தருமபுரி : களவுக்குப் போன கல்லூரி மாணவிகள் - உறவினர்களுடன் கைதான அதிர்ச்சி சம்பவம்!
ஆடம்பரமாக வாழ தவறான வழிகாட்டுதலால் திருடுவதை ஜாலியாக செய்து வந்த கல்லூரி மாணவிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமகாலத்தில் பல்வேறு துறைகளிலும் பெண்கள் சாதித்து வரும் நிலையில், தங்கள் ஆற்றலை நேர்வழியில் பயன்படுத்தாமல் குறுக்குவழியில் பயன்படுத்த நினைத்த இந்த மாணவிகளின் செயல் பதற வைக்கிறது.
தருமபுரி மாவட்டம் காரிமஙகலம் அருகே அனுமந்தபுரம், பிக்கனஅள்ளி உள்ளிட்டப் பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த 4 திருட்டு சம்பவங்கள் அப்பகுதி கிராம மக்களை அச்சமடைய வைத்த நிலையில், இத்திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களை உடனே பிடிக்க தருமபுரி எஸ்.பி அருண் கபிலன் உத்தரவிட, இன்ஸ்பெக்டர் தவமனி தலமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கடந்த 9 ஆம் தேதி இரவு காரிமஙகலம் பகுதியில் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த ஹோண்டா காரை நிறுத்தியுள்ளனர். காருக்குள் இருந்த நடுத்தர வயதுடைய இரு ஆண்களிடமும், இரு இளம்பெண்களிடமும் 'எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று கேட்டததற்கு ஆளாளுக்கு ஒரு பதில் கூறியுள்ளனர்.
அது மட்டுமின்றி காருக்குள் வீட்டு உபயோகப் பொருட்கள் இருந்ததை பார்த்து போலீசாருக்கு சந்தேகம் வலுக்க, அவர்களை காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
அதன் பின் நடந்ததது குறித்து போலீசாரிடம் விசாரித்தபோது, "காரிமங்கலம் அருகிலுள்ள கிராமங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்ததை விசாரித்து வந்தபோது, ஹோண்டா கார் ஒன்று அப்பகுதியில் சுற்றி வந்தது கண்கானிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. கடந்த 9 ஆம் தேதி இரவு காரிமங்கலத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் ஆகியோர் பயணித்து வந்த அதே போன்ற காரை நிறுத்தி சோதனை செய்தோம். காருக்குள் டி.வி உள்ளிட்ட பொருட்கள் இருக்க, அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். சதேகமடைந்ததால் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அனுமந்தபுரம், பிக்கனஅள்ளியில் உள்ள வீடுகளில் அடுத்தடுத்து திருட்டில் ஈடுபட்டது தாங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டார்கள்.

கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியும், கல்லூரி படிப்பை சமீபத்தில் முடித்த ஜவளகிரியைச் சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணும் நெருங்கிய தோழிகள். இவர்கள் பகட்டான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு சுலமாக பணம் சம்பாதிக்க திட்டமிட அதற்கு மாணவியின் தந்தை, சித்தப்பா ஆகியோர் ஆதரவு தெரிவித்து, ஆளில்லாத வீடுகளில் திருட முடிவு செய்துள்ளனர். அதோடு காரிமங்காலம் அருகே சொட்டண்டஅள்ளியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, செகண்ட் ஹேண்டில் வாங்கிய ஹோண்டா காரில் பகல் முழுவதும் காரிமங்கலம் வட்டாரத்திலுள்ள கிராங்ளுக்கு சென்று வீடுகளை நோட்டமிட்டு, பூட்டியுள்ள வீடுகள், தனியாக உள்ள வீடுகளை மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர்.
அப்படி வீடியோ எடுத்த வீடுகளுக்கு நால்வரும் இரவில் காரில் சென்று திருடியுள்ளனர். இவர்களைப் பார்த்து யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
தற்போது அவர்களிடமிருந்து 12 கிராம் தங்க நகை, ரூ 40 ஆயிரம் ரொக்கம், டி.வி, சிலிண்டருடன் அடுப்புகள் உள்ளிட்ட சில வீட்டு உபயோகப் பொருட்களை கைப்பற்றியுள்ளோம். ரிமாண்ட் செய்யப்பட்டுள்ள இவர்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.
கல்லூரிக்கு சென்று கலகலப்பாக இருக்க வேண்டிய வயதில், காவல் வாகனத்தில் கலக்கத்துடன் சிறைக்கு சென்றவர்களை பார்த்து ஆத்திரம் கொள்வதா? அனுதாபப்படுவதா? என்று அப்பகுதி மக்கள் ஆதங்கப்பட்டார்கள்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)