"எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்; அதனால்..." - சிம்புதேவன்
இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'நவோரியா' திரைப்படம் டிசம்பர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது.
இத்திரைப்படம் பற்றிச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.

அவர் பேசுகையில், "இந்தப் படம் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. ஏ.ஐ தொழில்நுட்பம் எல்லாம் வந்துவிட்டதாக நாம் மொபைலில் பார்க்கிறோம்.
ஆனால், மொபைலில் இருக்கும் அந்தத் துல்லியம் இன்னும் பெரிய திரைக்கு வரவில்லை. 4K தரத்தில் காட்சிகள் ஏ.ஐ மூலம் கிடைப்பதில்லை. இப்போதைக்கு ஆங்காங்கே சில பேட்ச் ஒர்க் பணிகளுக்கு மட்டுமே அவை பயன்படுகின்றன.
இது ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும். குறிப்பாக, குழந்தைகளுக்கான சிறந்த பொழுதுபோக்குப் படமாக அமையும். திரையரங்கிற்குள் வந்தால், நம்மை மறந்து சிரிக்கும் வகையில் 100% பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த 'நவோரியா' உங்களைக் கவரும்" என்றார்.
இயக்குநர் சிம்புதேவனின் படங்களில், எப்போதும் அவரின் கதாபாத்திரத்தின் பெயர்கள் வித்தியாசமாக, நகைச்சுவை அம்சத்தோடு இருக்கும்.
அது குறித்துப் பேசியவர், "நான் அடிப்படையில் ஒரு கார்ட்டூனிஸ்டாக இருந்ததால், இது போன்ற வித்தியாசமான பெயர்களையும் கதாபாத்திரங்களையும் என்னால் எளிதாக உருவாக்க முடிகிறது.
அங்கிருந்து கிடைத்த அனுபவம்தான் இதற்குக் காரணம். ஒரு இயக்குநர் கட்டாயம் எழுத்தாளராகவும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

ஆனால், எழுத்தாளராகவும் இருக்கும்போது இதுபோன்ற விஷயங்கள் படத்திற்குக் கூடுதல் பலமாக அமையும்" என்றவர் முதல்வர் விஜய் பற்றி, "விஜய் சார் மிகவும் நேர்மையாகவும், முழு அர்ப்பணிப்புடனும் பணியாற்றக்கூடிய நபர். எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்.
அதனால், நான் அவரைப் போய்த் தொந்தரவு செய்ய விரும்பவில்லை, அவ்வளவுதான். நாங்கள் எப்போதும் தொடர்பில் இருக்கிறோமே தவிர, தொடர்பில் இருக்கிறோம் என்பதற்காக எல்லா இடத்திலும் உள்ளே போய் நுழைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை" எனப் பேசினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)