Asian Games: "ஆட்டோ ஓட்டுநரின் மகள்தானே...” - வெள்ளிப் பதக்கத்துடன் பதிலடி கொடுத்த ஆன்சி!

Sep 30, 2026 - 10:00
0
Asian Games: "ஆட்டோ ஓட்டுநரின் மகள்தானே...” - வெள்ளிப் பதக்கத்துடன் பதிலடி கொடுத்த ஆன்சி!

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவுக்கும் கேரளாவுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் ஆன்‌சி சோஜன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். கனமழை உள்ளிட்ட சாதகமற்ற வானிலையையும் பொருட்படுத்தாமல் அவர் சிறப்பாகச் செயல்பட்டு இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

தொடர்ச்சியாக இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள ஆன்‌சி, தங்கப் பதக்கத்தை வெறும் 2 செ.மீ. வித்தியாசத்தில் தவறவிட்டார்.

போட்டியின் தொடக்கத்தில் சீன வீராங்கனை 6.49 மீட்டர் தூரம் தாண்டிய நிலையில், ஆன்‌சி 6.53 மீட்டர் தாண்டி முன்னிலை பெற்றார். பின்னர் சீன வீராங்கனை 6.55 மீட்டர் தாண்டியதால் தங்கத்துக்கான போட்டி மேலும் பரபரப்பானது.

கடைசி முயற்சியில் 6.55 மீட்டருக்கும் அதிகமாகத் தாண்டி தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் ஆன்‌சி களமிறங்கினார். ஆனால் தொடர் முயற்சிகளால் ஏற்பட்ட உடல் சோர்வு காரணமாக, அவரால் 6.46 மீட்டர் மட்டுமே தாண்ட முடிந்தது.

ஆன்‌சி சோஜன்.
ஆன்‌சி சோஜன்.

தங்கப் பதக்கம் தவறியிருந்தாலும், கிடைத்த வெள்ளிப் பதக்கத்தில் முழுமையான திருப்தி இருப்பதாக ஆன்‌சி தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியை அடுத்தடுத்த சர்வதேச போட்டிகளுக்கான முக்கியமான அனுபவமாகவும் அவர் கருதுகிறார்.

சுமார் 10 ஆண்டுகளாக மேற்கொண்ட கடுமையான பயிற்சி மற்றும் உழைப்பின் பலனாகவே இந்தச் சர்வதேச சாதனையை எட்டியுள்ளதாக ஆன்‌சி கூறியுள்ளார்.

தடகளப் பயணத்தின் ஆரம்பக் காலத்தில் பல தோல்விகளைச் சந்தித்த அவர், பின்னர் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்களை வென்று படிப்படியாக உயர்ந்தார்.

“ஆட்டோ ஓட்டுநரின் மகள்தானே… வாழ்க்கையில் பெரிய அளவில் எங்கே சாதித்துவிடப் போகிறாய்?” என்று தன்னைப் பற்றி விமர்சித்தவர்களுக்கு, தனது சாதனையின் மூலம் ஆன்‌சி பதிலளித்துள்ளார்.

ஆன்‌சி சோஜன்.

தனது வெற்றிப் பயணத்தில் குடும்பத்தினர், ஊர் மக்கள், தடகள சம்மேளனம் மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கிய ஆதரவு ஆகியவை முக்கியப் பங்காற்றியதாக அவர் நன்றியுடன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சீசனில் 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ள ஆன்‌சி, தற்போது தனது சிறந்த ஃபார்மில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கனவு காணும்போது தோல்விகள் இயல்பானவை. ஆனால் அந்தத் தோல்விகளால் துவண்டு போகாமல் தொடர்ந்து முன்னேறினால் வெற்றி நிச்சயம்” என்ற நம்பிக்கையைத் தனது பயணத்தின் மூலம் நிரூபித்து வருகிறார் ஆன்‌சி சோஜன்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User