தொடரும் பெண்களுக்கு எதிரான சமத்துவமின்மை: `இலக்கு 2030; எட்டப்போவதோ 2197!' - ஐ.நா அறிக்கை

Sep 18, 2026 - 14:00
0
தொடரும் பெண்களுக்கு எதிரான சமத்துவமின்மை: `இலக்கு 2030; எட்டப்போவதோ 2197!' - ஐ.நா அறிக்கை

2030-ம் ஆண்டுக்குள் பாலின சமத்துவத்தை அடைய வேண்டும் என்ற உலகளாவிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய முன்னேற்ற வேகத்தின்படி பார்த்தால் அந்த இலக்கு 2197-ம் ஆண்டில்தான் சாத்தியமாகும் என ஐ.நா.வின் சமீபத்திய ‘Gender Snapshot’ அறிக்கை எச்சரித்துள்ளது. பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் பொருளாதார உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

2030 இலக்கு... எங்கு நிற்கிறது நிலை?

ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளில்(SDG) ஐந்தாவது இலக்கு, பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சம உரிமை மற்றும் வாய்ப்புகளை உறுதி செய்வதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், 2030-ம் ஆண்டுக்குள் இந்த இலக்கின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட எந்த முக்கியக் குறியீடும் உலக அளவில் இலக்கை எட்டும் பாதையில் இல்லை என அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவது, வன்முறையைத் தடுப்பது, அரசியல் மற்றும் முடிவெக்கும் துறைகளில் பங்களிப்பை அதிகரிப்பது, பொருளாதார மற்றும் சொத்து உரிமைகளை உறுதி செய்வது போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கி இருந்தாலும், களத்தில் முன்னேற்றம் மிகவும் குறைவாகவே உள்ளது.

அரசியலில் இன்னும் தொடரும் ஆண்கள் ஆதிக்கம்

நடப்பு ஆண்டில் உலக நாடுகளின் தேசிய நாடாளுமன்றங்களின் கீழவை அல்லது ஒற்றை அவைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் வெறும் 27.4 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. கடந்த 2015-ல் இது 22.3 சதவிகிதமாக இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளின் இந்த மெதுவான முன்னேற்ற வேகம் தொடர்ந்தால், நாடாளுமன்றங்களில் முழுமையான பாலின சமத்துவத்தை அடைய 2064 வரை ஆகலாம் என ஐ.நா. கணித்துள்ளது.

அதேபோல், உலகளவில் தேசிய அமைச்சரவைகளில் பெண்களின் பங்கு 22.4 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. நாடாளுமன்றத் தலைவர்களாகப் பொறுப்பு வகிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் 19.9 சதவிகிதமாக குறைவான நிலையிலேயே தொடர்கிறது.

சமத்துவத்தை முன்னெடுக்கும் அமைப்புகளுக்கே சிக்கல்

பெண்களுக்கான சமத்துவக் கொள்கைகளை உருவாக்கிச் செயல்படுத்தும் அரசு அமைப்புகளின் அதிகாரமும் கட்டமைப்பும் குறைந்து வருவது மற்றொரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இத்தகைய அமைப்புகளில் மூன்றில் ஒரு பகுதி பேர், தங்கள் அரசியல் அதிகாரம் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், நான்கில் ஒரு பகுதி அமைப்புகள் நேரடியாக நிதிக் குறைப்பை எதிர்கொண்டுள்ளன.

இதன் நேரடித் தாக்கம் பெண்களின் உரிமைகள் தொடர்பான கொள்கைகள் மற்றும் அவற்றை அடிமட்ட அளவில் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளிலும் பெரிய தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட இடைவெளிகளும் வன்முறையும்

உலகில் எந்த ஒரு நாடும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான முழுமையான சட்ட சமத்துவத்தை இன்னும் எட்டவில்லை என்பதே நிதர்சனம். 131 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் வேலைவாய்ப்பு, ஊதியம், பாகுபாடு தடுப்பு அல்லது நில உரிமை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் கடுமையான சட்டரீதியான இடைவெளிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனுடன் சேர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறையும் உலகளாவிய அச்சுறுத்தலாகத் தொடர்கிறது. உலகளவில் சுமார் மூன்று பெண்களில் ஒருவர் தங்களது வாழ்நாளில் பாலியல் அல்லது நெருக்கமான துணையால் ஏற்படும் வன்முறையை எதிர்கொள்வதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.

பாலின சமத்துவத்தை 2030-க்குள் அடைவதற்கான காலக்கெடு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தற்போதைய முன்னேற்ற வேகம் மாறாவிட்டால் இலக்கு மேலும் பல நூற்றாண்டுகள் தள்ளிப்போகும் அபாயம் உள்ளது. இந்த ஐ.நா.வின் நீண்ட காலக் கணிப்பு, சமத்துவத்துக்கான பயணத்தை அரசுகள் உடனடியாக வேகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User