"6 பேரில் நானும் ஒருத்தி... ஏதாவது நடந்தால் பாஜக அரசுதான் பொறுப்பு"- மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

May 04, 2026 - 07:31
0
"6 பேரில் நானும் ஒருத்தி... ஏதாவது நடந்தால் பாஜக அரசுதான் பொறுப்பு"- மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் இருந்தபோது, அவர் மீது இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக், சுமித் மல்லிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட முக்கிய மல்யுத்த வீராங்கனைகள் 2023-ம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதைத் தொடர்ந்து அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து ராஜினமா செய்ய வைக்கப்பட்டார். ஆனால், அவர்மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்

இந்த நிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் கோட்டையாகக் கருதப்படும் கோண்டா மாவட்டத்தின் நந்தினி நகரில், மே 10 முதல் 12 வரை நடைபெறவுள்ள 2026 சீனியர் ஓபன் தரவரிசைப் போட்டி நடக்கவிருக்கிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ள வினேஷ் போகத், நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``இப்போட்டி பிரிஜ் பூஷன் சிங் வசிக்கும் இடத்திலேயே போட்டி நடத்தப்படுகிறது. அங்கு அவருக்குச் சொந்தமான ஒரு தனியார் கல்லூரி உள்ளது. அங்கு மல்யுத்த வீரர்களுக்கு நியாயமான வாய்ப்பு கிடைக்கும் என்று நினைப்பது சாத்தியமற்றது.

எந்த நடுவர் எந்தப் போட்டியை வழிநடத்துவார், எத்தனை புள்ளிகள் வழங்கப்படும், யார் 'மேட் சேர்மன்' (போட்டித் தளத் தலைவர்) ஆக அமர்வார்கள், யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வியடைவார்கள் என அனைத்தையும் அவரது ஆட்களே கட்டுப்படுத்த முடியும்.

ஆனால் நமது அரசும் விளையாட்டுத் துறையும் இவற்றை ஊமைச் சாட்சிகளாக வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கின்றன.

எடை சரிபார்ப்பு (weigh-in) முறையாக நடைபெறுமா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது. மல்யுத்த வீரர்களுக்குப் போட்டித் தளத்தில் நியாயமான முடிவுகள் கிடைக்குமா?

வினேஷ் போகத்
வினேஷ் போகத்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகக் குரல் கொடுத்தோம். ஆறு பெண் மல்யுத்த வீராங்கனைகள் புகார்களைப் பதிவு செய்தனர். தற்போது சாட்சிகள் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்று உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன. இருப்பினும், சில தவிர்க்க முடியாத நிர்ப்பந்தங்களின் காரணமாகவே நான் இதை இப்போது வெளிப்படையாகக் கூற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

நீதிமன்ற வழக்கு இன்னும் நடைபெற்று வருவதாலும், உண்மை விரைவில் வெளிவரும் என்பதாலும், நான் இப்போது இதைச் சொல்ல விரும்பவில்லை என்றாலும், பிரிஜ் பூஷனுக்கு எதிராகப் புகாரளித்த அந்த ஆறு பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி.

ஒரு விளையாட்டு வீராங்கனையாக, நாங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற பெரும் அழுத்தம் எங்களுக்கு உள்ளது. மேலும் அங்கு என்னால் எனது 100 சதவீதத்தை வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது.

இந்தச் சூழ்நிலைகளில் ஒரு பெண் சிறப்பாகச் செயல்படுவது மிகவும் கடினம். இன்றும் கூட, மல்யுத்தக் கூட்டமைப்பின் மீது தனக்கு அதிகாரம் இருப்பதாக பிரிஜ் பூஷன் கூறுகிறார். அவர் தனது சொந்த ஆட்களை அங்கு நியமித்துள்ளார். அவர் அதை வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

WFI தலைவர் சஞ்சய் சிங் - பிரிஜ் பூஷன் சரண் சிங்
WFI தலைவர் சஞ்சய் சிங் - பிரிஜ் பூஷன் சரண் சிங்

ஆனால் அரசாங்கமோ அல்லது விளையாட்டு அமைச்சகமோ நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. நான் எனது அணி மற்றும் நலம் விரும்பிகளுடன் போட்டிக்குச் சென்று, எங்களுக்கு ஏதேனும் விரும்பத்தகாத சம்பவம் நேர்ந்தால், அதற்கு இந்திய அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்'' என்றார்.

இதற்கிடையில், நடுவர் பணி குறித்த வினேஷ் போகத் கவலைகள் குறித்து WFI தலைவர் சஞ்சய் சிங், ``நடுவர்களிடமிருந்து யாருக்கும் சிறப்புச் சலுகை கிடைப்பதில்லை. எங்களிடம் நல்ல மற்றும் நேர்மையான நடுவர்கள் அடங்கிய குழு உள்ளது.

தனக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற வினேஷ் போகத் கூற்றைப் பொறுத்தவரை, போட்டியின் போது அவருக்கு எதுவும் நடக்காமல் நான் தனிப்பட்ட முறையில் உறுதி செய்வேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User