சென்னை மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோயில்... 1000 ஆண்டுப் பழைமை... திருமணத் தடை நீங்கும்!

Jun 08, 2026 - 10:01
0
சென்னை மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோயில்... 1000 ஆண்டுப் பழைமை... திருமணத் தடை நீங்கும்!

சென்னை புண்ணிய பூமி. திரும்பிய பக்கம் எல்லாம் பழைமையான ஆலயங்கள் இருக்கும் அற்புதத் தலம். அதிலும் மயிலாப்பூர் சொல்லவே வேண்டாம். ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடிப்பரவிய திருத்தலம். மயிலை என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது கபாலீஸ்வரர் கோயில்தான். ஆனால் இத்தலத்தின் காவல் தெய்வங்களாகக் திகழ்பவர்கள் முண்டகக் கண்ணி அம்மன் மற்றும் கோல விழி அம்மன். இன்றைக்கு பக்தர்கள் முண்டக் கண்ணி அம்மன் என்று அன்போடு அழைக்கிறார்கள்.

யார் இந்த முண்டகக் கண்ணி அம்மன்? இந்த அன்னை மயிலையில் கோயில் கொண்டது எப்படி என்பது குறித்து அறிந்துகொள்வோம் வாருங்கள். ரேணுகாதேவியின் அவதாரங்களுள் ஒருவராகவும், சப்த கன்னிகைகளுள் ஒருவராகவும் கருதப்படும் முண்டகக் கண்ணி அம்மன், இந்தத் தலத்தில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது கோயில் இருக்கும் பகுதி குளமாக இருந்ததாம். அப்போது அந்தக் குளக்கரையில் பழைமையான ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த ஆலமரத்தடியில்தான் அன்னை சுயம்புவாக வெளிப்பட்டாள் என்கின்றனர். இங்கு மூலவராக வீற்றிருக்கும் அம்மனுக்கு உருவம் இல்லை.

மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோயில்

அன்னை ஆணையிட்டால் தங்கத்திலேயே கூரை இட்டு ஆலயம் எழுப்ப லட்சக் கணக்கானவர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அன்னையோ எளிமையின் உருவமாக ஒரு தென்னங்கீற்றுக்கொட்டகையில் அருள்பாலிக்கிறாள். கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் அம்மனை பக்தர்கள் போற்றிப்புகழ்கிறார்கள். அன்னையின் விழிகளோ மிகப்பெரியது. அதனால்தான் 'விரிந்த பெரிய விழிகளைக் கொண்டவள்' என்ற பொருளில் அவளை 'முண்டக் கண்ணியம்மன்' என்கின்றனர்.

ஆனால் அம்மனின் திருப்பெயரோ 'முண்டகக் கண்ணியம்மன்' என்பது. 'முண்டகம்' என்றால் 'தாமரை' என்று பொருள். 'தாமரை மலர் போன்ற கண்களை உடையவள்' என்பதாலும் 'தாமரை மொட்டு' போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்டாள் என்பதாலும் அம்மனுக்கு 'முண்டகக்கண்ணி' என்று பெயர் ஏற்பட்டதாகத் தலபுராணம் கூறுகிறது.

Sakthi Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...

ஆன்மிகம் மணக்கும் ஆனந்த ஆலயம். சக்தி விகடன் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்த்த; ஆன்மிக திருத்தலங்கள், திருக்கதைகள், ஆன்மிகத் தொடர்கள், ஜோதிடம் முதலான கட்டுரை, வீடியோக்கள் இங்கே உடனுக்குடன்

இணைய க்ளிக் செய்க...

அன்னை தன் தாமரைக்கண்களால் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களைப் பார்த்து அருள் செய்கிறாள். இவள் கண் முன் நின்று வந்தாலே போதும் நம் கஷ்டங்கள் தீரும். தொடர்ந்து ஏழு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் அன்னையை தரிசித்தால் நம் பிரச்னைகள் படிப்படியாக விலகும். இதை இன்றும் கண்கூடாக உணரலாம்.

இங்கே தாமரை மொட்டு போன்று காட்சியளிக்கும் சுயம்பின் உச்சிப் பகுதியில் சந்தனம் குழைந்து உருவம் செய்து வழிபடுகிறார்கள். சந்தன உருவத்தில் குங்குமம் வைத்து, தலைக்குப் பின்புறத்தில் நாக கிரீடம் சூட்டிப் பார்க்கும்போது அம்மன் அமர்ந்த நிலையில் காட்சியளிப்பதைப்போன்றே இருக்கும். மூலவர் சந்நிதிக்கு இடப்புறத்தில் உற்சவர் சந்நிதி இருக்கிறது.

மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோயில்

இந்தப் பகுதிப் பெண்கள் அனைவரும் இந்த அம்மனை தங்கள் தாயாகவே நினைத்து பாசம் காட்டுகிறார்கள். அதனால்தான் கோயிலில் எப்போதும் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. அம்மனும் பெற்ற தாயைவிடவும் வாஞ்சையுடன் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகிறாள்.

கோயிலில், அம்மன் சந்நிதிக்கு எதிரே மிகப்பெரிய அரசமரம் ஒன்று உள்ளது. அதன்கீழ் நாகக் கன்னிகளின் விக்கிரகங்கள் காணப்படுகின்றன. இந்த நாகக் கன்னிகளுக்குப் பால் ஊற்றி அரசமரத்தை மூன்று முறை சுற்றிவந்து வணங்குகிறார்கள் பக்தர்கள். இதே போன்று, அம்மன் சந்நிதிக்குப் பின்புறத்தில் விழுதுகள் இல்லாத அபூர்வ கல்லால மரமும், புற்றுடன் கூடிய மூன்றடி கல்நாகமும் இருக்கிறது. இந்தக் கல்லால மரம்தான் தலமரமாக வணங்கப்படுகிறது.

அந்தப் புற்றில் நாகம் ஒன்று வாழ்வதாகவும் தினமும் இரவு நேரத்தில், நாகம் கோயிலுக்குள் வந்து அம்மனை வழிபடுவதாகவும் நம்புகிறார்கள் பக்தர்கள். ராகு - கேது தோஷம் உள்ளவர்கள் இந்த அம்மனை வழிபட அவற்றிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்கின்றனர். அம்மை, கண் தொடர்பான நோய்கள் ஆகியன தீரவும் இந்த அம்மனை வழிபடலாம் என்பது மேலும் சிறப்பு. தீராப்பிணி, திருமணத்தடை, கல்வி வரம், மகப்பேறு, வீடு வாகன வசதிகள் என அனைத்தையும் அருள்பவள் இந்த அம்மன்.

மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோயில்

நாகதோஷம் இருப்பவர்கள் முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்டு நாகக்கன்னி சிலையை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, 48 நாள்களுக்கு நீரிலேயே நாகக்கன்னியை வைத்திருந்து, அதை ஆலயத்தின் முகப்பில் இருக்கிற மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, அதற்கு அபிஷேகமும் செய்து வழிபடுகிறார்கள்.

அனைத்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோயில் திருவிழாக்கோலம் பூண்டுவிடும். ஆடிமாதம் முண்டகக் கண்ணியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது மேலும் சிறப்பு. வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை முண்டகக் கண்ணி அம்மனை தரிசித்து வாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User