தேர்தல் களம்: `விஜயகாந்த் டு விஜய்' தமிழ்நாட்டில் 'மூன்றாம் அணி' வெற்றி சாத்தியமா? - ஓர் அலசல்!

Mar 12, 2026 - 16:00
 0
தேர்தல் களம்: `விஜயகாந்த் டு விஜய்' தமிழ்நாட்டில் 'மூன்றாம் அணி' வெற்றி சாத்தியமா? - ஓர் அலசல்!

தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு துருவ அரசியலைத் தாண்டி ஒரு 'மூன்றாம் அணி' அமைவதற்கான முயற்சிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன. விஜயகாந்தின் தேமுதிக (2006), மக்கள் நலக் கூட்டணி (2016), கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (2019, 2021) சீமானின் நாம் தமிழர் எனத் தொடங்கி தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எனப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அவை இன்னும் பெரிய வெற்றியை பதிவு செய்யவில்லை.

ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் விஜயகாந்த்
ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் விஜயகாந்த்

இரு பெரும் கட்சிகளுக்கு இருக்கும் வாக்கு வங்கி, மக்களின் வெற்றி பெறும் கட்சிக்கே வாக்கு என்ற மனநிலை, ஒற்றுமை இல்லா மூன்றாம் அணி, நிதி கட்டமைப்பில் சறுக்கல் எனப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக விரிவாக விவாதிக்க மூத்த ஊடகவியலாளர் ப்ரியனிடம் பேசினோம்.

'மூன்றாம் அணிக்கான தேவை என்பதைக் கடந்து அதை சாத்தியமாக்கும் அரசியல் தலைவரை தமிழ்நாடு இன்னும் பார்க்கவில்லை' எனப் பேசத் தொடங்கியவர் விரிவாக விளக்கினார்.

``தமிழக அரசியல் வரலாறு என்பது ஆளுமை மிக்க தலைவர்களைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் மக்களைத் தங்கள் பக்கம் ஈர்த்து வைத்திருந்தனர். "இவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரைத் தேர்வு செய்யலாம்" என்ற இருமுனைத் தேர்விலேயே மக்கள் இருந்தனர்.

விஜயகாந்த் ஒரு மாற்றாக வர முயன்றாலும், தொடக்கத்திலேயே அவர் ஒரு ஆளுமை மிக்க தலைவராக மக்களால் முழுமையாகப் பார்க்கப்படவில்லை. மேலும், 2011-ல் அவர் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தது, அவரது தனித்துவமான அரசியல் பயணத்தில் பெரிய சரிவை ஏற்படுத்தியது. அதன் பின்னரே அவர் மாற்று அணியைத் தேடிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ப்ரியன்
ப்ரியன்

ஒரு மூன்றாம் அணி வெற்றி பெற வேண்டுமானால், அந்த அணியைத் தலைமை தாங்கும் முதன்மைக் கட்சிக்குக் குறைந்தபட்சம் 20 சதவீத தனிப்பட்ட வாக்கு வங்கி இருக்க வேண்டும் என்பது அரசியல் நிபுணர்களின் கணக்கு. தமிழகத்தில் நான்கு முனைப் போட்டியில் ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்றால் குறைந்தது 31% முதல் 32% வாக்குகள் தேவை. 1977-ல் ஜனதா, காங்கிரஸ், தி.மு.க எனப் பலமுனைப் போட்டி இருந்தாலும் எம்.ஜி.ஆர் 31 சதவீத வாக்குகளைப் பெற்றுத்தான் ஆட்சி அமைத்தார்.

ஆனால், தமிழகத்தில் இன்றுள்ள விஜய் உட்பட எந்த மாற்றுக் கட்சிக்கும் 20% வாக்குகள் இருப்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. விஜயகாந்த் உச்சத்தில் இருந்தபோது கூட 10 சதவீத வாக்கைத் தாண்டவில்லை. மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் ஒற்றை இலக்க சதவீதத்திலேயே (4-5%) சுருங்கிவிட்டன. எனவே ஒரு கூட்டணியை முன்னெடுக்கும் கட்சிக்கு குறைந்தபட்சம் 20% வாக்கு இருந்தால் மட்டுமே, பிற சிறிய கட்சிகளின் வாக்குகளைச் சேர்த்து வெற்றி இலக்கான 32 சதவீதத்தை நெருங்க முடியும்.

மக்கள் நலக் கூட்டணி
மக்கள் நலக் கூட்டணி

வலுவான வாக்கு வங்கி இல்லாத ஒரு மூன்றாம் அணி, தேர்தலில் வெற்றி பெறுவதற்குப் பதிலாக, பெரிய கட்சிகளின் வெற்றியைத் தடுக்கும் 'ஸ்பாய்லராக' மட்டுமே மாறுகிறது. 2014-ல் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 18-19% வாக்குகளைப் பெற்று தி.மு.கவின் வெற்றியைப் பாதித்தது. 2016-ல் மக்கள் நலக் கூட்டணி பிரித்த வாக்குகள், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியின் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. அதாவது, இவர்கள் ஜெயிக்கவில்லை என்றாலும், யாராவது ஒருவரைத் தோற்கடிக்கும் காரணியாகவே முடிகிறார்கள்.

தமிழகத்தில் 110 ஆண்டுகால திராவிட இயக்க வரலாறு உள்ளது. விஜய் போன்றவர்கள் கூட பெரியாரை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வது, திராவிடக் கொள்கைகள் இல்லாமல் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்பதையே காட்டுகிறது. எனவே, தமிழகத்தில் திராவிடம் சாராத ஒரு சித்தாந்தத்திற்கு மக்கள் இன்னும் தயாராகவில்லை. தி.மு.க, அ.தி.மு.க பிடிக்காதவர்கள் சிலர் இந்துத்துவத்தை நோக்கி நகர்ந்தாலும், அது திராவிட இயக்கங்களின் அடிப்படை வாக்குகளை இன்னும் பறிக்கவில்லை.

மேலும், இளைஞர்கள் அனைவரும் விஜய் அல்லது சீமான் பின்னால் தான் இருக்கிறார்கள் என்பது ஒரு மாயை. தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளில் லட்சக்கணக்கான இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளனர். அதே நேரம், சீமான், விஜய்க்கு பின்னால் ஒருபகுதி இளைஞர்கள் ஆதரவு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

பேரறிஞர் அண்ணா - பெரியார்
பேரறிஞர் அண்ணா - பெரியார்

ஒருவேளை விஜய் மற்றும் சீமான் இணைந்தால் 'மூன்றாம் அணி' உருவாகுமா என்ற கோணத்திலு யோசித்தாலும், அவர்கள் இணைவதற்கு சாத்தியமில்லை. அவர்களுக்குள் இருக்கும் தத்துவார்த்த முரண்பாடு மிகப்பெரிய தடையாக இருக்கும். சீமான் 'பெரியாரே ஒரு மண்ணு' என்று விமர்சிக்கும் நிலையில், விஜய்யோ பெரியாரைத் தனது கொள்கைத் தலைவராக அறிவித்துள்ளார். இத்தகைய முரண்பாடுகள் இருக்கும்போது, அவர்கள் இணைவது சற்றுக் கடினம்.

ஒரு வேளை மூன்றாம் அணி என்ற ஒன்று உருவானால், தேர்தல் காலங்களில் பெரிய கட்சிகள் செலவிடும் பணத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் போவது சிறிய கட்சிகளின் பெரும் பலவீனம். ஆர்.கே. நகரில் தினகரன் வென்றது ஒரு விதிவிலக்கு என்றாலும், தனித்துவமான கொள்கையுடன் வரும் சிறிய கட்சிகளால் இந்தச் செலவுகளைச் சமாளிக்க முடிவதில்லை.

விஜய் - சீமான்
விஜய் - சீமான்

எனவே, தமிழக அரசியலில் ஒரு மாற்று சக்தியை உருவாக்க நினைக்கும் எந்தவொரு புதிய முயற்சியும், வெறும் கவர்ச்சிகரமான பேச்சுகளாலோ அல்லது தனிநபர் செல்வாக்காலோ மட்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட முடியாது என்பதை கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது. திராவிட இயக்கங்கள் ஒரு நூற்றாண்டு காலமாக மக்களிடம் கொண்டு சேர்த்துள்ள சமூக நீதிச் சித்தாந்தம் மற்றும் ஒவ்வொரு குக்கிராமம் வரை நீண்டுள்ள அவர்களின் கிளைக் கழகக் கட்டமைப்பை உடைப்பது என்பது அத்தனை எளிதான காரியமல்ல.

ஒரு 'மூன்றாம் அணி' வெற்றிகரமான 'மாற்று சக்தியாக' உருவெடுக்க வேண்டுமென்றால், அது வெறும் 'வாக்குகளைப் பிரிக்கும்' கருவியாக இல்லாமல், மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் 'வெற்றி பெறும்' கூட்டணியாக மாற வேண்டும். அதற்கு அக்கூட்டணியை வழிநடத்தும் தலைமைக்கு 20 சதவீதத்திற்கும் மேலான உறுதியான வாக்கு வங்கியும், தெளிவான சித்தாந்தப் பார்வையும், பெரிய கட்சிகளின் தேர்தல் இயந்திரத்திற்கு ஈடுகொடுக்கும் பலமும் அவசியம்."

எனத் தீர்க்கமாக பேசி முடித்தார்.

2026-ல் உருவாகும் புதிய அரசியல் சூழல்கள், தமிழகம் இரு துருவ அரசியலிலேயே நீடிக்குமா அல்லது ஒரு புதிய அரசியல் அத்தியாயம் தொடங்குமா என்பதைத் தீர்மானிக்கும். பொருத்திருந்து பார்ப்போம்!!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0