CEC: 20,000 வீரர்கள் பாதுகாப்பு; 250 ரயில்கள் ரத்து; 400 பேர் கைது- முடக்கப்படும் CJP போராட்டம்

Oct 10, 2026 - 14:30
0
CEC: 20,000 வீரர்கள் பாதுகாப்பு; 250 ரயில்கள் ரத்து; 400 பேர் கைது- முடக்கப்படும் CJP போராட்டம்

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியின் ஜந்தர் மந்தரில் சிஜேபி அமைப்பு இன்று பிரம்மாண்ட போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்கவில்லை. என்றாலும் அனுமதி வழங்காததைக் கண்டித்தும் அனுமதியின்றியே போராட்டம் நடத்தப்படவிருப்பதாக சிஜேபி தரப்பிலிருந்து தகவல் வெளியானது. இந்த நிலையில், டெல்லி காவல்துறையினர் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட வீரர்கள் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவோடு இரவாக 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அபிஜித் தீப்கே.
அபிஜித் தீப்கே

இதன் ஒரு பகுதியாக பிரபல யூடியூபர் துருவ் ரதீ குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தர் பகுதிக்குள் நுழைவதை தடுக்கும் நோக்கில், ராஜீவ் சவுக், புது டெல்லி, சென்ட்ரல் செக்ரடரியேட், படேல் சவுக், காஷ்மீரி கேட் உள்ளிட்ட 45 டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், இன்று அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை டெல்லி மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கு வரவிருந்த 250க்கும் மேற்பட்ட வெளிமாநில மற்றும் உள்ளூர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் 24 மணி நேரத்திற்கு ஜன்பத்-கர்தவ்யா பாதை சந்திப்பில் இருந்து 4 கி.மீ சுற்றளவுக்கு இணைய சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தக் கட்டுப்பாடுகளையும் மீறி திட்டமிட்டபடி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெறும் என சி.ஜே.பி நிறுவனர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார். மக்கள் போராட்டங்களால் இடையூறு ஏற்படும் எனக் கூறும் அரசு, மெட்ரோ, ரயில்கள் மற்றும் சாலைகளை முடக்கி மக்களுக்கு அதிக இடையூறை ஏற்படுத்துவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சட்ட ஒழுங்கைப் பராமரிப்பது, காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து மீண்டும் விமர்சனங்கள் எழாமல் பார்த்துக்கொள்வது என இரண்டு முக்கிய இலக்குகளை டெல்லி காவல்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

டெல்லி காவல்துறை
டெல்லி காவல்துறை

எனவே, போராட்டக்காரர்களை டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுப்பதும், தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைபவர்களை உடனடியாக அப்புறப்படுத்துவதும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தெளிவான உத்தரவாகும். ஜந்தர் மந்தர், ஜன்பத், தேர்தல் ஆணைய அலுவலகம் மற்றும் டெல்லி காவல்துறை தலைமையகம் உள்ளிட்ட முக்கிய இடங்களை உள்ளடக்கிய 1.5 கி.மீ சுற்றளவை மிகவும் பதற்றமான மண்டலமாக காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்த எல்லைக்குள் மட்டும் 6,500க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு, அப்பகுதி பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் ஒலிப்பதிவு வசதி கொண்ட 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. ஜந்தர் மந்தருக்குச் செல்லும் சாலையில் குறைந்தபட்சம் 7 அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதில் போராட்டக்காரர்கள் ஊடுருவுவதைத் தடுப்பதற்காக சில இறுதி அடுக்கு தடுப்புகள் ஒன்றாகச் சேர்த்து வெல்டிங் செய்யப்பட்டுள்ளன. அனுமதி மறுக்கப்பட்ட பகுதிகள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கும் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் ஒலிபெருக்கிகள் மூலம் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

டெல்லி காவல்துறை
டெல்லி காவல்துறை

பொதுமக்கள் கூடுவதோ, கோஷமிடுவதோ, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதோ அல்லது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்துவதோ கூடாது என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமுதாயக் கூடங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் குடியிருப்பு நலச் சங்கங்கள் (RWA) மூலமாகவும் இந்தப் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்ற செய்தி மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. தடையை மீறி டெல்லிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது மற்றும் சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டெல்லி மற்றும் மத்திய டெல்லியில் உள்ள விடுதிகள், ஹோட்டல்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தங்குபவர்களைப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்த ஹோட்டல் நிர்வாகிகளுக்குக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட வருபவர்களுக்கு அறைகளை வாடகைக்கு விடக்கூடாது என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் தங்கினால் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையின் நடவடிக்கைகளைத் துல்லியமாகப் பதிவு செய்ய, கூடுதல் காவல் ஆணையர் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கும், களத்தில் உள்ள பிற காவலர்களுக்கும் பாடி கேமராக்கள் (Body Cameras) வழங்கப்பட்டுள்ளன.

டெல்லி
டெல்லி

போராட்டம் மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகளை உடனுக்குடன் வீடியோ எடுக்க நூற்றுக்கணக்கான புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோகிராஃபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வீடியோ பதிவுகள் சம்பவங்களின் உண்மைத் தன்மையை நிரூபிக்கவும், தவறான கருத்துப் பரப்பல்களைத் தடுக்கவும், அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் விசாரணைக்கு உதவவும் பயன்படும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

இதனால் டெல்லி நகரமே பெரும் பரபரப்பாக இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User