நடிகை அசின்: 7 வயது மகளுக்கு 12 மொழிகள் தெரியுமா? ஆச்சர்ய திறமையின் உண்மை பின்னணி!
குழந்தைகள் உணவு உண்ண வேண்டுமென்றாலும், அழுகையை நிறுத்த வேண்டுமென்றாலும் ஸ்மார்ட்போன்களும் யூடியூப் காட்சிகளும் கட்டாயமாகிவிட்ட ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். ஆனால், நாட்டின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ‘மைக்ரோமேக்ஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனரே தன் வீட்டில் டிவி, போன் போன்ற எந்தத் திரைகளையும் அனுமதிக்காமல், புத்தகங்களை மட்டுமே கொடுத்து மகளை வளர்த்து வருகிறார் என்பது ஆச்சரிய முரண்.

நடிகை அசின் மற்றும் ராகுல் சர்மா தம்பதியின் 7 வயது மகள் அரின் ரேயன் சர்மா. சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசிய தொழிலதிபர் ராகுல் சர்மா, தங்களது மகள் அரினின் கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி குறித்து வெளிப்படையாகப் பேசினார், "எங்கள் வீட்டில் தொலைக்காட்சி கிடையாது; அரினுக்கு மொபைல் போன்களோ பிற திரைகளோ நாங்கள் அறிமுகப்படுத்தவில்லை. எங்கள் வீடு முழுவதும் புத்தகங்கள் மட்டுமே நிறைந்திருக்கின்றன. சொல்லப்போனால், அரினின் பள்ளிக்கூட நூலகத்தை விட எங்கள் வீட்டில் அதிக புத்தகங்கள் இருக்கும்.
மகள் அரினுக்கு இப்போது 7 வயது தான் ஆகிறது, 2-ம் வகுப்பு படித்து வருகிறார். ஆனால் வீட்டில் 8 மற்றும் 9-ம் வகுப்பு பாடப்புத்தகங்களும் வாசிப்புப் புத்தகங்களுமே குவிந்து கிடக்கின்றன. வேண்டுமானால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை இப்போதே எழுதிவிடலாமா என்று நான் விளையாட்டாகக் கேட்பேன்" என நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
ராகுல் சர்மாவின் கூற்றுப்படி, அரினுக்குப் பல மொழிகளைக் கற்கும் ஆர்வம் மிக இயல்பாகவே வந்துள்ளது. ஆங்கிலம், இந்தி மட்டுமன்றி கொரியன், ஜப்பானிய, தாய், மாண்டரின் சீனம் உள்ளிட்ட சுமார் 12 உலக மொழிகளை அரினால் புரிந்துகொள்ளவும் பேசவும் முடியும்! இதைக் குறிப்பிட்ட ராகுல் சர்மா, "எனக்கு இரண்டு மொழிகளிலேயே தடுமாற்றம் வந்துவிடுகிறது; ஆனால் அரின் 12 மொழிகளை அசால்ட்டாகக் கையாள்கிறாள்" என வியப்புடன் தெரிவித்தார்.
தமிழில் கஜினி, சிவகாசி, போக்கிரி, வரலாறு என முன்னணி நடிகையாகவும், பாலிவுட்டில் கஜினி, ரெடி போன்ற மெகா ஹிட் படங்களில் நடித்தவருமான அசின், 2016-ல் ராகுல் சர்மாவைத் திருமணம் செய்த பிறகு திரையுலகை விட்டு முற்றிலும் விலகினார்.`ஒரு அம்மாவாக தன் மகளின் இத்தனை அறிவுக்கும், முழுக் காரணமும், பெருமையும் அசினையே சாரும்’ என்கிறார் ராகுல்.

அசினும் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம் எனப் பல மொழிகளில் புலமை பெற்றவர். தாயின் மொழி ஆர்வமும் வாசிப்புப் பழக்கமும் மகள் அரினுக்கும் இயல்பாகக் கடத்தப்பட்டுள்ளது. இதை வைத்தே "வெளியுலகில் பெரும் தொழில் போட்டிகளை எதிர்கொள்ளும்போது, வீட்டை ஒரு சமநிலையான, ஒழுக்கமான இடமாகப் பராமரித்து, அரினின் கற்றலை நேர்த்தியாக வழிநடத்துவது அசின்தான்" என ராகுல் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
ராகுலின் பேச்சு ஏன் சமூக வலைதளங்களில் விவாதத்துக்கு உள்ளானது எனில், குழந்தைகள் அதிக நேரம் திரையைப் பார்ப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை, பேச்சுத்திறன் தாமதம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்து வரும் வேளையில், இந்த 'Screen-Free Parenting' அணுகுமுறை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வீடியோக்களாகப் பார்ப்பதை விட, எழுத்துக்களை வாசிக்கும்போது மூளையின் கற்பனைத் திறனும் மொழித்திறனும் பன்மடங்கு அதிகரிக்கிறது என்பதற்கு அரினின் வளர்ச்சியே சான்றாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஸ்மார்ட்போன் நிறுவன அதிபரே தன் குழந்தைக்கு போன் கொடுக்காமல் புத்தகங்களை மட்டுமே கொடுத்து வளர்ப்பது, இன்றைய டிஜிட்டல் உலகின் தீவிரத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது. குழந்தைகளை வளர்ப்பதில் ‘அதிகாரபூர்வ விதிகள்’ என்று எதுவும் இல்லை என்றாலும், ஒரு குழந்தையின் குழந்தைப் பருவத்தை எந்தப் பழக்கங்கள் வடிவமைக்கின்றன என்பதில் பெற்றோரின் தினசரி தேர்வுகளே பெரும் பங்காற்றுகின்றன. அசின் மற்றும் ராகுல் சர்மா தம்பதி அமைத்துக் கொடுத்த வாசிப்புச் சூழல், அரினின் தனித்திறமையை வெளிக் கொண்டுவர ஒரு வலுவான அடித்தளமாக அமைந்திருக்கிறது.
குழந்தைகள் திரைக்கு அடிமையாகாமல் வளர வேண்டுமெனில், அதற்கு மாற்றாக அறிவூட்டும் புத்தகங்களையும், பெற்றோரின் நேரடியான கவனத்தையும் தர வேண்டும் என்பதுதான் இந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் செய்தி.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)