'ஆட்சிக்கவிழ்ப்பு ஆபரேஷன்; தயாராகும் எதிர்க்கட்சிகள்(?) அலர்ட் மோடில் முதல்வர் விஜய்?

Nov 05, 2026 - 16:00
0
'ஆட்சிக்கவிழ்ப்பு ஆபரேஷன்; தயாராகும் எதிர்க்கட்சிகள்(?) அலர்ட் மோடில் முதல்வர் விஜய்?

சட்டமன்றத்தில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டி 6 மாதம் முடிவடையவிருக்கிறது. இந்நிலையில், மீண்டும் அரசியல் வட்டாரத்தில் ஆட்சிக்கவிழ்ப்பு ஆபரேஷனை பற்றி பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. கோவையில் திமுக தலைவர் ஸ்டாலினும், 'தவெக ஆட்சி நீடிப்பது தமிழகத்துக்கு நல்லதல்ல...' எனப் பொடி வைத்துப் பேசியிருக்கிறார்.

என்னதான் நடக்கிறது? ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் காய் நகர்த்த தொடங்கிவிட்டனவா?

CTR. நிர்மல் குமார்
CTR. நிர்மல் குமார்

'திமுகவும் அதிமுகவும் சேர்ந்து தவெகவின் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜகவின் உதவியோடு ஆட்சியைக் கவிழ்க்க திட்டமிடுகின்றனர்' என நேற்று அமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்தார். அதேமாதிரி மதுரையை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்காக தன்னிடம் 30 கோடி ரூபாய் விலை பேசியதாக தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவும் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக தவெகவின் முக்கிய அமைச்சர்கள் சிலரிடம் பேச்சுக்கொடுத்தோம்.

'பெரும்பான்மையை நிரூபித்து 6 மாதம் கழித்துதான் அடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதுதான் மரபு. ஆனால், திமுகவும் அதிமுகவும் எங்களின் ஆட்சி அமைவதையே விரும்பவில்லை. நாங்கள் பெரும்பான்மையை நிரூபித்த பிறகுமே செந்தில் பாலாஜி, எ.வ.வேலு ஆகியோரின் டீம் எங்கள் எம்.எல்.ஏக்களை விலை பேசியது. எங்களின் எம்.எல்.ஏக்கள் கொடுத்த தகவலின் பேரில் குதிரை பேரம் சம்பந்தமாக வழக்கும் தொடுத்திருக்கிறோம்.

CM Vijay
CM Vijay

மே 13 ஆம் தேதி நாங்கள் பெரும்பான்மையை நிரூபித்தோம். மரபுப்படி பார்த்தால் நவம்பர் 13 ஆம் தேதிக்கு பிறகு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முடியும். அதனால்தான் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஒரு டீம் மீண்டும் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் வேலையில் இறங்கியிருக்கிறது. உளவுத்துறையின் மூலமும் எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்திருக்கிறது. அதன்படி பெரிய தொகையை கூறி ஆசைகாட்டி சில எம்.எல்.ஏக்களை அணுக தொடங்கியிருக்கின்றனர். அதிமுகவும் திமுகவும் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு ஆபரேஷனில் கரம் கோர்த்திருக்கிறது.

அதனால்தான் நாங்கள் இப்போதே அலர்ட் ஆகிறோம். ஆட்சிக்கவிழ்ப்பு எண்ணத்தோடு யார் தங்களை அணுகினாலும் உடனே தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டுமென எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிட்டிருக்கிறோம். உட்கட்சி பூசலால் முக்கியத்துவம் கிடைக்காமல் இருக்கும் எம்.எல்.ஏக்கள், மாற்றுக் கட்சியிலிருந்து வந்த எம்.எல்.ஏக்கள், சம்பாதிக்க முடியவில்லை என வருத்தத்தில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் என ஒரு பட்டியலை எடுத்து வைத்து அவர்களை கூடுதலாக கண்காணித்து பேசிக் கொண்டே இருக்கிறோம். எப்படி தலைகீழாக நின்றாலும் திமுக, அதிமுகவால் எங்களின் ஆட்சியை அசைக்க முடியாது.

முதல்வர் விஜய் - பெ.சண்முகம்
முதல்வர் விஜய் - பெ.சண்முகம்

இப்போது கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவு இல்லாமலேயே ஆட்சியை தக்கவைக்கும் நிலையில் இருக்கிறோம். விசிக, ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏக்களும் எங்களுடன் உறுதியாக நிற்கிறார்கள். டிசம்பர் மூன்றாவது வாரத்துக்குள் இடைத்தேர்தலும் நடந்து முடிந்துவிடும் சூழல் இருக்கிறது. அதையும் முழுமையாக வென்று எதிர்க்கட்சிகளின் குயுக்தியான முயற்சிகள் அத்தனையையும் முறியடிப்போம்' என்றனர்.

சட்டமன்றம்

எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கையில் எடுத்தாலும் சட்டரீதியாக தவெக அரசால் அதை தள்ளிப்போட முடியும் என்கின்றனர் சீனியர் அரசியல் விமர்சகர்கள்.

'ஒரு அரசை 6 மாதத்துக்கு ஒரு முறைதான் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி கேட்க முடியுமென கட்டாயமான விதிமுறைகள் இல்லை. அது ஒரு மரபுதான். ஆனால், இன்னொரு விதி இருக்கிறது. அதாவது சட்டமன்றத்தில் ஒரு கூட்டத்தொடருக்கும் இன்னொரு கூட்டத்தொடருக்கும் இடையில் அதிகபட்சமாக 6 மாதகால இடைவெளி இருக்கலாம். அதன்படி பார்த்தால் தவெக அரசில் கடைசி கூட்டத்தொடர் செப்டம்பர் 8 ஆம் தேதிதான் முடிந்திருக்கிறது. அதிலிருந்து 6 மாதம் என்றால் மார்ச் மாதம் வரைக்கும் சபாநாயகரால் சட்டமன்றத்தை கூட்டாமல் இருக்க முடியும்.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், குறிப்பிட்ட நாட்களுக்குள் அதை சட்டமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், சபாநாயகர் அந்த 6 மாத இடைவெளியை காரணம் காட்டி சட்டமன்றத்தை கூட்டாமல் இருக்கலாம். அதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. அப்படி நம்பிக்கையில்லா தீர்மானத்தை தள்ளிப்போட ஆளுநரின் அருளும் தேவை.

எதிர்க்கட்சிகள் இந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லையென முறையிட்டால், ஆளுநர் உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட உத்தரவிட முடியும். ஆளுநர் யார் பக்கம் இருக்கிறார் என்பது இதில் முக்கியம். எந்தப் பக்கத்துக்கு ஆதரவாக இருந்தாலும் இன்னொரு தரப்பினர் நீதிமன்றத்திற்கு செல்வர். பாஜக ஆட்சியைப் பிடித்த பல மாநிலங்களில் இந்த கச்சேரியெல்லாம் நடந்திருக்கிறது.

ஆனாலும், எதிர்க்கட்சியினர் சரியான சமயம் வாய்க்கும் வரை நம்பிக்கையில்லா தீர்மானத்தை கையில் எடுக்கமாட்டார்கள். குறைந்தபட்சமாக 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவு வரும் வரைக்காவது காத்திருப்பார்கள். இடைத்தேர்தல் முடிவுகள் தவெக அரசுக்கு சாதகமாக இல்லையெனில் அப்போது எதிர்க்கட்சிகள் கூடி ஆபரேஷன் ஆட்சிக்கவிழ்ப்பை முடுக்கி விடுவார்கள். இதை உணர்ந்ததால்தான் முதல்வர் விஜய்யும் இவ்வளவு சீக்கிரமாக இடைத்தேர்தல் தொகுதிகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்' என்கின்றனர்.

 ஸ்டாலின்
ஸ்டாலின்

அறிவாலயத்தின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக்கொடுத்தோம். 'தவெக அரசை எதிர்க்கட்சிகள் சேர்ந்து கவிழ்க்க வேண்டிய தேவை இல்லை. அவர்கள் ஆட்சி செய்யும் லட்சணத்துக்கு அவர்களின் கூட்டணி கட்சியினரும் மக்களும் சேர்ந்தே விஜய்யை தூக்கி எறிவார்கள். காங்கிரஸூடன் விஜய் கூட்டணியில் இருப்பார். ஆனால், டெல்லி போராட்டங்களுக்கு கட்சியின் செய்தித் தொடர்பாளரை கூட அனுப்பி வைக்கமாட்டார்.

பாஜகவிடம் பம்மிப் போகும் விஜய்யின் செயல்பாடுகளால் காங்கிரஸ் மேலிடமே கடுப்பில் இருக்கிறது. இன்னொரு பக்கம் பாமகவுடன் உறவாட துடித்து திருமாவையும் அப்செட் ஆக்கியிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சீரழிவு, போதைப்பொருள் புழக்கம், விலைவாசி உயர்வு, பெண்கள் பாதுகாப்பு என 6 மாதத்தில் முக்கியமான விஷயங்கள் அத்தனையிலும் தவெக அரசு கோட்டை விட்டிருக்கிறது.

தாராபுரத்திலும் மதுராந்தகத்திலும் விஜய் போராடித்தான் வென்றிருக்கிறார். வரப்போகும் 5 தொகுதி இடைத்தேர்தலும் அவர்களுக்கு அத்தனை எளிதாக இருக்காது. விஜயபாஸ்கர்களுக்கும் இசக்கி சுப்பையாவுக்கும் விஜய் எந்த முகத்தை வைத்து ஓட்டுக் கேட்பார்? இடைத்தேர்தலில் மக்களே விஜய்க்கு தக்கப்பாடத்தை புகட்டுவார்கள். அப்போது இந்த மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்ப தானாகவே வாய்ப்பு வரும். அதை மனதில் வைத்துதான் எங்களின் தலைவரும் இந்த ஆட்சி நீடிப்பது தமிழகத்துக்கு நல்லதல்ல எனப் பேசியிருக்கிறார். அதற்குள் திமுக தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறது என கதறுவது எல்லாம், உண்மையான மக்கள் பிரச்னைகளை மறைக்க துடிக்கும் முதலைக் கண்ணீரே' என்கின்றனர்.

அடுத்த 2-3 மாதங்களில் ஜார்ஜ் கோட்டையே ஆடிப்போகும் அளவுக்கு காய் நகர்த்தல்களை நடத்த அத்தனை தரப்பினரும் திட்டமிடுகின்றனர் என்பது மட்டும் தெரிகிறது.

இந்த அரசியல் ஆட்டத்தில் வெல்லப்போவது யாரோ?

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User