எல்-நினோ தாக்கம்... அதிகரிக்கும் மாரடைப்பு நிகழ்வுகள்! - பாதுகாத்துக்கொள்வது எப்படி? | El Nino

Jun 09, 2026 - 18:00
0
எல்-நினோ தாக்கம்... அதிகரிக்கும் மாரடைப்பு நிகழ்வுகள்! - பாதுகாத்துக்கொள்வது எப்படி? | El Nino

பொதுவாக குளிர்காலத்தில் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் அதிகமாக ஏற்படும் என்கின்றன புள்ளி விவரங்கள். ஆனால் சமீபமாக கோடைக்காலத்திலும் இந்த பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கோடையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன, அதைத் தடுப்பது எப்படி என்று விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த இதய மருத்துவர் அஃப்ரீன் ஹாஜா மொய்தீன்.

மாரடைப்பு

குளிர்காலத்தில் ரத்தக்குழாய் சுருங்குவதினால் மாரடைப்பு நிகழ்வுகள் ஒப்பீட்டளவில் கோடையைவிட அதிகம் பதிவாகும். ஆனால் கடந்த 5-6 ஆண்டுகளின் தரவுகளைப் பார்த்தால், கடுமையான கோடை காலத்திலும் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அதிக வெயிலுக்கும் மாரடைப்புக்கும் இருக்கக்கூடிய தொடர்பு என்னவென்றால் முதலில் நீர்ச்சத்து குறைவதுதான். அதிகமாக வியர்வை வெளியேறுவதன் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறையும்போது ரத்தம் கெட்டியாகும். இதனைத்தான் ரத்த உறைவு (Blood clot) என்போம்.

கோடை காலத்தில் சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துகளும் குறைந்து எலக்ட்ரோலைட் இம்பேலன்ஸ் ஏற்பட்டு இதயத் துடிப்பு மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ரத்த அழுத்த சமநிலையின்மை ஏற்படலாம். வெயிலில் நீண்ட நேரம் இருந்துவிட்டு, திடீரென்று ஏசி அறைக்குள் போகும்போது ரத்தக்குழாய் சுருங்கி விரிவதால், ரத்த அழுத்த சமநிலையின்மை ஏற்படும். உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அதீத வெப்பத்தால் உடல்நிலை பாதிப்பு

அதிக வெப்பம், புழுக்கத்தின் காரணமாக இரவில் தூக்கமின்மை ஏற்படும்போது, மனஅழுத்த ஹார்மோன் என்று சொல்லக்கூடிய கார்டிசோலின் அளவு அதிகரித்துக்கொண்டே போய், இயத்துக்கு அதிக பளுவை ஏற்படுத்தி மாரடைப்பு ஏற்பட காரணமாக மாறலாம். இந்த ஆண்டு வெப்ப அலை அதிகமாக இருக்கும் என்பதால், இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கையின்படி, 40 டிகிரி செல்சியஸை அதிகரிக்கும்போது இதயம் சார்ந்த அவசரங்கள் (Cardiac emergency) 12 முதல் 15 சதவிகிதம் அதிகரித்து வருகின்றன.

காபியைக் குறைங்க!

பசிபிக் பெருங்கடலில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையான எல்-நினோ வருவதால், அக்டோபர் மாதம் வரை வழக்கத்தைவிட வெயில் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மிகவும் அவசியம் அல்லது அவசரம் என்றால் வெளியே செல்லும்போது குடை, தொப்பி பயன்படுத்த வேண்டும்.

காபி

குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. குறிப்பாக ORS, மோர், இளநீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு வெயில் நேரத்தில் மாத்திரையின் அளவில் மாற்றம் தேவைப்படலாம். எனவே, மருத்துவரிடம் சென்று மாதம் ஒருமுறை செக் அப் செய்துகொள்வது நல்லது. மது, காபி பழக்கங்களை முடிந்த அளவு குறைத்துக்கொள்ள வேண்டும். இவை உடலிலுள்ள நீர்ச்சத்தை அதிக அளவில் குறைக்கும் தன்மை கொண்டது.

வீட்டிலும் ஜாக்கிரதை!

வீட்டுக்குள் இருந்தாலும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மின்விசிறி இல்லாத, காற்றோட்டம் இல்லாத, புழுக்கமான அறைகளில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ரத்தக்குழாய் அடைப்பு, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், சக்கரை நோய், உடல் பருமன், போன்றவையும் மாரடைப்புக்கு பங்களிக்கலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். காற்று மாசு, கோடையில் ஓசோனின் தாக்கம் போன்றவற்றாலும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்கள், சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள், வெயிலில் அன்றாடம் வேலை செய்யக்கூடியவர்கள், ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள் போன்றவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

இதய மருத்துவர் அஃப்ரீன் ஹாஜா மொய்தீன்

ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள்...

குறிப்பாக ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்கள், இரண்டாம் நிலை தடுப்பு என்று சொல்லக்கூடிய 'Secondary prevention'-ஐ சரியாகப் பின்பற்றவில்லை என்றால் மீண்டும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 20 சதவிகிதம் உள்ளது. குறிப்பாக, வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை நிறுத்திவிட்டால் மூன்று மடங்கு ரிஸ்க். கோடை காலத்தில் மாரடைப்பு அதிகரிப்பதற்கு மன உளைச்சலும் காரணமாகலாம். வெயில், வெப்பம் என்பதே எரிச்சல் தரும் விஷயம்தான். அதன் காரணமாக தூக்கம் கெட்டால் மன அழுத்தம் இன்னும் அதிகமாகும்.

கோடையில் மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க, தண்ணீர் தான் முதல் மருந்து. ஒரு மணி நேரத்துக்கு 250 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர் வெள்ளை நிறத்தில் வெளியேறுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வெயில் நேரத்தில் அதீத உடற்பயிற்சி வேண்டாம். தளர்வான காட்டன் உடைகள் உடுத்தலாம். கறுப்பு நிற ஆடைகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.

சிறுநீர் பெருக்கியான டையூரிடிக் (Diuretic) மாத்திரைகள், ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகள் சில நேரங்கள் நீர்ச்சத்து இழப்பை ஏற்படுத்தலாம் என்பதால், அத்தகைய மாத்திரைகள் எடுத்துக்கொள்வபர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். நெஞ்சு கனம், இடது கை வலி, வியர்வை, வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனே செல்லவும். அல்லது அவசர உதவிக்கு தமிழக அரசின் 108 ஹெல்ப்பைனை தொடர்பு கொள்ள வேண்டும்.

108 ஆம்புலன்ஸ்

முதியோர் வீட்டில் தனியாக இருக்கிறார்கள் என்றால், அடிக்கடி போன் செய்து தண்ணீர் குடிக்க அறிவுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இதயம் அல்லது சுவாசம் நின்றுவிட்டவர்களுக்கு அளிக்கக்கூடிய, கார்டியோ பல்மனரி ரெசசிடேஷன் (Cardio pulmonary resuscitation-CPR) முதலுதவி பயிற்சியை வீட்டுக்கு ஒருத்தர் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்கிறார் மருத்துவர் அஃப்ரின்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User