மேடையில் வெடித்த கலகம்; அமைச்சர், தவெக MLA கோஷ்டி பூசல்! - இடையில் மாட்டி தவித்த காங்கிரஸ் எம்.பி

Oct 05, 2026 - 13:30
0
மேடையில் வெடித்த கலகம்; அமைச்சர், தவெக MLA கோஷ்டி பூசல்! - இடையில் மாட்டி தவித்த காங்கிரஸ் எம்.பி

திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கலையரங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் தயாள், மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் மற்றும் திருவெறும்பூர் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் துவக்கமாக குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, மேடையில் இருந்த எம்.பி கிறிஸ்டோபர் திலக் மெழுகுவர்த்தியை வாங்கி விளக்கை ஏற்ற முயன்றார்.

function

அந்தச் சமயத்தில், அங்கிருந்த தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி, 'புரோட்டாகால்படி எனக்குத்தான் முதலில் விளக்கேற்ற வாய்ப்பு தரப்பட வேண்டும்' என்று கேட்டார். அதற்கு எம்.பி கிறிஸ்டோபர் திலக், 'நான் ஒரு திரியை ஏற்றிவிட்டு உங்களுக்குத் தருகிறேன்' எனக் கூற, அதற்கு நவல்பட்டு விஜி எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது, எம்.பி கிறிஸ்டோபர் திலக் மெழுகுவர்த்தியை நவல்பட்டு விஜியிடம் நீட்டினார். அதன்பிறகு, எம்.எல்.ஏ விஜி, அனைவரது முன்னிலையிலும் எம்.பி-யின் கையில் இருந்த மெழுகுவர்த்தியை திடீரென தட்டிவிட்டார். அரசு விழாவில், அதுவும் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலேயே மக்கள் பிரதிநிதிகள் இருவர் மோதிக்கொண்ட சம்பவம் அங்கிருந்த அதிகாரிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசும் ஆளுங்கட்சியினர்,

"அமைச்சர் ரமேஷூக்கும், எம்.எல்.ஏ நாவல்பட்டு விஜிய்க்கும் இருக்கும் கோஷ்டி பூசல், இப்படி மேடையில் வெடித்திருக்கிறது. அமைச்சருக்கும், நவல்பட்டு விஜிக்கும் எல்லா விஷயங்களிலும் ஆகாமல் போய்விட்டது. அமைச்சர் ரமேஷ் எல்லா மேடைகளிலும் நவல்பட்டு விஜியின் முக்கியத்துவத்தை குறைக்கும்விதமாக செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில்தான், இந்த நிகழ்ச்சியில் முதலில் குத்துவிளக்கேற்றிய அமைச்சர் ரமேஷ், அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றியதும், த.வெ.க எம்.எல்.ஏ-க்களான மணப்பாறை கதிரவன், முசிறி விக்னேஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்ற வாய்ப்பு கொடுத்தார்.

minister ramesh

அதன்பிறகு, காங்கிரஸ் எம்.பி-யான கிறிஸ்டோபர் திலக்கை குத்துவிளக்கேற்ற அழைத்தார். அப்போது குத்துவிளக்கை தட்டிவிட்ட விஜி கோபமாகி 'என்னை ஏன் புறக்கணிக்கிறீங்க?. புரோட்டோகால் தெரியாதா?' என்று அமைச்சரை பார்த்து கேட்டார். அமைச்சர், எம்.எல்.ஏ-க்கு இடையில் உள்ள புகைச்சலில், காங்கிரஸ் எம்.பி சிக்கிக்கொண்டார்" என்றார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User