``'வாட்ஸ்அப் பல்கலைக்கழக' பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாம்" - எம்.பி கனிமொழி எச்சரிக்கை!

May 20, 2026 - 15:31
0
``'வாட்ஸ்அப் பல்கலைக்கழக' பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாம்" - எம்.பி கனிமொழி எச்சரிக்கை!

கோயம்புத்தூரில் நடைபெற்ற சுயமரியாதை திருமண விழாவில் தி.மு.க எம்.பி கனிமொழி கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். அந்த உரையில், ``50 அல்லது 100 ஆண்டுகளுக்கு முன்பு சாதியக் கட்டுப்பாடுகளாலும், பெண்ணடிமைத்தனத்தாலும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத கல்வி உரிமையையும், வேலைவாய்ப்புத் சுதந்திரத்தையும் இன்று இந்தத் தம்பதியர் பெற்றுள்ளனர். படிக்கக் கூடாது என்று சாதியின் பெயராலும், பெண்ணாகப் பிறந்துவிட்டாய் என்று பாலினத்தின் பெயராலும் ஒடுக்கப்பட்ட சிந்தனைகளை உடைத்தெறிய தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் பல தலைமுறைகளாகப் போராடியுள்ளனர்.

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

ஒரு காலத்தில் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு எதிராக ஓங்கிய பெரியார் தடி, பகுத்தறிவுச் சிந்தனையோடு அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டியதன் அடையாளமாக அவர்களுக்கு வழங்கப்பட்டது. மறைந்து பல ஆண்டுகள் ஆன பின்பும், தந்தை பெரியார் என்னும் பெயர் சிலருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்குவதே அவரது கொள்கை வலிமைக்குச் சான்றாகும்.

இன்றைய தகவல் தொழில்நுட்பக் காலத்தில், 'வாட்ஸ்அப் பல்கலைக்கழகம்' மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் மூலம் சமூகத்தில் பல்வேறு தவறான சிந்தனைப் போக்குகளும், போலிச் செய்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. உதாரணமாக, சுதந்திரத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் பெண் அமைச்சர் இருந்திருக்கிறார். அதன் பின்னர் வந்த தி.மு.க ஆட்சிக்காலங்களில் அம்மையார் சத்தியவாணி முத்து உள்ளிட்ட பல பெண் அமைச்சர்கள் பொறுப்பு வகித்துள்ளனர். ஆனால், இன்று தமிழ்நாட்டில் முதல்முறையாக இப்போதுதான் ஒரு பெண் அமைச்சர் உருவாகியிருப்பதுபோல சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

நாம் வாழும் இந்த 'தவறான தகவல் பரவும் யுகத்தில்' இன்ஸ்டாகிராமில் வரும் குடும்ப அட்வைஸ்கள், குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள் குறித்த கருத்துக்களைக் கண்மூடித்தனமாக நம்பாமல், சொல்பவர்களின் தகுதி என்ன என்பதை ஆராய வேண்டும். நவீன தொழில்நுட்பமான 'சாட் ஜிபிடி' கூட சில நேரங்களில் தவறான தகவல்களைத் தந்துவிட்டுப் பின்னர் மன்னிப்புக் கேட்கிறது. எனவே, எதை ஏற்பது, எதை மறுப்பது என்று பிரித்தறியும் பகுத்தறிவு இன்று சோஷியல் மீடியா காலத்திற்கு மிக அவசியமாகிறது. இதனைத்தான் தந்தை பெரியார் அன்றே வலியுறுத்தினார்.

தேர்தல் முடிவுகள் என்பது மக்களின் தீர்ப்பு, அதைத் தலைவணங்கி ஏற்கிறோம். தேர்தல் தோல்வியின் போது பேரறிஞர் அண்ணா ஆறுதல் தேடாமல், பட்டினத்தார் படம் பார்க்கச் சென்ற வரலாற்று நிகழ்வு எல்லோருக்கும் தெரியும். நாங்கள் அந்த வழியில் வந்தவர்கள். எனவே, தேர்தல் என்பது தற்காலிகமானது, ஆனால் மக்களுக்கான திராவிட இயக்கத்தின் பயணம் என்றும் தொடரும். எப்போதும் மக்களாகிய உங்களுடன் இருப்போம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை." என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User