வரதட்சணை கொடுமை: தாய், சகோதரர் முன்னிலையில் ஆசிட் குடித்த பெண் - திருமணம் முடிந்த ஓராண்டில் சோகம்

May 25, 2026 - 10:31
0
வரதட்சணை கொடுமை: தாய், சகோதரர் முன்னிலையில் ஆசிட் குடித்த பெண் -
திருமணம் முடிந்த ஓராண்டில் சோகம்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பதியடுக்கா பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் - சபியா தம்பதியரின் மகள் பாத்திமத் சுபைதா(24). பாத்திமத் சுபைதாவும் செங்களா பகுதியைச் சேர்ந்த ஆதில்(27) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு இரண்டு மாதமே ஆன ஒரு பச்சிளம் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஆதிலுக்கும் அவரது மனைவி பாத்திமத் சுபைதாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், சுபைதாவின் தங்க நகைகளைக் கேட்டு கணவர் வீட்டார் அவரைத் தொடர்ந்து மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும் விதமாக தனது தாய் மற்றும் சகோதரனை வீட்டுக்கு அழைத்துள்ளார் பாத்திமத் சுபைதா. ​கடந்த சனிக்கிழமை இரவு சுபைதாவின் தாய், சகோதரர் எம்.கே. அப்துல் வாசில் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆதிலின் வீட்டிற்கு சென்றனர். பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாமல் இருந்தால் சுபைதாவை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் அவர்கள் சென்றுள்ளனர்.

தற்கொலை
தற்கொலை

கணவர் வீட்டில் வைத்து இருதரப்பினரும் பேசிக்கொண்டிருந்தனர். பேச்சுவார்த்தைக்கு இடையே ஆதில் திடீரென தனது மனைவி சுபைதாவிடம் வாக்குவாதம் செய்ததுடன் அவரது மொபைல் போனைப் பிடுங்கி வீசி எறிந்துள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சுபைதா, வீட்டில் தரை கழுவவும், துருவை நீக்கவும் வைக்கப்பட்டிருந்த ஆசிடை எடுத்து திடீரென குடித்தார். பதறிப்போன உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சுபைதா பரிதாபமாக உயிரிழந்தார். ​வரதட்சணை கேட்டு கணவனும் அவரது குடும்பத்தினரும் சுபைதாவைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக அவரது சகோதரர் எம்.கே. அப்துல் வாசில் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, சந்தேகத்திற்கிடமான மரணம் என வழக்குப்பதிவு செய்த வித்யாநகர் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

தற்கொலை செய்துகொண்ட பாத்திமத் சுபைதா அவரது கணவர் ஆதிலுடன்

சுபைதாவின் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் ஆகியோரிடம் இருந்து வாக்குமூலங்களைச் சேகரித்த பின்னரே, கணவர் ஆதிலை போலீசார் கைது செய்தனர். ​ஆதில் மற்றும் பாத்திமத் சுபைதா ஆகியோரின் காதல் திருமணம் நடந்து இன்றுடன் சரியாக ஓராண்டு நிறைவடைகிறது.

முதலாவது திருமண நாள் அன்று இளம் பெண்ணுக்கு இந்த துயரம் நிகழ்ந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியருக்கு இடையே திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து தகராறுகள் ஏற்பட்டு வந்ததாகவும், இதன் காரணமாகப் பலமுறை அந்த இளம்பெண் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்ததாகவும் வித்யாநகர் இன்ஸ்பெக்டர் எம்.பி. வினீஷ் குமார் தெரிவித்தார். இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

தற்கொலை தடுப்பு மையம்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User