”50 வருடங்களுக்கு திமுக துடைத்து எறியப்படும்”-அமைச்சர் ஷாஜஹான் பேச்சு; கொதிப்பில் திமுக-வினர்!
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில் ஐயூஎம்எல் சார்பில் ஏணி சின்னத்தில் போட்டியிட்ட ஷாஜஹான் வெற்றி பெற்றார். இதையடுத்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சிக்கு ஆதரவளித்து கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றது. காங்கிரஸ், விசிக-வை சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றனர். இதே போல் ஐயூஎம்எல் ஷாஜஹானும் தவெக அமைச்சரவையில் இடம் பெற்று அமைச்சரானார்.

பாபநாசம் தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கியதை லோக்கல் திமுக நிர்வாகிகள் ரசிக்கவில்லை. கூட்டணிக்கு தான் கொடுத்து விட்டீர்கள் அவர்களது ஏணி சின்னத்தில் இல்லாமல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வையுங்கள் என ஆலோசனை கூட்டம் ஒன்றில் நிர்வாகிகள் சொன்னார்கள். இவ்விவகாரம் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் வரை செல்ல, உடனே ஐயூஎம்எல் ஒரு தேசிய கட்சி என்பதால் அவர்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள் எல்லோரும் ஒத்துழைத்து வேலை செய்து வெற்றி பெற வைப்பது நம் கடமை என தலைமையில் இருந்து உத்தரவு வர நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டனர்.
தொடக்கத்தில் தொகுதி வீக்காக இருந்த நிலையில் திமுக தலைமை ஒரு குழுவை நியமித்து மைனஸை ப்ளஸாக்கி வெற்றிக்காக வேலை செய்ய... ஷாஜஹான் வெற்றியும் பெற்றார். இதையடுத்து ஐயூஎம்எல் தவெக அரசுக்கு ஆதரவளித்ததை திமுக தலைமை விரும்பவில்லை. குறிப்பாக லோக்கல் திமுகவினர் இதை துளியும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் ஷாஜஹான் அமைச்சர் ஆன பிறகு ஆடுதுறையில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் திமுக அமைச்சரான எம்.எல்.ஏ கோவி.செழியன், முன்னாள் எம்.பி ராமலிங்கம் , ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தற்கு எதிராக திமுக-வினரே விமர்சனம் செய்தனர்.

`நம் தயவால் வெற்றி பெற்றவர் நம்மை தேடி வந்து பாக்கணும் நாம் போகலாமா?' என்கிற ரீதியில் பேசினர். இப்படியான சூழலில் வெற்றி பெற்றதற்கு ஷாஜஹான் தொகுதிக்குள் நன்றி கூறினார். தேர்தலில் ஷாஜஹானை அருகில் நிற்க வைத்து உதயநிதி ஏணி சின்னத்தை காட்டி பிரசாரம் செய்ததையும், நன்றி தெரிவிக்கும் போது தவெக கொடி இருந்ததையும் ஒப்பிட்டு நடிகர் வடிவேலு பாணியில் அது போன மாசம், இது இந்த மாசம் என்று திமுக-வினர் விமர்சித்தனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் ஷாஜஹான், முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி தொடர்ந்தால் இன்னும் ஐந்து வருடத்திற்கு அல்ல ஐம்பது வருடங்களுக்கு திமுக துடைத்து எறியப்படும் என்று பேசியியிருந்தார். இது குறித்த வீடியோ வைரலாக... திமுக-வினர் கொதிப்படைந்தனர். திமுக தயவில் வெற்றி பெற்று விட்டு திமுக-வை விமர்னம் செய்யும் ஷாஜகானே மன்னிப்பு கேள் என கடும் சொற்களை பயன்படுத்தி திமுக-வினர் கும்பகோணம், பாபநாசம் பகுதியில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

மேலும் ஷாஜகானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த தலைமையிடம் லோக்கல் திமுக-வினர் அனுமதி கேட்டிருப்பதாக சொல்லபடுகிறது. போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது குறித்து ஷாஜஹான் தரப்பு போலீஸ் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், சிசிடிவி பதிவுகளை அடிப்படையாக வைத்து ஒட்டியவர்கள் யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருதாகவும் சொல்கிறார்கள். இந்த விவகாரத்தால் தஞ்சாவூர் மாவட்ட அரசியல் வட்டத்தில் அனல் பறக்கிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)