பிரேசில் ஃப்ரீகிக்... திடீரெனப் பாய்ந்து பந்தை உதைத்த எதிரணி வீரர்! 1974 உலகக்கோப்பையின் விநோத நொடி!

Jun 03, 2026 - 15:34
0
பிரேசில் ஃப்ரீகிக்... திடீரெனப் பாய்ந்து பந்தை உதைத்த எதிரணி வீரர்! 1974 உலகக்கோப்பையின் விநோத நொடி!

உலகக்கோப்பை கால்பந்து வரலாறு விசித்திரமான தருணங்கள் பலவற்றைக் கண்டிருக்கிறது. ஆனால், சில சம்பவங்கள் வெறும் விசித்திரமாக மட்டுமல்லாமல், அதன் பின்னால் ஒரு பெரிய கதையையும் சுமந்து நிற்கும். அப்படியான ஒரு நிகழ்வுதான் 1974-ம் ஆண்டு மேற்கு ஜெர்மனியில் நடந்த உலகக்கோப்பையில், பிரேசில் மற்றும் ஜாயிர் (Zaire) அணிகளுக்கு இடையேயான போட்டியில் அரங்கேறியது.

திடுக்கிட வைத்த அந்தத் தருணம்!

போட்டி பரபரப்பாகச் சென்றுகொண்டிருந்தது. ஜாயிர் அணி ஏற்கனவே 2-0 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்தது. அப்போது பிரேசில் அணிக்கு கோல் அடிக்க மிக வசதியான இடத்தில் ஒரு 'ஃப்ரீ கிக்' வாய்ப்பு கிடைத்தது. பிரேசில் வீரர்கள் பந்தை உதைக்கத் தயாராக, ஜாயிர் வீரர்கள் கோல் கம்பத்திற்கு முன்னர், தடுப்புச் சுவராக நின்றிருந்தனர். நடுவரின் விசில் சத்தத்திற்காக அனைவரும் காத்திருந்த நொடியில், அந்த அசாத்தியம் நிகழ்ந்தது. ஜாயிர் தடுப்புச் சுவரில் இருந்து பிரிந்த வீரர் மெபு இலுங்கா (Mwepu Ilunga), திடீரெனப் பாய்ந்து சென்று, பிரேசில் வீரர் உதைப்பதற்கு முன்பே பந்தை மிக பலமாக எட்டி உதைத்து மைதானத்தின் மறுபக்கத்திற்கு அனுப்பினார்.

1974 உலகக்கோப்பை | AI
1974 உலகக்கோப்பை | AI

அறியாமையா? நேரத்தை வீணடிக்கும் தந்திரமா?

இலுங்காவின் இந்தச் செயல் மைதானத்தில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கால்பந்து விதிகள் தெரியாத அறியாமையால் இப்படிச் செய்தாரா? அல்லது, ஏற்கனவே யூகோஸ்லாவியாவிடம் 9-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்திருந்ததால், மேலும் ஒரு மோசமான தோல்வியைத் தவிர்க்க நேரத்தை வீணடிக்க இப்படிச் செய்தாரா? எனப் பலரும் குழம்பினர். நடுவர் உடனடியாக அவருக்கு மஞ்சள் அட்டை காட்டி எச்சரித்தார். ஆனால், அந்த மஞ்சள் அட்டைக்குப் பின்னால் ஒரு பெரிய விரக்தியின் குரல் ஒளிந்திருந்தது அப்போது யாருக்கும் தெரியவில்லை.

உண்மையான காரணம்... விரக்தியின் வெளிப்பாடு!

பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2010-ல் இலுங்கா அந்தச் சம்பவத்திற்கான உண்மைக் காரணத்தை விளக்கினார். அது அறியாமையால் செய்யப்பட்ட செயல் அல்ல, அது ஒரு திட்டமிட்ட எதிர்ப்பு.

"நான் அதை வேண்டுமென்றேதான் செய்தேன். கால்பந்து விதிகள் எனக்கு நன்றாகத் தெரியும்," என்று அவர் கூறினார்.

உலகக்கோப்பையில் விளையாடியதற்காக தங்களுக்குச் சம்பளம் கிடைக்காது என்று வீரர்கள் நம்பியதாகவும், அதனால் ஏற்பட்ட விரக்தியிலும் கோபத்திலுமே அப்படிச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

"பணம் பெறப்போகிறவர்கள் ஸ்டேடியத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்க, நாங்கள் மட்டும் எதற்காகக் காயப்பட வேண்டும்?" என்பதே அவரது கேள்வியாக இருந்தது. சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டு, அதன் மூலம் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யவே அவர் விரும்பினார். ஆனால், நடுவரோ மஞ்சள் அட்டையுடன் நிறுத்திக்கொண்டார்.

இறுதியில் அந்தப் போட்டியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜாயிர் (தற்போது காங்கோ ஜனநாயக குடியரசு) அணி, அந்த உலகக்கோப்பைத் தொடரில் ஒரு புள்ளிகூடப் பெறாமல் வெளியேறியது. ஆரம்பத்தில் ஒரு நகைச்சுவையான சம்பவமாகப் பார்க்கப்பட்ட இலுங்காவின் அந்த ஒரு நொடி, இன்று வீரர்களின் உரிமைக்கான ஒரு விரக்தியான போராட்டமாகவே நினைவுகூரப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User