வாழ்க்கைச் சக்கரத்தைப் பிரதிபலிக்கும் சிலை கரைப்பு தத்துவம்!

Sep 18, 2026 - 23:30
0
வாழ்க்கைச் சக்கரத்தைப் பிரதிபலிக்கும் சிலை கரைப்பு தத்துவம்!

இறை நம்பிக்கை தனி மனிதனுடைய உணர்வுகளைப் பொறுத்தது. பொதுவாக இறைவனுக்கு நடத்தப்படும் பூஜைகள் வீடுகளில் குடும்பத்தாருடன் இணைந்து செய்வார்கள். கோவில்களில் பக்தர்கள் ஒன்று கூடி, கோவிலின் அர்ச்சகர் செய்யும் பூஜையில் கலந்து கொள்வார்கள். ஆனால், விநாயகர் சதுர்த்தி, வீடுகள் மற்றும் கோவில்கள் தவிர நாடு முழுவதும், பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து, கலை நிகழ்ச்சிகள் நடத்தி அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி, பல மாநிலங்களிலும் நடக்கும் நாடு தழுவிய நிகழ்ச்சி என்று சொல்லலாம். இந்த வளர்ச்சிக்குக் காரணமானவர்கள் யார்?

விநாயகர் சிலை கடலில் கரைக்கும் நிகழ்வு முன்னேற்பாடுகள்

இந்து புராணங்களின் படி, பார்வதி தேவி, விநாயகரைப் படைத்து அவருக்கு உயிர் கொடுத்தார். விநாயகர், பார்வதி தேவியின் காவலனாக இருக்கும் போது, சிவபெருமான் உள்ளே நுழைய அனுமதி மறுத்தார். சீற்றம் கொண்ட சிவபெருமான், தன்னைத் தடுத்த விநாயகரின் தலையைத் துண்டித்தார். துக்கத்தில் ஆழ்ந்த பார்வதி தேவியை சாந்தப்படுத்த, விநாயகரை உயிர்பித்த சிவபெருமான், அவருடைய தலையை ஆனை முகமாக மாற்றினார்.

மேலும், விநாயகருக்கு தெய்வங்களின் முதன்மையானவர் என்ற கௌரவத்தை அளித்தார். எந்த பூஜை என்றாலும், எந்த விசேஷம் என்றாலும் முதலில் செய்வது பிள்ளையார் பூஜை. அவரை முதலில் வணங்கி எதைச் செய்தாலும், தடைகள் ஏதேனும் ஏற்பட்டால், அதனை அகற்றுவார் பிள்ளையார் என்பது நம்பிக்கை. இதனால், பிள்ளையாரை விக்னேஸ்வரன் என்றும் விக்ன விநாயகர் என்றும் அழைக்கிறோம்.

விநாயகரை தடைகளை நீக்குபவர், கலை, அறிவியல் ஊக்குவிப்பவர், புத்தி சாதுரியத்தை  அளிப்பவர், ஞானத்தின் தெய்வம் என்று பல வகையாலும் போற்றப்படுபவர். விநாயக சதுர்த்தி, அவரது பிறந்த நாள். இந்த நாள் ஆவணி மாதம், வளர் பிறை (சுக்ல பட்சம்) நான்காவது நாள் (சதுர்த்தி) அன்று அனுசரிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி திருவிழா பொதுவாக பத்து நாள் நீடிக்கும். அந்த நாட்களில் அலங்கரித்த பந்தல்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து, எல்லா நாட்களிலும் பூஜை செய்து, பிரசாதம் விநியோகித்து, இரவில் கலை நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டாடுவார்கள். பத்தாவது நாள் பூஜைக்குப் பிறகு விநாயகர் சிலை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கலக்கப்படும்.

புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம்
புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம்

மராட்டிய சாம்ராஜ்யத்தை ஆண்ட சத்ரபதி சிவாஜி, பேஷ்வா வம்சத்தைச் சேர்ந்தவர். விநாயகர் அவர்களின் குல தெய்வம். தனது மக்களின் நாட்டுப் பற்றினை வளர்க்க முற்பட்ட சத்ரபதி சிவாஜி, தெய்வ பக்தி, தேச பக்தி ஆகியவற்றை ஒன்றிணைத்து விநாயக சதுர்த்தியை மக்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து கொண்டாடும் பண்டிகையாக மாற்றினார். 

ஆன்மீகம் கலந்த தேசியம் மகாத்மா காந்தியின் கொள்கை. அதன்படி, ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மக்களைத் திரட்ட, “சுதந்திரம் எனது பிறப்புரிமை” என்ற கோஷத்தை முன் வைத்த சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் எடுத்த இடைவிடா முயற்சியால், கணேஷ் சதுர்த்தி குடும்பப் பண்டிகை என்ற நிலையிலிருந்து பொது கொண்டாட்டமாக உருவெடுத்தது. 

இந்தியாவை ஆண்டு வந்த பிரிட்டன் அரசு சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, 1870 ஆம் ஆண்டு, 20 நபர்களுக்கு மேல் இருக்கும் கூட்டங்களைத் தடை செய்தது. ஆனால், வெள்ளிகிழமை மசூதியில் நடக்கும் பிரார்த்தனைக்கு கூட்டம் அதிகம் கூடும் என்பதால் இந்தத் தடைக்கு இந்திய முஸ்லீம்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். ஆகவே, மத சம்பந்தமான கூட்டங்களுக்குத் தடை கிடையாது என்று அரசு அறிவித்தது.  

1893ஆம் ஆண்டு, மகாராஷ்ட்ரா புனே நகரில், இந்து சமயத்தின் பல உட் பிரிவுகளை. பிரிட்டன் அரசுக்கு எதிராக ஒன்றிணைக்கும் முயற்சியாக பாலகங்காதர திலகர் கணேச சதுர்த்தி கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். இதைப் பற்றி, அவர் நடத்தி வந்த கேசரி என்ற  மராட்டி மொழி பத்திரிகையில் எழுதி மக்களைத் திரட்டினார். எல்லா இடங்களிலும் விநாயகரின் பெரிய சிலைகளை நிறுவி, அதில் அந்தப் பகுதி மக்களை ஈடுபடுத்தி, இந்த நிகழ்ச்சியை அறிவு பூர்வமான மற்றும் கலைகளை வளர்க்கும் நிகழ்ச்சியாக மாற்றினார் திலகர். இந்த கொண்டாட்டங்களில் ஆடல், பாடல், நாடகம் ஆகியவை இடம் பெற்றன. ஆன்மீகப் போர்வையில், தலைவர்கள், தொண்டர்களுடன் கலந்து அரசியல் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ள இந்த நிகழ்ச்சிகள் உதவின.

பூனே நகரில் ஆரம்பித்த இந்த சதுர்த்தி விழா, மகாராஷ்ட்ரா எங்கும் பரவி, தற்போது நாடு முழுவதும் நடை பெறும் விழாவாக உருவாகியுள்ளது.

சதுர்த்தி விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தப் பத்து நாட்களும் பிள்ளையார் நம்மோடு இருந்து, நம் வேண்டுதலுக்கு செவி சாய்த்துப் பின் விடை பெருகிறார். பத்தாவது நாள் அனந்த சதுர்தசி. அன்று விநாயகர் பூஜை முடித்துப் பின் விநாயகர் சிலையை நீர் நிலைகளில் கரைப்பதுடன் சதுர்த்தி பூர்த்தி அடைகிறது. இதனை விசர்ஜன் என்பார்கள். 

விநாயகர் சிலையை நீர் நிலையில் கரைப்பது நம்முடைய வாழ்க்கைச் சக்கரத்தைப் பிரதிபலிக்கிறது. உயிர் நீத்தவனின் புதைக்கப்பட்ட உடல் மண்ணுடன் கலக்கிறது அல்லது எரியூட்டப்பட்டால், அவனது சாம்பல் நீர் நிலைகளில் கரைக்கப் படுகிறது. மறுபிறப்பின் போது அவனுக்கு வேறு உடல் வந்து சேருகிறது.

இதைப் போலவே பூஜை முடிந்தவுடன், நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்ற, பிள்ளையார் பொம்மையின், மூலப் பொருளான களிமண் கரைந்து நீர் நிலையின் அடியில் தங்குகிறது. அடுத்த முறை, இந்தக் களிமண் கொத்தி எடுக்கப்பட்டு பிள்ளையார் சிலை செய்ய உபயோகிக்கப் படுகிறது. 

சுற்றுச் சூழல் மாசு படாத வகையில் விநாயக சதுர்த்தி கொண்டாடி மகிழ்வோம்.

-கே.என்.சுவாமிநாதன், சென்னை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User