ரூ.100க்காக போராடிய வழக்கறிஞர்; `ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு பிடிவாரன்ட்' நுகர்வோர் ஆணையம் அதிரடி

Jun 15, 2026 - 13:01
0
ரூ.100க்காக போராடிய வழக்கறிஞர்; `ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு பிடிவாரன்ட்' நுகர்வோர் ஆணையம் அதிரடி

நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகர் என்பவர் கடந்த 2022 பிப்ரவரி 13-ம் தேதி, தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சொந்த காரில் சென்றுள்ளார். ராமேஸ்வரம் நுழைவாயிலில் உள்ள சோதனைச் சாவடியில் அவரது வாகனத்துக்கு நகராட்சி சார்பாக ரூ.100 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

அதற்கான ரசீதையும் நகராட்சி சார்பாக கொடுத்துள்ளனர். அவருக்கு கொடுக்கப்பட்ட ரசீதில் மாநகராட்சி ஆணையர் அல்லது வசூலிப்பவர் கையொப்பம் எதுவும் இல்லை. அத்துடன், அந்த ரசீதில் ஜி.எஸ்.டி நம்பரும் இடம் பெற்றிருக்கவில்லை.

ராமேஸ்வரம் அகரத்துக்குள் நுழையும்போது வழக்கறிஞர் பிரபாகர் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்யச் சென்ற காருக்கு நுழைவுக் கட்டணத்தை வசூலித்திருக்கிறார்கள். ஆனால் அவர் சென்ற காருக்கு பார்க்கிங் வசதியோ பாதுகாப்பு வசதியோ எந்த இடத்திலும் செய்து கொடுக்கப்படவில்லை.

வழக்கறிஞர் பிரபாகர்

இது தொடர்பாக கட்டணம் வசூலித்தவரிடம் பிரபாகரன் கேட்டதற்கு முறையான பதில் அளிக்கப்படவில்லை... அத்துடன், தேவையற்ற அநாகரிகமான வார்த்தைகளில் பேசி அவரை அங்கிருந்து அனுப்பியுள்ளனர். நிம்மதியாக சாமி கும்பிடச் சென்ற வழக்கறிஞர் பிரபாகர், இந்தச் சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார். அவரால் அன்று இரவு நிம்மதியாக உறங்கக்கூட முடியாத அளவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அவரது அன்றாடப் பணிகளைக்கூட கவனிக்க இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த பிரபாகர், நெல்லை வந்து சேர்ந்த பின்னர் வழக்கறிஞர் பிரம்மா மூலம் ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலைச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கு நஷ்ட ஈடாக 2 லட்சம் ரூபாயும் தனக்கு கொடுக்கப்பட்ட நுழைவுக் கட்டண ரசீதை பெற்றுக் கொண்டு 100 ரூபாயையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

10 தினங்களுக்குள் அந்த நோட்டீஸுக்கு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்திருந்தார். ஆனால் நகராட்சி நிர்வாகம் அவரது மனுவைப் பெற்றுக் கொண்டு எந்த பதிலும் அளிக்கவில்லை.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 பிரிவு 2 (7)- ன் படி தான் ஒரு நுகர்வோர். நகராட்சி நிர்வாகம் சட்டப் பிரிவு 2 (11)-ந் படி சேவைக் குறைபாடு செய்துள்ளனர். மேலும் சட்டப் பிரிவு 2 (47)-ன் படி முறையற்ற வாணிபம் செய்திருக்கிறார்கள். அதனால் சேவைக் குறைபாட்டின் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நிவாரணமாக 2 லட்சம் ரூபாயும், தான் செலுத்திய நுழைவு கட்டண ரசீதைப் பெற்றுக் கொண்டு 100 ரூபாயையும் திருப்பிக் கொடுக்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்டக் கூடுதல் நுகர்வோர் ஆணையத் தலைவர் பிறவி பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகபிரியா ஆகியோர், கடந்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி உத்தரவு பிறப்பித்தனர். அதில்,மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.20,000 மற்றும் வழக்குச் செலவுக்கு ரூ.10,000 என மொத்தம் ரூ.30,000 வழங்க உத்தரவிட்டனர்.

நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் வழக்கறிஞர் பிரபாகருக்கு ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் ரூ.30,000 வழங்க உத்தரவிட்டும், பணத்தைக் கொடுக்காமல் அலட்சியம் காட்டப்பட்டது.

அதுவும் 45 தினங்களுக்குள் பணத்தைக் கொடுக்க வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும், ராமேஸ்வரம் நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு எதிராக வழக்கறிஞர் பிரம்மா செயலாக்க மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத் தலைவர் கிளாட்ஸ்டன் பிளஸ்ட் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர், ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User