``எலும்புகள் எல்லோருக்கும் உண்டு" - திமுக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி

Jul 20, 2026 - 13:30
0
``எலும்புகள் எல்லோருக்கும் உண்டு" - திமுக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் தி.மு.க சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில், தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

முதல்வர் விஜய் சட்டமன்றத்தில், `உங்க அப்பாவைக் காணோம்' எனப் பேசியது தொடர்பாக விமர்சித்த எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், ``இவ்வளவு கேவலமான முதல்வரை தமிழகம் மட்டுமல்ல, இந்திய வரலாறே பெற்றது கிடையாது. பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தேர்தலில் தோற்றபோது, அப்போது ஆட்சியிலிருந்த தலைவர்கள் நாகரீகமாகப் பேசினார்கள்.

மார்க்கண்டேயன்
மார்க்கண்டேயன்

ஆனால் இந்த முதல்வர் சட்டமன்றத்தில் 'அப்பாவைத் தேடுகிறேன்' எனக் கூறுகிறார். மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர் உன்னை சட்டமன்றத்திற்குள் வைத்துப் பார்த்துக் கொள்கிறோம். நாங்கள் என்ன கோமாளி பயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? சட்டமன்றத்தைக் கூட்டும்போது உனக்கு எலும்பு இருக்காது, உடைத்துவிட்டுதான் அனுப்பி விடுவோம். சட்டமன்றத்தைக் கூட்டிப் பார். யார் ஓடியது? கைது செய்து விடுவார்கள் என்று இரவோடு இரவாக கரூரிலிருந்து கேரவனில் யாரை வைத்துக்கொண்டு நீ ஓடினாய்?" எனச் சர்ச்சையாகப் பேசியிருக்கிறார். இதற்கு ஆளும் கட்சி தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அதைத் தொடர்ந்து விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை காவல்துறை கைது செய்திருக்கிறது. இந்த நிலையில், வி.சி.க அமைச்சர் வன்னி அரசு தன் எக்ஸ் பக்கத்தில், ``'சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் எலும்புகளை உடைப்பேன்' என்று வன்முறையைத் தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.

ஏற்கனவே மேனாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

வன்னி அரசு
வன்னி அரசு

இவர்கள் மட்டுமல்ல பலரும் மிக மோசமான தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர். மக்களுக்காகச் சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தைப் பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாகக் கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதைத்தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்"

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User