தரையில் காலெடுத்து வைத்தால் எரியும் உடல்; குளத்திலேயே வசித்துவந்த சிறுவன் - மீட்ட ஆனந்த் அம்பானி!

Aug 19, 2026 - 16:31
0
தரையில் காலெடுத்து வைத்தால் எரியும் உடல்; குளத்திலேயே வசித்துவந்த சிறுவன் - மீட்ட ஆனந்த் அம்பானி!

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் அருகில் உள்ள பெல்தங்கா என்ற இடத்தைச் சேர்ந்த இக்பால் ஷேக் என்ற 16 வயது சிறுவன், கடந்த பல ஆண்டுகளாக தரையில் வாழும் நாட்களை விட அதிகமான நாட்களைக் குளத்து நீரில் கழித்து வந்தான். அவன் குளத்து நீரை விட்டு வெளியில் வந்தால் உடல் முழுவதும் எரிவது போன்ற உணர்வு ஏற்பட்டது. இதற்காகச் சிறுவனின் பெற்றோர் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. சிறுவன் குளத்தில் வாழ்வது போன்ற காணொலிகள் சமூக வலைதளப் பக்கங்களில் பெருமளவில் வைரலாகின.

அவன் தண்ணீரில் நீச்சல் அடித்துக்கொண்டோ அல்லது தண்ணீரிலேயே அமர்ந்துகொண்டோ இருந்தான். மக்கள் அவனுக்குத் தண்ணீருக்குள் உணவு எடுத்துச் சென்று கொடுத்தால், அதை நீரிலிருந்தபடியே சாப்பிட்டு வந்தான். சிறுவன் ஒரு குளத்தில் மட்டும் இருக்காமல், பல குளங்களுக்கு மாறிச் சென்று ஒவ்வொன்றிலும் பல மணி நேரம் தண்ணீருக்குள் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

ஓர் அமானுஷ்ய சக்தி தன்னைக் கட்டுப்படுத்துவது போன்று உணர்வதாக அச்சிறுவன் தெரிவித்தான். இது தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சிறுவனின் நிலை குறித்துத் தொழிலதிபர் ஆனந்த் அம்பானிக்குத் தெரியவந்தது. அவர் அச்சிறுவனுக்கு மருத்துவ உதவி செய்ய முன்வந்தார்.

இதையடுத்து இக்பால், மேற்கு வங்கத்தில் இருந்து மும்பைக்குச் சிறப்பு விமான ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டான். அவன் மும்பையில் உள்ள சர் எச்.என். ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அங்கு மருத்துவர்கள் விரிவான பரிசோதனைகளை மேற்கொண்டு, அவனது இந்த நிலைக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கேற்பச் சிகிச்சையளிக்கத் தயாராகி வருகின்றனர்.

இக்பாலின் குடும்பத்தினர் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால், அவர்களால் தங்களது மகனுக்குப் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாமல் இருந்தது. மருத்துவ உதவி கிடைக்காமல் இக்பால் நீண்ட நேரம் தண்ணீரில் கழித்ததை அவனது குடும்பத்தினர் பார்த்து மிகவும் வேதனைப்பட்டனர். தற்போது ஆனந்த் அம்பானி மூலம் இக்பாலுக்குப் புது வாழ்வு கிடைக்கவிருக்கிறது.

இக்பால் மும்பைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, காஜியாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரஜ்பால் தியாகி அச்சிறுவனுக்கு இலவசமாகச் சிகிச்சை அளிக்க முன்வந்தார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் டாக்டர் தியாகி பகிர்ந்த ஒரு வீடியோவில், இக்பாலின் நிலை குறித்த வீடியோக்களைப் பார்த்த பிறகு, அவனுக்குச் சிகிச்சை அளிக்க மேற்கு வங்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு இக்பாலின் குடும்பமும், மேற்கு வங்க அரசும் அனுமதி அளித்திருந்தன. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், இக்பாலைத் தொழிலதிபர் ஆனந்த் அம்பானி தனது மருத்துவக் குழு மூலம் மும்பைக்கு அழைத்து வந்துள்ளார். இது குறித்து டாக்டர் தியாகி கூறுகையில், "அவனுக்குச் சிகிச்சை அளிக்க ஒருவர் முன்வந்திருப்பது நல்ல விஷயம்" என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User