`விஜய் மீதான விமர்சனம்; அதீத திமுக ஆதரவு; திருமா கொடுத்த விலை!' - விசிக-வை விழவைத்த `5' விஷயங்கள்

May 05, 2026 - 17:32
0
`விஜய் மீதான விமர்சனம்; அதீத திமுக ஆதரவு; திருமா கொடுத்த விலை!' - விசிக-வை விழவைத்த `5' விஷயங்கள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தி.மு.க-வுக்கு மட்டுமல்லாது தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இக்கூட்டணியில் 8 தொகுதிகளில் களம் கண்ட வி.சி.க, தற்போது காட்டுமன்னார் கோயில், திண்டிவனம் என 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப்பெற்றிருக்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் 4 எம்.எல்.ஏ-க்களுடன் சட்டமன்றத்தில் நுழைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தத் தேர்தலில் இரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

ஜோதிமணி - திருமாவளவன் - வன்னி அரசு
ஜோதிமணி - திருமாவளவன் - வன்னி அரசு

இந்தத் தேர்தலில் வி.சி.க தொண்டர்களிடையே ஒருவித சுணக்கம் நிலவியதை மறுக்க முடியாது. இதை வி.சி.க தலைவர் திருமாவளவனே குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, தி.மு.க உடனான தொகுதிப் பங்கீட்டின்போது ஏற்பட்ட அதிருப்தி, தேர்தல் களத்தில் கூட்டணிக் கட்சிகளுடனான ஒருங்கிணைப்பு குறைபாடு போன்றவை பின்னடைவுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. களப்பணியில் வி.சி.க தொண்டர்களின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாதது பல தொகுதிகளில் எதிரொலித்துள்ளது.

திருமாவளவன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் திடீரென அந்த முடிவில் இருந்து அவர் பின்வாங்கினார். இந்த அணுகுமுறை உள்ளிட்ட தேர்தல் தொடங்கியதிலிருந்தே விசிக தலைவர் திருமாவளவனின் நடவடிக்கையில் சிறு தடுமாற்றங்கள் இருந்ததாக மூத்த ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர்.

ஸ்டாலின் - திருமாவளவன்
ஸ்டாலின் - திருமாவளவன்

எனவே இந்த விவகாரம் தொடர்பாக விசிக-வை தொடர்ந்து கூர்ந்து கவனித்து வரும் ஊடகவியலாளர் T.N.ரகுவிடம் பேசினோம். அவர், ``கடந்த சட்டமன்றத் தேர்தலில் விசிக 6 இடங்கள் பெற்று, 4 இடங்களில் வென்றது. ஆனால் இம்முறை 8 இடங்கள் பெற்று, வெறும் 2 இடங்கள் மட்டுமே கிடைத்திருப்பது ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக அரசுக்கு விசிக முழு ஆதரவு அளித்து வருகிறது. 'திராவிட மாடல்' ஆட்சியை ஆதரிப்பதில் திருமாவளவன் முன்னணியில் இருந்தார். ஆனால், தேவைக்கு அதிகமான இந்த ஆதரவு தலித் மக்களின் அன்றாடப் பிரச்னைகளில் ஒருவிதத் தேக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

தலித் அரசியலைப் பொறுத்தவரை 'போராட்டம்' தான் அதன் அடிப்படை. தமிழ்நாட்டை 'பெரியார் மண்' என நாம் பெருமையாகச் சொல்லிக்கொண்டாலும், இதுவும் சாதிய சமூகம்தான். மேலவளவு போன்ற சம்பவம் 20-ம் நூற்றாண்டின் கடைசி வருடங்களில் நடந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பெயருக்குப் பின்னால் சாதி போடுவதில்லை என்பது போன்ற மேலோட்டமான மாற்றங்கள் இருந்தாலும், அடிமட்டத்தில் கோயில், திருவிழாவுக்குச் செல்வது, சுடுகாட்டுப் பாதை, மீன் பிடி என ஒவ்வொரு விஷயத்திலும் ஒடுக்குமுறை தொடர்கிறது.

ஊடகவியலாளர் டி.என்.ரகு
ஊடகவியலாளர் டி.என்.ரகு

பாஜக எதிர்ப்பு என்ற பெரிய இலக்கிற்காக, உள்ளூர் அளவிலான தலித் மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களில் விசிக-வின் தீவிரம் சற்று குறைந்ததோ என்ற ஐயம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இது வாக்குகளில் எதிரொலித்திருக்கலாம்.

தலித் தலைவர்கள் தேர்தல் செலவுகளுக்குப் பெரிய கட்சிகளையே நம்ப வேண்டியுள்ளது. இது ஒரு "கையறு நிலை". அதேப் போல, திருமாவளவன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகக் கூறியும், பின்னர் அதிலிருந்து பின்வாங்கியது ஒரு "இமாலயத் தவறு".

எம்.பி-யாக இருந்து கொண்டு சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவது தவறல்ல. கூட்டணிக்கு தூண் போல இருந்த ஒரு தலைவருக்காக ஒரு நாடாளுமன்றத் தொகுதித் தேர்தலுக்கு திமுக பாதை அமைத்திருக்கலாம். ஒரு கட்சியின் தலைவர் சட்டமன்றத்திற்குள் செல்லத் தயாராகும் போது தொண்டர்களுக்கு ஏற்படும் உற்சாகம், அவர் பின்வாங்கும் போது சோர்வாக மாறுகிறது. அவர் போட்டியிட்டால் தொகுதிச் செலவுகளை திமுக ஏற்க வேண்டியிருக்கும் என்பதாலும், அவர் துணை முதல்வர் பதவி கேட்பார் என்பதாலும் திமுக அவரைப் போட்டியிட விடாமல் தடுத்திருக்கலாம்.

திருமாவளவன்
திருமாவளவன்

விஜய் தனது பிரசாரத்தில் ஸ்டாலினைத் தவிர வேறு யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. ஆனால் திருமாவளவன் விஜய்யைக் கடுமையாக விமர்சித்தது தலித் இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுக போன்ற கட்சிகள் செய்யாத ஒரு விஷயத்தை விஜய் செய்துள்ளார். அது தலித் மாவட்டச் செயலாளர்களுக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்திருப்பது. இது தலித் இளைஞர்களை அவர் பக்கம் ஈர்த்திருக்கலாம். விஜயகாந்த் பின்னால் போன போது வராத விமர்சனம், இப்போது விஜய்யைப் பின்தொடரும் இளைஞர்கள் மீது "சினிமா கவர்ச்சி" என்ற போர்வையில் திருமாவளவன் முன்வைத்தது நியாயமற்றது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் விசிக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு பா.ஜ.க எதிர்ப்பு என்பதில் சமரசமற்ற விசிக, வரும் காலங்களில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தால் அதை ஆக்கப்பூர்வமாகப் பரிசீலிக்கலாம். இது பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் இருக்க உதவும். வரும் தேர்தலில் விசிக வெறும் கூட்டணி கட்சியாக இல்லாமல், ஆட்சியில் பங்குபெறும் (அமைச்சர் பதவிகள்) நிலையை அடைய வேண்டும்.

திருமாவளவன்
திருமாவளவன்

தலித் மக்களின் உண்மையான எம்பவர்மென்ட் (Empowerment) என்பது வெறும் தேர்தல் வெற்றிகளில் மட்டும் இல்லை. அது பொருளாதார வலிமையிலும், அதிகாரப் பகிர்விலும் உள்ளது. திருமாவளவன் போன்ற ஒரு கொள்கை உறுதி கொண்ட தலைவர், நிதி நெருக்கடி மற்றும் கூட்டணி அரசியலின் கட்டாயங்களால் தனது முடிவுகளை மாற்றிக்கொள்ள வேண்டியிருப்பது தமிழ்நாட்டு அரசியலின் ஒரு கசப்பான உண்மை. தி.மு.க-வின் 'பெருந்தன்மையற்ற' போக்கு மற்றும் விஜய்யின் எழுச்சி வி.சி.க-விற்கு ஒரு சவாலான காலக்கட்டத்தை உருவாக்கியுள்ளது." எனத் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக திருமாவளவனின் தேர்தல் நேர தடுமாற்றம், தொண்டர்களின் சுணக்கம், அதீதிர திராவிட மாடல் ஆதரவு, பொருளாதாரச் சிக்கல், விஜய் எழுச்சி என விசிக-வின் வீழ்ச்சியை இப்படி சுருக்கிவிடலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User