அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி; தவெக அமைச்சருக்குத் தொடர்பா? - காவல்துறை விளக்கம்

Oct 08, 2026 - 11:30
0
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி; தவெக அமைச்சருக்குத் தொடர்பா? - காவல்துறை விளக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், மேலசூரங்குடியைச் சேர்ந்த சகாயராஜா என்பவரது மகள் ஆன்சிலின் சுஜி (23) என்பவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தனது உறவினர்கள் ரூ.15 லட்சம் பெற்று ஏமாற்றியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். ​

அந்தப் புகார் மனுவில் அவர் கூறியுள்ளதாவது, "கல்லூரிப் படிப்பை முடித்து கோவையில் பணிபுரிந்து வந்த நிலையில், துவரங்காட்டைச் சேர்ந்த உறவினர்களான பாஸ்கர் ராஜ், அவரது மகன் ராஜேஷ், மனைவி டெய்சிபாய் ஆகியோர் என்னை அணுகி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறினர்.

அதை நம்பி எனது திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த நகைகளை அடமானம் வைத்து கடந்த பிப்ரவரி 19-ம் தேதி ரூ.13 லட்சமும், பின்னர் மே 26-ம் தேதி நாகர்கோவிலில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகம் அருகே வைத்து அக்கட்சியின் நிர்வாகி மூலமாக ஏற்பாடு செய்வதாகக் கூறி ரூ.2 லட்சமும் என மொத்தம் ரூ.15 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு ஒப்பந்தப் பத்திரம் எழுதிக் கொடுத்தனர்.

தொடர்ந்து சென்னைக்கு அழைத்துச் சென்று, மெரினா கடற்கரையில் கல்வித்துறை அமைச்சரின் உதவியாளர் எனக் கூறி ஐயப்பன் என்பவரை அறிமுகம் செய்து வைத்து விரைவில் பணி ஆணை வரும் என உறுதியளித்தனர். ஆனால், பல மாதங்களாகியும் வேலை கிடைக்காததால் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.

காவல்துறை அளித்துள்ள விளக்கம்
காவல்துறை அளித்துள்ள விளக்கம்

இது தொடர்பாக ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு பணத்தை மீட்டுத் தர வேண்டும்" என ஆன்சிலின் சுஜி குறிப்பிட்டிருந்தார்.

இப்புகாரின் பேரில் சமூக வலைத்தளங்களில், தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் பெயரில் பணம் பெறப்பட்டதாக தகவல்கள் பரவி சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்நிலையில், இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறை சார்பில் மறுப்பு மற்றும் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம் மேலச்சூரங்குடியைச் சேர்ந்த ஆன்சுலின் சுஜி என்பவரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பாஸ்கர்ராஜ், ராஜேஷ் மற்றும் டெய்சிபாய் ஆகியோர் பணம் பெற்றதாகவும், இப்பணம் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் பெயரில் பெறப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ​

ஆன்சுலின் சுஜி என்பவர் அளித்த புகார் மனுவின் அடிப்படையில், ஆசாரிப்பள்ளம் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார். ​முதற்கட்ட விசாரணையில், வேலை வாங்கித் தருவதாகக் கூறி 19.02.2026 அன்று ரூ.13 லட்சம் பணம் பெறப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

மேலும், மேற்கண்ட பணப் பரிவர்த்தனை தற்போதைய அரசு அமைவதற்கு முன்பாகவே நடைபெற்றதாகவும் தெரியவந்துள்ளது.

குமரி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்த ஆன்சிலின் சுஜி
குமரி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்த ஆன்சிலின் சுஜி

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேற்கண்ட பணப் பரிவர்த்தனையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்குத் தொடர்பு அல்லது ஈடுபாடு இருந்ததாக நிரூபிக்கும் எந்தவித ஆதாரமோ அல்லது விசாரணை முடிவோ கிடைக்கவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், புகார் மனுவின் மீது, சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  

​எனவே, பொதுமக்கள் உறுதி செய்யப்படாத தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிரவோ, பரப்பவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொய்யான, தவறாக வழிநடத்தும் அல்லது உறுதி செய்யப்படாத தகவல்களைத் திட்டமிட்டு பரப்புவோர் மீது சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது".

இவ்வாறு காவல்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User