`காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்' - தமிழக அரசு

Jun 05, 2026 - 17:32
0
`காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்' - தமிழக அரசு

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்டில்களையும், மது பாட்டில்களையும் துாக்கி வீசுவதால் வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.

இதை தடுக்கும் விதமாக, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்து, காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில், 10 ரூபாயை திருப்பி தரும் வகையிலான திட்டத்தை அமல்படுத்தும்படி, சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது.

டாஸ்மாக்

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தில் மூன்று மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த திட்டத்தை முழுமையாக மாற்றியமைக்க இருப்பதாகவும், காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் பணியில் டாஸ்மாக் ஊழியர்களை ஈடுபடுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும் என குறிப்பிட்டார்.

அப்போது நீதிபதிகள், `காலி பாட்டில்களை திரும்பப்பெறும் வகையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கும்போது, அதை ரசீதில் குறிப்பிட வேண்டும் என்றும், 10 ரூபாய் கூடுதலாய் வசூலிப்பது என்பது வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணத்தை வசூலிப்பதற்கான உரிமமாக எடுத்துக்கொள்ளக் கூடாது' என தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், `இந்த அரசு ஊழலை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது' என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பாக 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், மாற்றியமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் வழக்கை ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User