'ஒட்டுமொத்த கிராமத்தினருக்கும் விபத்து காப்பீடு' - மணமகன் குடும்பத்தின் திருமணப் பரிசு வைரல்!

May 26, 2026 - 12:31
0
'ஒட்டுமொத்த கிராமத்தினருக்கும் விபத்து காப்பீடு' - மணமகன் குடும்பத்தின் திருமணப் பரிசு வைரல்!

திருமணத்தை சிலர் மிகவும் ஆடம்பரமாக நடத்துவதுண்டு. திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் மணமக்களுக்கு பரிசு வழங்குவது வழக்கமான ஒன்று.

அதேசமயம் மணமக்கள் வீட்டார் திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு ரிடர்ன் கிப்ட் கைமாறு பரிசு எனப்படும் பரிசு கொடுப்பதுண்டு. மகாராஷ்டிராவில் அது போன்று ஒரு குடும்பம் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்குக் கொடுத்துள்ள ரிடர்ன் பரிசு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் மாவட்டத்தில் உள்ள பஹதுர்பாரா என்ற கிராமத்தில் வசிப்பவர் சித்தேஷ்வர். இவருக்கு குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

திருமணத்தின்போது அக்கிராம மக்களுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டும் என்று சித்தேஷ்வர் குடும்பத்தினர் நினைத்தனர். அவர்கள் வசிக்கும் கிராமத்தில் அடிக்கடி விவசாயிகள் பாம்பு கடித்து அல்லது இடி, மின்னல் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. அவர்களுக்கு காப்பீடு வசதி இல்லாமல் இருப்பதால் எந்த வித நிதியுதவியும் கிடைப்பதில்லை.

திருமணம்
திருமணம்

இதனால் அதிகமான விவசாயிகளின் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இதையடுத்து அது போன்று பாதிக்கப்படும் கிராம மக்கள் அனைவருக்கும் எதாவது ஒரு வகையில் உதவவேண்டும் என்பதற்காக சித்தேஷ்வர் குடும்பத்தினர் அக்கிராமத்தில் வசிக்கும் 3,465 பேருக்கும் சேர்த்து விபத்து காப்பீடு வசதி செய்து கொடுத்துள்ளனர்.

அதாவது கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரது பெயர்களையும் கொடுத்து கிராம பஞ்சாயத்து பெயரில் குழு விபத்து காப்பீடு வசதி செய்து கொடுத்துள்ளனர். காப்பீடு வழங்குவதில் எந்த வித பாரபட்சமும் இருக்கக்கூடாது என்பதற்காக வாக்காளர் பட்டியலைக் கொடுத்து அனைவருக்கும் தலா ஒரு லட்சத்திற்கு இந்தக் காப்பீடு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மதிப்பு ரூ.33.6 கோடியாகும். இந்த பாலிசி ஒரு ஆண்டுக்கு அமலில் இருக்கும். காப்பீடு செய்ய எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்று சித்தேஷ்வரிடம் கேட்டதற்கு, "எங்கள் கலாசாரத்தில், ஈகைச் செயல்களை ஊருக்கெல்லாம் பறைசாற்றப்படுவதில்லை. நாங்கள் கைதட்டல்களை எதிர்பார்க்கவில்லை. நல்வாழ்த்துகளே எங்களுக்குப் போதுமானவை" என்றார்.

"எங்கள் மகிழ்ச்சி எங்கள் வீட்டின் எல்லைகளைத் தாண்டிப் பயணிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்," என்று சித்தேஷ்வரின் மூத்த சகோதரர் அனுப் பேத்கர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், "நாண்டெட்டை சுற்றியுள்ள கிராமங்களில் விபத்து மரணங்கள் மிக அதிக அளவில் நிகழ்கின்றன. இந்தத் திருமணம் வெறும் நினைவுகளை மட்டுமல்லாமல், ஒரு பாதுகாப்பையும் விட்டுச் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்" என்று குறிப்பிட்டார்.

இந்தச் செயலைப் பற்றிய செய்தி அந்தத் தாலுகா முழுவதும் பரவியது. இதன் விளைவாக, 4,500 விருந்தினர்களுடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட திருமணத்திற்கு அதைவிட அதிக விருந்தினர்கள் வந்திருந்தனர்.

திருமணம்
திருமணம்

இது குறித்து பஞ்சாயத்து தலைவர் பாலிராம் கூறுகையில், ''இந்தத் தனித்துவமான செயல், இப்பிராந்தியத்திலேயே ஒருவேளை அதற்கும் அப்பாலும் கூட இதுவே முதல் முறையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

திருமணங்களில் மக்கள் இனிப்புகளையும் நினைவுப் பரிசுகளையும் பரிமாறிக்கொள்வது வழக்கம். ஆனால் இங்கே, ஒரு குடும்பம் பாதுகாப்பையே கையளித்துள்ளது," என்று அவர் கூறினார்.

இத்திருமணத்தை ஒட்டுமொத்த கிராமும் சேர்ந்து கொண்டாடியது. இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் கூறுகையில், “இது ஒரு பிரமாண்டமான கொண்டாட்டமாக அமைந்திருந்தது. இந்தச் செயல் உண்மையிலேயே மறக்க முடியாத ஒன்றாக மாற்றிவிட்டது. இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஒன்றை யாரும் பார்த்ததே இல்லை,” என்று கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User