்றாலே வெளிநாட்டுப் பயணம் என்பதுதான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். ஆனால், ஒரு பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் வரலாறு, பாரம்பர்யம் மற்றும் சுற்றுலாத் தலங்களை வித்தியாசமான முறையில் அனுபவிக்கலாம் என்றால்..? அந்த அனுபவத்தையே உருவாக்கியிருக்கிறது இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ள 'பிலாட்டலி பாஸ்போர்ட்' (Philately Passport).
இந்தியாவில் இந்த முயற்சி முதன்முதலில் கர்நாடகா அஞ்சல் வட்டம் (Karnataka Postal Circle) மூலம் 2026-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பாரம்பர்ய இடங்கள், தபால் தலை சேகரிப்பு மற்றும் சுற்றுலா ஆகிய மூன்றையும் இணைத்த இந்த முயற்சிக்கு எதிர்பாராத அளவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. குறுகிய காலத்திலேயே ஆயிரக்கணக்கான பிலாட்டலி பாஸ்போர்ட்டுகள் விற்பனையானது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.

தமிழ்நாடு அஞ்சல் வட்டம், 2026 அக்டோபர் 28-ஆம் தேதி இந்த பிலாட்டலி பாஸ்போர்ட்டை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் உள்ள Philatelic Bureau-களில் ஒரே நேரத்தில் இது விற்பனைக்கு வந்தது. அறிமுகமான முதல் நாளிலேயே தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் தபால் தலை சேகரிப்பாளர்கள் இந்த பாஸ்போர்ட்டை வாங்க வரிசையில் நின்றது இந்த முயற்சிக்கு கிடைத்த வரவேற்பை காட்டியது.
இது வெளிநாடு செல்லும் பாஸ்போர்ட் அல்ல. மாறாக, தமிழ்நாட்டின் முக்கியமான பாரம்பர்ய மற்றும் சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்க்க ஊக்குவிக்கும் நினைவுப் பதிவு. தற்போது தமிழ்நாட்டில் 58 Permanent Pictorial Cancellations (PPC) உள்ளன. ஒவ்வொரு இடத்திற்கும் அந்தப் பகுதியின் அடையாளத்தை பிரதிபலிக்கும் தனித்துவமான அஞ்சல் முத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்குச் சென்று, அங்குள்ள தபால் நிலையத்தில் அந்த சிறப்பு அஞ்சல் முத்திரையை பிலாட்டலி பாஸ்போர்ட்டில் பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு 58 இடங்களையும் சுற்றிப் பார்த்து, 58 அஞ்சல் முத்திரைகளையும் சேகரிப்பதே இந்த பாஸ்போர்ட்டின் சிறப்பு.
ஒரு காலத்தில் தபால் தலை சேகரிப்பு என்பது பள்ளி மாணவர்களின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்காக இருந்தது. காலப்போக்கில் அந்தப் பழக்கம் குறைந்துவிட்டது. அந்த ஆர்வத்தை மீண்டும் உயிர்ப்பிக்கவும், அதே நேரத்தில் மக்களை மாநிலத்தின் பாரம்பர்யச் சின்னங்கள், கோயில்கள், வரலாற்று இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை நேரில் சென்று பார்க்க ஊக்குவிக்கவும் இந்திய தபால் துறை இந்த புதிய முயற்சியை உருவாக்கியுள்ளது.

புகைப்படங்களை எடுத்துக்கொண்டு பயணத்தை நினைவில் வைத்துக்கொள்வது இன்று வழக்கமாகிவிட்டது. ஆனால், அதிகாரபூர்வ அஞ்சல் முத்திரைகளைச் சேகரித்து, ஒரு மாநிலத்தை முழுமையாகச் சுற்றிப் பார்த்ததற்கான நினைவுச் சின்னமாக வைத்துக்கொள்வது முற்றிலும் புதிய அனுபவம். அதனால்தான் பிலாட்டலி பாஸ்போர்ட் என்பது வெறும் தபால் தலை சேகரிப்பாளர்களுக்கான புத்தகம் மட்டுமல்ல; பயணம், வரலாறு, கலாசாரம் மற்றும் நினைவுகளை ஒரே இடத்தில் இணைக்கும் ஒரு புதிய சுற்றுலா முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
சுற்றுலா என்பது இடங்களைப் பார்ப்பதற்காக மட்டுமல்ல, அந்த இடங்களின் கதைகளையும் சேகரிப்பதற்காகவும் என்பதை நினைவூட்டும் முயற்சியாக இந்த பிலாட்டலி பாஸ்போர்ட் அமைந்துள்ளது. வெளிநாடு செல்லாமல், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையையும் புதிய பார்வையில் அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இது நிச்சயமாக ஒரு வித்தியாசமான பயண அனுபவமாக இருக்கும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)