``அவர் குற்றவாளி, ட்ரக் அடிக்ட்; உண்மை தெரியாம பேசாதீங்க!" - கணவர் குறித்து வீடியோ வெளியிட்ட பெண்

Jun 07, 2026 - 14:31
0
``அவர் குற்றவாளி, ட்ரக் அடிக்ட்; உண்மை தெரியாம பேசாதீங்க!" - கணவர் குறித்து வீடியோ வெளியிட்ட பெண்

பட்டுக்கோட்டை மயில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்கிற தர்மராஜ் (38). இவரது மனைவி அட்சயா (25) இவர்களுக்கு நான்கு வயதில் மகன் உள்ளார். ராஜா தன் மனைவி குறித்து சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோ வைரலானது. `என்னுடைய மனைவியை வெட்டி விட்டேன், என் மகனை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்' என்கிற ரீதியில் அந்த வீடியோவில் ராஜா பேசியிருந்தது, பார்த்தவர்களை பதைபதைப்புக்கு ஆளாக்கியது.

வீடியோ வெளியிட்ட பிறகு கைது செய்யப்பட்ட ராஜா

இது குறித்து பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து பதிவிட்டனர். மேலும் இவர்கள் நிலை குறித்து தவறான தகவலும் பரவியது. அட்சயா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், ராஜாவையும் அவருடன் இருக்கும் மகனையும் பாதுகாப்பாக மீட்பதற்காக உடனடியாக களத்தில் இறங்கியது தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் டீம். இதையடுத்து பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு வல்லம் பகுதியில் இருந்த ராஜாவை போலீஸார் கைது செய்தனர். அவரது மகனை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய ராஜா, அட்சயா இவர்களது மகன் மூவரும் நலமாக இருப்பதாகவும் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

ராஜா, அட்சயா விவகாரம் கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து பேசு பொருளானது. இந்த சூழலில் அட்சயா தன் கணவன் ராஜா குறித்து பேசி நேற்று வெளியிட்ட வீடியோவும் வைரலானது. அதில், ஷோஷியல் மீடியாவில் பரவும் வீடியோ எதுவும் இப்ப எடுத்தது கிடையாது. 2025 ஏப்ரல் மாதம் எடுத்தது. இந்த வீடியோவை தப்பா யூஸ் பண்ணக் கூடாது, ஷோஷியல் மீடியாவில் போடக் கூடாது என்று போலீஸ் தரப்பில் தெரிவித்திருந்தனர். நான் வேலைக்கு செல்லக் கூடாது என்பதற்காக நான் தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு வந்து பிரச்னை செய்தார். எனக்கு மொட்டை அடித்தார். அந்த புகாரில் கூட இந்த வீடியோவை காட்டி அனுதாபத்தை தேடி அவர் பக்கம் நியாயம் இருப்பது போல் காட்டினார். நான் ஸ்லீவ் லெஸ் ட்ரெஸ் போட்டிருந்தேன் இல்லைனு சொல்லலை. பழைய வீடியோவை தப்பா யூஸ் பண்ணியிருக்கார்.

அட்சயா

அவர் மீது திருட்டு வழக்கு உள்ளது. கஞ்சா பழக்கம் உள்ளது. தவறான பழக்கத்தால் அடிக்கடி சைக்கோ மாதிரி நடந்து கொள்வார். அந்த நேரத்தில் யாரும் அவரை கன்ட்ரோல் பண்ண முடியாது. எங்களை பயங்கரமா அடிப்பார். சிகரெட்டால் சூடு வச்சி கொடுமை படுத்தியிருக்கார். அதனால் தான் ஒரு வருடமாக நான் பிரிஞ்சி இருந்தேன். சேர்ந்து வாழ்வதற்காக பட்டுக்கோட்டையில் வீடு எடுத்தேன். ஆனால் ஜூன் 3ம் தேதி வீட்டுக்கு வந்து என்னை வெட்டி விட்டு அனுதாபம் தேடுற மாதிரி வீடியோ போட்டார். அவர் ஒரு குற்றவாளி, ட்ரக் அடிக்ட், எங்களை கொடுமை படுத்துவார்.

வீடியோவை ஷேர் செய்யுறவங்க உண்மையை தெரிந்து கொண்டு செய்யுங்கள். அவர் மேல் அனுதாபம் இருந்தால் என் பக்கம் உள்ள நியாயத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். அவர் நல்லவர் கிடையாது. தான் தப்பிப்பதற்கு பழைய வீடியோவை மேட்ச் செய்து போட்டுள்ளார் என்று பேசியிருக்கிறார். இந்த வீடியோவும் வைராகி வருவது குறிப்பிடத்தக்கது. ராஜாவின் நண்பர்கள் ராஜாவை அவன் நல்லவன் என்று பேசி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். ``ராஜா, அட்சயா இருவருமே பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இரு குடும்பத்தினரும் பேசி முடித்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். ராஜா சென்னையில் டிரைவர் வேலை செய்து வந்தார். பி.ஏ படித்திருந்த தன் மனைவி அட்சயாவை பியூட்டி பார்லர் கோர்ஸில் சேர்த்து கற்றுக்கொள்ள வைத்தார். பின்னர் திருச்சியில் உள்ள பிரபல பியூட்டி பார்லர் ஒன்றில் மேக்கப் ஆர்டிஸ்டாக வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார்.

ஹாஸ்டலில் தங்கியிருந்தபடி அட்சயா வேலை செய்துள்ளார். அவ்வப்போது ராஜா திருச்சிக்கு வந்து சென்றுள்ளார். இந்த சூழலில் ஆண் நண்பர் ஒருவருடன் அட்சயாவிற்கு பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்க போலீஸ் புகார் வரைச் சென்றுள்ளது. கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக கடந்த வாரம் பட்டுக்கோட்டையில் அட்சயா வாடகைக்கு வீடு எடுத்து வந்துள்ளார். அதன் பிறகு தான் ராஜா அட்சயாவை தாக்கி விட்டு தலைமறைவாகி விட்டார். போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டது. ராஜா மீது டாஸ்மாக் திருட்டு வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் உள்ளது. சம்பவத்திற்கு பிறகு அவருக்கு அடைக்கலம் கொடுத்த நண்பர் மீதும் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது" என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User