சென்னை: ரௌடி, அவரின் நண்பன் கொடூர கொலை - அதிகாலையில் நடந்த அதிர்ச்சி!

Mar 9, 2026 - 21:32
 0
சென்னை: ரௌடி, அவரின் நண்பன் கொடூர கொலை - அதிகாலையில் நடந்த அதிர்ச்சி!

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம், துளசிங்க முதலியார் தெருவில் உள்ள வீட்டில் ரௌடி ஆறுமுகம் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அவரோடு அவரின் நண்பன் சதீஷ் என்பவரும் தங்கியிருந்தார். அதிகாலை நேரத்தில் பைக்கில் வந்த ஒரு கும்பல், தூங்கிக் கொண்டிருந்த ரௌடி ஆறுமுகம், சதீஷ் ஆகியோரை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் ஆறுமுகத்தின் முகம் சிதைந்தது. இருவரின் மரண ஓலம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அதற்குள் கொலை செய்த கும்பலோ அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ஆறுமுகம், சதீஷ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர். இதையடுத்து பல்லாவரம் காவல் நிலையத்துக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை
கொலை

ரௌடி ஆறுமுகம், சதீஷ் ஆகியோர் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

இது குறித்து பல்லாவரம் போலீஸார் கூறுகையில், ``கொலைசெய்யப்பட்ட ரௌடி ஆறுமுகம், சில மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் சிறையிலிருந்து வெளியில் வந்தார். தன்னுடைய வீட்டில் தங்கியிருந்தால் எதிரிகளால் ஆபத்து என கருதிய ஆறுமுகம், சில மாதங்கள் வடசென்னையில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். அதன்பிறகு முடிச்சூர் பகுதிக்கு குடிபெயர்ந்தார். இவரின் நண்பர்தான் முடிச்சூர் லட்சுமி நகரைச் சேர்ந்த சதீஷ்.

கொலை செய்யப்பட்ட ரௌடி ஆறுமுகம் மீது பீர்க்கன்கரணை காவல் நிலையம், சுங்குவார்சத்திரம் காவல் நிலையம் ஆகியவற்றில் கொலை, கொலை முயற்சி உள்பட சில வழக்குகள் உள்ளன. சதீஷ் மீதும் சில வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சில தினங்களுக்கு முடிச்சூரை சேர்ந்த ரௌடி தீபக் (23) என்பவனை வீடு புகுந்து தாக்கிய வழக்கில், ஆறுமுகத்தின் நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆறுமுகத்தை போலீஸார் தேடி வந்தனர். இந்தநிலையில்தான் ஆறுமுகம், அவரின் நண்பன் சதீஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனால் ரௌடி தீபக் டீம் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கொலையில் தொடர்புடையவர்களை தேடி வருகிறோம். எத்தனை பேர் சம்பவ இடத்துக்கு வந்தார்கள் என அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். இதுவரை கிடைத்த தகவலின்படி மூன்று பைக்குகள், ஆட்டோவில் 8 பேர் கொண்ட கும்பல் இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த வழக்கில் கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது" என்றனர்.

கமிஷனர் அமல்ராஜ்

திரிசூலம் பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கொலை குறித்து விசாரித்ததோடு கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மூன்று பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். விசாரணைக்குப் பிறகுதான் ரௌடி ஆறுமுகம் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் தெரியவரும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0