'ஒன்றிரண்டு தொகுதிக்காக சண்டையிட்டு வெற்றியை சேதப்படுத்த முடியாது!' - அறிவாலயத்தில் திருமா!
தொகுதி பங்கீட்டில் இழுபறியாக நீடித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு கட்சியையும் அழைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கிறது திமுக. அந்தவகையில், இன்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவாலயத்தில் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். விசிகவுக்கு திமுக கூட்டணியில் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பத்திரிகையாளர்களிடம் திருமாவளவன் பேசியதாவது, 'விசிக தமிழ்நாட்டில் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் 6 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள். விசிகவின் உயர்நிலைக் கூட்டத்தில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெறவும், ராஜ்யசபா சீட்டை பெறவும் வலியுறுத்த வேண்டி தீர்மானம் நிறைவேற்றினோம். அது குறித்து முதல்வரிடம் பேசினோம்.
23 கட்சிகள் இருக்கும் கருத்தியல் சார்ந்து இயங்குகிற கூட்டணி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மதவாத சக்திகளுக்கு எதிராக துடிப்பாக செயல்படக் கூடிய கூட்டணி. விசிகவின் நலன் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு கூட்டணியின் நலனும் முக்கியம் என்பதால் 8 தொகுதிகளுக்கு ஒத்துக்கொண்டோம்.
இடதுசாரி ஜனநயாக அரசியல் வலுவாக வேண்டும் என்பதால் இந்த கூட்டணியில் தொடர்ந்து பயணிக்கிறோம். அதே அடிப்படையில்தான் கூட்டணியும் பேசியிருக்கிறோம். 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்லுமளவுக்கு கூட்டணிக்காக உழைப்போம். வலதுசாரி சக்திகளையும் திராவிடத்துக்கு மாற்று என கூறும் திரிபுவாத சக்திகளையும் ஒழிக்க வேண்டிய பொறுப்பு நிறைய இருக்கிறது.
தற்காலிக லாபங்களுக்காக யோசித்தால் வலதுசாரி அரசியலே வலுப்பெறும். இடதுசாரிகளுக்கு 10 + எங்களுக்கு 8 இதை எண்ணிக்கையில் பார்த்த்தால் குறைவாக தோன்றும். ஆனால் இது கொள்கையின் அடிப்படையில் அமைந்திருக்கும் கூட்டணி.
ஒன்றிரண்டு தொகுதிகளுக்காக சண்டையிட்டு வெற்றியில் சேதத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதால்தான் சுமுகமாக முடித்திருக்கிறோம். ராஜ்ய சபா சீட்டையும் கேட்டிருக்கிறோம். இப்போது அதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் அழுத்தம் கொடுப்பதில்லை. எந்தெந்த தொகுதிகள் வேண்டுமென பேசி முடிவெடுப்போம்.
விசிக சிதைக்கப்படும் அளவுக்கு பலவீனமான கட்சி அல்ல. அதற்கு ஒரு போதும் விசிக இடம் கொடுக்காது.' என்றார்.
.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0