Alliance Matrimony: அரசியல் கட்சிகள் கூட்டணி வைப்பதற்கான ஒரு மேட்ரிமோனி!

Mar 7, 2026 - 10:32
 0
Alliance Matrimony: அரசியல் கட்சிகள் கூட்டணி வைப்பதற்கான ஒரு மேட்ரிமோனி!

அரசியல் களத்தில் தேர்தல் நெருங்கும்போது `கொள்கை’ என்ற வார்த்தையை விட அதிகமாக அடிபடுவது `கூட்டணி’ தான்! கல்யாண சந்தையை விடக் களேபரமாக இருக்கும் இந்த அரசியல் சந்தைக்கு, ஒரு `கூட்டணி மேட்ரிமோனி' (Alliance Matrimony) தளம் ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?

உதாரணத்துக்கு சில `கூட்டணி புரொஃபைல்கள்’ இதோ:

ai image
ai image

1. அகில இந்திய அண்ணன்

ராசி: தேசிய ராசி

நட்சத்திரம்: டெல்லி நட்சத்திரம்

தற்போதைய நிலை: எங்கள் ஊரில் நாங்கள் பெரிய ஆட்கள்; ஆனால் உள்ளூரில் எங்களுக்கு ரூட் மேப் காட்ட ஒரு நல்ல துணை தேவை.

வரன் எதிர்பார்ப்பு: குறைந்தபட்சம் 20 சீட்டுகள் வேண்டும். இல்லையென்றால் 4 சீட்டாவது வேண்டும். ஆனால், எந்தக் கட்சியாக இருந்தாலும் கூட்டணியில் நாங்கள் தான் தலைமை என்ற மனப்பக்குவம் கொண்ட கட்சிகள் மட்டுமே அணுகவும்.

முக்கிய நிபந்தனை: உங்கள் கட்சியின் போஸ்டர்களில் எங்கள் அகில இந்தியத் தலைவரின் புகைப்படம் கட்டாயம் இடம்பெற வேண்டும். நோட்டாவை விட ஒரு ஓட்டு அதிகம் வாங்கினாலும், அதை நாங்களே சாதித்ததாகத் தம்பட்டம் அடிப்போம், அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.

2. ஆளும் அண்ணாச்சி

ராசி: அதிகார ராசி

நட்சத்திரம்: 'எல்லாம் என் கையில்' நட்சத்திரம்

தற்போதைய நிலை: வசதியான குடும்பம் (ஆளுங்கட்சி). ஏற்கெனவே நிறைய பேர் வீட்டில் (கூட்டணியில்) இருக்கிறார்கள். ஆனாலும் ஓட்டு வங்கி குறையாமல் இருக்க மேலும் சில வரன்கள் தேவை.

ai image
ai image

வரன் எதிர்பார்ப்பு: நாங்கள் பெருந்தன்மையாகக் கொடுக்கும் 2 சீட்டுகளை வாங்கிக் கொண்டு, மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் எங்கள் சின்னத்திற்கு வேலை செய்ய வேண்டும்.

முக்கிய நிபந்தனை: "துணை முதல்வர் பதவி", "ஆட்சியில் பங்கு" போன்ற வார்த்தைகளை உச்சரிப்பவர்களுக்கு இங்கு இடமில்லை. கல்யாணத்துக்குப் பின் (தேர்தலுக்குப் பின்) 'சைலண்டாக' இருக்க வேண்டும்.

3. காத்திருக்கும் சிங்கம்

ராசி: 'அடுத்த முறை நாங்கதான்' ராசி

நட்சத்திரம்: மெகா கூட்டணி நட்சத்திரம்

தற்போதைய நிலை: சமீபத்தில்தான் சில பிரேக்-அப்கள் (கூட்டணி முறிவு) நடந்தன. சிங்கிளாக இருக்க பயமாக இருப்பதால் அவசரமாக 'மெகா கூட்டணி' அமைக்க ஆட்கள் தேடப்படுகிறார்கள்.

ai image
ai image

வரன் எதிர்பார்ப்பு: ஆளுங்கட்சியைத் தினமும் காலை 9 மணிக்கு மைக்கைப் பிடித்து திட்டத் தெரிந்திருக்க வேண்டும். கடந்த முறை எங்களை 'ஊழல் கட்சி' என்று திட்டியிருந்தாலும் பரவாயில்லை, மன்னித்து ஏற்றுக் கொள்வோம்.

முக்கிய நிபந்தனை: சீட் பேரம் பேசலாம் (Dowry negotiable). ஆனால், தேர்தல் முடிந்ததும் எங்களை விட்டுப் போய்விடக் கூடாது.

4. செங்கொடித் தோழர்கள்

ராசி: கொள்கை ராசி

நட்சத்திரம்: போராட்ட நட்சத்திரம்

தற்போதைய நிலை: கொள்கைக்காக உயிரையும் கொடுப்போம், ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் ஏதோ ஒரு பெரிய கட்சியுடன் அட்ஜஸ்ட் செய்து கொள்வோம்.

ai image
ai image

வரன் எதிர்பார்ப்பு: எங்களுக்குப் பெரிய ஆசையெல்லாம் இல்லை; வழக்கமாகத் தரும் அந்த 2 எம்.பி சீட்டோ அல்லது 6 எம்.எல்.ஏ சீட்டோ கொடுத்தால் போதும்.

முக்கிய நிபந்தனை: உங்களுடன் கூட்டணியில்தான் இருப்போம்; ஆனால் பெட்ரோல் விலை ஏறினாலோ, பஸ் கட்டணம் ஏறினாலோ உங்கள் அரசுக்கு எதிராகவே கறுப்புக்கொடி பிடித்துத் தர்ணா செய்வோம். இதைக் கொள்கை முரண்பாடு என்று நினைத்துக் கோபித்துக் கொள்ளக் கூடாது.

5. ட்ரெண்டிங் புதுக்கட்சி

ராசி: சோஷியல் மீடியா ராசி

நட்சத்திரம்: யூடியூப் நட்சத்திரம்

தற்போதைய நிலை: சிஸ்டத்தை மாற்றுவதற்காக சினிமா/பிசினஸை விட்டுவிட்டு சமீபத்தில்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்.

ai image
ai image

வரன் எதிர்பார்ப்பு: இந்த மேட்ரிமோனியில் என்னை யார் திருமணம் செய்து கொண்டாலும், நான் தான் முதல்வர் வேட்பாளர்! நீங்கள் அனைவரும் எனக்குப் பின்னால் நின்று கைதட்ட வேண்டும்.

முக்கிய நிபந்தனை: எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் உங்களுக்கும் ஆக்டிவான ஐடி விங் இருக்க வேண்டும். ஒருவேளை என் கண்டிஷனுக்குப் பயந்து யாரும் வரவில்லை என்றால், "நான் தனிமரம் இல்லை, மக்கள் என் பக்கம்" என்று சொல்லி சிங்கிளாகவே களமிறங்கி விடுவேன்!

இந்தக் கூட்டணி மேட்ரிமோனியில் மணமகன் (ஆளும் கட்சி), மணமகள் (எதிர்க்கட்சி) என யாராக இருந்தாலும், மொய் எழுதப் போவது (வாக்களிக்கப் போவது) என்னவோ பொதுமக்களாகிய நாம்தான்! எனவே, மேட்ரிமோனி புரொஃபைல்களைப் பார்த்து ஏமாறாமல், நிஜமான நல்ல வரனை (வேட்பாளரை) தேர்ந்தெடுப்பது நம் கையில்தான் உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0