Doctor Vikatan: சன் ஸ்கிரீன்... அதிக எஸ்பிஎஃப் உள்ளதுதான் பலனளிக்குமா? வைட்டமின் டி குறையுமா?

Mar 2, 2026 - 08:31
 0
Doctor Vikatan: சன் ஸ்கிரீன்... அதிக எஸ்பிஎஃப் உள்ளதுதான் பலனளிக்குமா? வைட்டமின் டி குறையுமா?

Doctor Vikatan: சன் ஸ்கிரீன் வாங்கும்போது எஸ்பிஎஃப் அளவைப் பார்க்க வேண்டும் என்கிறார்களே... அப்படியென்றால் என்ன... அது அதிகம் இருந்தால்தான் நல்ல சன் ஸ்கிரீனா... சன் ஸ்கிரீன் பயன்படுத்துவோருக்கு வைட்டமின் டி குறைபாடு வருமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா
சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா

சன் புரொடக்ஷன் ஃபேக்டர் என்பதன் சுருக்கமே எஸ்பிஎஃப் (SPF). அல்ட்ராவயலட் எனப்படும் யுவி கதிர்கள் எந்த அளவுக்கு நம் சருமத்தைப் பாதிக்கும் என்பதைப் பொறுத்து இது தேர்வு செய்யப்பட வேண்டும்.  

உதாரணத்துக்கு, 30 நிமிடங்களுக்குள்ளேயே உங்கள் சருமம் யுவி கதிர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் என நினைத்தால் எஸ்பிஎஃப் 30 உள்ளது போல தேர்ந்தெடுக்கலாம். அதைப்போல மும்மடங்கு அதாவது 90 நிமிடங்களுக்கு அந்த சன் ஸ்கிரீன் உங்களுக்குப் பாதுகாப்பு தரும்.

நம்முடைய வெப்பநிலைக்கு, எல்லோருமே 30-க்கு மேல் எஸ்பிஎஃப் உள்ள சன் ஸ்கிரீன்தான் உபயோகிக்க வேண்டும். எஸ்பிஎஃப் 50 இருந்தால் இன்னும் சிறப்பு. அது 97 சதவிகிதம் பாதுகாப்பு தரும். அதுவே எஸ்பிஎஃப் 100 இருந்தால், அது 98 சதவிகிதம் பாதுகாப்பு தரும். அதில் பெரிய வித்தியாசம் இருக்காது.

'பிராட் ஸ்பெக்ட்ரம்' என்று சொல்வோம். அதாவது யுவிஏ, யுவிபி கதிர்களிடமிருந்து பாதுகாப்பளிப்பதாக இருக்க வேண்டும்.  தண்ணீரோ, வியர்வையோ பட்டால் சன் ஸ்கிரீன் வழிந்து ஓடும்படி இருக்கக்கூடாது. எனவே, அது வாட்டர் ரெசிஸ்டன்ட்டாக, ஸ்வெட் ரெசிஸ்டன்ட்டாக இருக்க வேண்டியது அவசியம். 

எஸ்பிஎஃப் 50 இருந்தால் இன்னும் சிறப்பு. அது 97 சதவிகிதம் பாதுகாப்பு தரும்.

சருமத்தில் தடவும்போது வெள்ளைப் படலமாகவோ, கறுப்பாகவோ தெரியக்கூடாது. சருமத்தின் துவாரங்களை அடைக்காதபடி (non-comedogenic ) இருக்க வேண்டும். பருக்களை ஏற்படுத்தக்கூடாது. வைட்டமின் டி குறைபாடு என்பது இன்று பரவலாகக் காணப்படுகிற பிரச்னையாக இருக்கிறது. இதற்கு மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வதுதான் தீர்வு.

சன் ஸ்கிரீனை யாரும் உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவிக்கொள்ளப் போவதில்லை.  வைட்டமின் டி ஊடுருவ வாய்ப்பில்லாத அளவுக்கு சன் ஸ்கிரீன் தடையாக இருக்கப்போவதும் இல்லை. அந்த வகையில் சன் ஸ்கிரீன் பயன்பாட்டால் வைட்டமின் டி குறைபாடு வர வாய்ப்பே இல்லை. எனவே, பயமின்றி சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0