`வயதென்பது தடையல்ல' - 50 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த ஜெமினி கணேசன் பேத்தி!

Jun 10, 2026 - 16:02
0
`வயதென்பது தடையல்ல' - 50 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த ஜெமினி கணேசன் பேத்தி!

சென்னையைச் சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் பிரியா செல்வராஜ், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம், வெறும் 7 மாதங்களுக்குள் 8,000 மீட்டருக்கும் அதிக உயரமுள்ள இரண்டு சிகரங்களில் வெற்றிகரமாக ஏறிய 50 வயதுக்கு மேற்பட்ட ஒரே இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

பிரியா செல்வராஜ் - ஜெமினி கணேசன் பேத்தி

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், தனது பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், கடும் குளிரால் தனது கைகளிலும் கால்களிலும் ஏற்பட்ட கடுமையான காயங்கள் மற்றும் கொப்புளங்களின் புகைப்படங்களையும் காட்டி, இந்த வெற்றியின் பின்னணியில் இருந்த போராட்டங்களை விவரித்தார்.

பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேத்தியான மருத்துவர் பிரியா, சென்னை ஜி.ஜி மருத்துவமனையின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

தினமும் நீண்ட நேர மருத்துவப் பணி, மருத்துவமனை நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் குடும்பக் கடமைகளுக்கு இடையே பல மாதங்கள் கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்து அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்கு முன்பாக, மனாஸ்லு, கிளிமஞ்சாரோ மற்றும் லோபுசே ஈஸ்ட் ஆகிய சிகரங்களையும் ஏறி தன்னை முழுமையாகத் தயார்படுத்திக்கொண்டார்.

பிரியா செல்வராஜ் - ஜெமினி கணேசன் பேத்தி

இந்தப் பயணத்தின் மூலம் வயது என்பது லட்சியங்களுக்கு ஒரு தடையே இல்லை என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரம் நம்முடைய மன உறுதியையும் உடல் வலிமையையும் முழுமையாகச் சோதிக்கும் என்றும், உண்மையான விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் இருந்தால் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் நாம் நினைத்த இலக்குகளை எட்ட முடியும் என்றும் மருத்துவர் பிரியா செல்வராஜ் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

- சுபிக்ஷா.ஆ, கலையரசி.மு

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User