'இப்போது அடிவார முகாம்; அடுத்து எவரெஸ்ட் சிகரம்!' - சவாலான மலையேற்றத்தில் சாதித்த கரூர் சிறுவன்
கரூரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் துருவ், தனது தந்தையும், கரூர் ரன்னர்ஸ் அமைப்பின் நிறுவனருமான அருண் ராஜேந்திரனுடன் இணைந்து இந்தச் சவாலான மலையேற்றப் பயணத்தை மேற்கொண்டார். கடல் மட்டத்திலிருந்து 5,364 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் அடிவார முகாமைச் சென்றடைவதற்காக, கடந்த அக்டோபர் 10-ம் தேதி நேபாளத்தின் லுக்லா பகுதியில் இருந்து இவர்களது பயணம் தொடங்கியது.

தொடர்ந்து, ஏழு நாட்கள் நடைபெற்ற இந்தப் பயணத்தின் முடிவில், அக்டோபர் 16-ம் தேதி இருவரும் எவரெஸ்ட் அடிவார முகாமைச் சென்றடைந்தனர். இந்தப் பயணத்தின்போது, சுமார் 70 கிலோமீட்டர் தூரம் மலையேற்றம் மேற்கொண்டதுடன், கடும் குளிரையும், சவாலான மலைப்பாதைகளையும் கடந்து சென்றுள்ளனர். குறிப்பாக, மைனஸ் 9 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவிய சூழலிலும் மன உறுதியுடன் பயணத்தைத் தொடர்ந்து சிறுவன் துருவ் இலக்கை அடைந்துள்ளார். கும்பு மலைப்பகுதியைச் சேர்ந்த அனுபவமிக்க மலையேற்ற வழிகாட்டி பசாங் ஷிரிங் ஷெர்பா தலைமையில் இந்தப் பயணம் நடைபெற்றது.
எவரெஸ்ட் அடிவார முகாமைச் சென்றடைந்த தந்தையும் மகனும், அங்கு இந்திய தேசியக் கொடியைப் பிடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, கரூருக்குத் திரும்பிய சிறுவன் துருவின் சாதனையைப் பாராட்டி, திருக்குறள் பேரவை, கரூர் வரலாற்றுப் பாதுகாப்புச் சங்கம், ரோட்டரி ஏஞ்சல், சேவா பாரதி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிறுவன் துருவ்,

"எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்த அனுபவம் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மலையேற்றப் பயணம் எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையும் அளித்துள்ளது. இப்போது எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்துள்ளேன். வரும் காலத்தில் எவரெஸ்ட் சிகரத்தை அடைவதே எனது அடுத்த இலட்சியம். அந்த லட்சியத்தையும் அடைவேன்" என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)