காய்கறிகளுக்கு இடையே ரகசியமாக கஞ்சா செடி வளர்ப்பு – ஒடிசா மாநில தொழிலாளி சிக்கியது எப்படி?
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மாதாபெனந்தா ஜெனா (46) என்ற நபர், கடந்த 27 ஆண்டுகளாக கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக தடாகம் அருகேயுள்ள பன்னிமடை கணேஷ் நகர் பகுதியில் உள்ள சிவகாமி என்பவரது வீட்டில் தனது மனைவியுடன் வாடகைக்குக் குடியிருந்து வருகிறார். இதனிடையே கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மாதாபெனந்தா ஜெனா, தான் குடியிருக்கும் வீட்டின் பின்புறமுள்ள காலி இடத்தில் தங்களுக்குத் தேவையான காய்கறி செடிகளை நட்டு வைத்து வளர்த்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி தனது சொந்தப் பயன்பாட்டிற்காக புகைப்பதற்காக இரண்டு கஞ்சா செடிகளையும் ரகசியமாக நட்டு, யாருக்கும் சந்தேகம் வராதபடி தண்ணீர் ஊற்றிப் பராமரித்து வந்து உள்ளார்.

நாளடைவில் அந்த கஞ்சா செடிகள் சுமார் 7 அடி உயரத்திற்கு அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் குடியிருப்புப் பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாகத் தடாகம் காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் அளித்தனர். இந்த தகவலின் அடிப்படையில், தடாகம் காவல் துறையினர், சம்பவ இடத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பின்புறம் சுமார் 7 அடி நீளத்திற்கு செழிப்பாக வளர்ந்து நின்ற 1 கிலோ 445 கிராம் எடை உள்ள 2 கஞ்சா செடிகளைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கஞ்சா செடிகளை வளர்த்த மாதாபெனந்தா ஜெனாவை கைது செய்த போலீசார், கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)