சைபர் கிரைம், டிஜிட்டல் கைது... ரூ.28,000 கோடி மோசடியில் தொடர்புடைய வழக்கறிஞர் கைதான பகீர் பின்னணி

Oct 25, 2026 - 17:00
0
சைபர் கிரைம், டிஜிட்டல் கைது... ரூ.28,000 கோடி மோசடியில் தொடர்புடைய வழக்கறிஞர் கைதான பகீர் பின்னணி

நாடு முழுவதும் இணையத்தளக் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடம் இருக்கும் முழு பணத்தையும் அபகரிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன.

இம்மோசடி குறித்து அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் சைபர் மோசடி மற்றும் டிஜிட்டல் கைது மோசடி கும்பலுடன் தொடர்புடைய ஒரு வழக்கறிஞரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்தக் கும்பல் கிட்டத்தட்ட ரூ.28,000 கோடி மதிப்பிலான வங்கி பரிவர்த்தனைகளைக் கையாண்டதாகவும், சுமார் ரூ.2,900 கோடி ரொக்கம் வங்கியில் டெபாசிட் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இம்மோசடியில் தொடர்புடைய வழக்கறிஞர் ராஷேஷ் ஷா மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்குள் கைது செய்யப்பட்டார். அங்குள்ள போர்டிங் கேட் ஒன்றில், ராஷேஷ் ஷா என்று அழைக்கப்படும் ரஷேஷ் உபாத்யாய் டெல்லிக்கு விமானத்தில் செல்லவிருந்தபோது, ​​பனாஜியில் இருந்து வந்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் குழு ஒன்று அவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்தது.

சுங்கத்துறை மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை அதிகாரிகள் அவரைக் கண்டுபிடிக்க அமலாக்கப்பிரிவுக்கு உதவினர்.

இந்தக் கைது மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவரை டிஜிட்டலில் கைது செய்த இணைய மோசடி கும்பல் அவரிடம் இருந்த ரூ.2.60 கோடியைத் தங்களது வங்கிக்கணக்கிற்கு மாற்றியது. அப்பெண்ணிடம் எடுக்கப்பட்ட பணம் போலி இயக்குநர்கள் மூலம் இயக்கப்படும் நிறுவனங்களின் 400 போலி வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது.

இது குறித்து கோவா போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இது குறித்து அமலாக்கப்பிரிவும் விசாரிக்க ஆரம்பித்தது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள உபாத்யாய் சைபர் குற்றம் தொடர்பாக வங்கிக்கணக்குகள் முடக்கப்படும்போது அதனை அதிலிருந்து விடுவிப்பதில் முக்கியப் பங்கு வகித்தததாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதோடு வழக்கறிஞராக இருந்தபோதிலும் ஒரு நாளும் கோர்ட்டில் ஆஜரானதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மோசடி கும்பல் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 300க்கும் மேற்பட்டோரிடம் இது போன்று பணம் பறித்துள்ளது. இது தொடர்பாக 160க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User