சிறுமிக்கு லாரியில் நேர்ந்த பாலியல் அத்துமீறல் - கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது

May 24, 2026 - 13:32
0
சிறுமிக்கு லாரியில் நேர்ந்த பாலியல் அத்துமீறல் - கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி தனது தாயுடன், வந்தவாசி பகுதியிலுள்ள தர்காவுக்குச் சென்றுள்ளார். தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடன் தர்காவிலேயே தங்கினார். இந்த நிலையில், அங்குவந்திருந்த ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பாத்திமா (25), அவரின் கணவனும் லாரி ஓட்டுநருமான இம்ரான்பாஷா (28), இவரின் கிளீனர் அஜ்மல் பாஷா (27) ஆகியோர் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்திருக்கின்றனர். அப்போது, `பெங்களூருவில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு போகணும்’ என்று சிறுமி கூறியதாக தெரிகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட லாரி

இதையடுத்து, சிறுமியை பெங்களூரு அழைத்துசெல்வதாக கூறி, பாத்திமா தன்னுடன் ஆற்காடுக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கிருந்து லாரி மூலமாக அவரின் கணவன், கிளீனர் ஆகியோருடன் அனுப்பி வைத்திருக்கிறார். இந்த இருவரும் லாரியில் சிறுமியை அழைத்துசென்றபோது, சிறுமியிடம் பாலியில்ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டிருக்கின்றனர். பின்னர், நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

பொதுமக்களால் மீட்கப்பட்டு, மகளிர் பாதுகாப்பு இல்ல விடுதியில் தங்க வைக்கப்பட்ட சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. விடுதி கண்காணிப்பாளர் உடனடியாக சிறுமியை மீட்டு பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். அங்கு பரிசோதனை செய்தபோதுதான் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதையடுத்து, பெங்களூரு போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 3 பேர்

அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு வந்தவாசி காவல் நிலையத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸார் `போக்சோ’ சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து, பாத்திமா, அவரின் கணவன் இம்ரான்பாஷா, கிளீனர் அஜ்மல் பாஷா ஆகிய 3 பேரையும் கைது செய்திருக்கின்றனர். லாரியையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User