மலேரியா, மண்ணீரல் பாதிப்பு: உடல் நலம் மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகள்| மேட்டூர் அணை ஓசை 40

Oct 15, 2026 - 12:00
0
மலேரியா, மண்ணீரல் பாதிப்பு: உடல் நலம் மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகள்| மேட்டூர் அணை ஓசை 40

உலகின் வெப்ப மண்டல நாடுகளில் மேட்டூர் போன்ற பெரிய நீர்ப்பாசன திட்டங்கள் மேம்பட்ட நீர் வழங்குதலுக்காக மேற்கொள்ளப்படுகிறது. ஏராளமான அகழ்வுகள், கற்களை தோண்டி எடுப்பதற்கும், மண்ணை அப்புறப்படுத்துவதற்கும் நடைபெறுகின்றன. மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் நீர் நிரம்பி மலேரியாவை பரப்பும் கொசுக்களை உற்பத்தி செய்யும் இனப்பெருக்க இடங்களாக அவை மாறுகின்றன. அதேபோல பெரிய திட்டங்களை கட்டுமானம் செய்ய அதிக அளவில் தொழிலாளர்கள் குடியமர்த்தப்படுகின்றனர். அவர்களில் சிலர் மலேரியாவில் பாதிக்கப்பட்டு அதை பரப்பும் தன்மை கொண்டவர்களாகவும் இருக்கக்கூடும்.

ஆனால், அவர்கள் அனைவரும் ஒரே குடியிருப்புகளில் வசிக்க நேரிடும் போது அந்த "கேரியர்கள்" மூலமாக ஆரோக்கியமானவர்களுக்கும் மலேரியா பரவும் சாத்தியக்கூறு இருக்கிறது. இந்த மலேரியா தொற்று பரவுவதினால் தொழிலாளர்களின் செயல் திறன் இழப்பு மற்றும் வேலை தாமதம் ஏற்படுகிறது. இந்த ஆபத்தை உணர்ந்து மேட்டூர் அணைத் திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து கொசுக்களை ஒழிக்கும் போராட்டத்தை நிர்வாகம் முன்னெடுத்தது.

அதன்படி மலேரியா தொற்று மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற சுகாதார அலுவலர் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவக் குழு பணியமர்த்தப்பட்டு மலேரியா தொற்றை கட்டுப்படுத்தவும், குடியிருப்பு மற்றும் வேலை முகாம்களில் பொது சுகாதாரம் பேணவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முதலில் அனைத்து கிராமங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டது. பல இடங்களில் குழந்தைகளின் 'மண்ணீரல்' வீங்கி பெரிதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அணையை சுற்றியுள்ள கிராமங்களில் எந்த அளவுக்கு மலேரியா பாதிப்பு இருக்கிறது என்பதற்கான உறுதியான அறிகுறிகள் ஆகும். காவிரி ஆற்றின் வலது கரையில் உள்ள மேட்டூர் முகாமும் இடது கரையில் உள்ள ‘சேலம் கேம்ப்’ எனும் முகாமிலும் மலேரியா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இரண்டு தனித்தனி பிரிவுகளாக கருதப்பட்டன. தீவிர மலேரியா எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

காவிரி ஆற்றின் பூகோள அமைப்பு

மேட்டூர் பகுதி மேற்கே பாலமலை மலைப்பகுதிக்கு கிழக்கே ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியாகும். இது 2 மைல் நீளமும் 3000 அடி அகலமும் கொண்ட நீளமான பகுதியாகும். நிலமானது பாலமலை அடிவாரத்திலிருந்து ஆற்றை நோக்கி மிகவும் செங்குத்தான சாய்வாக உள்ளது. எனவே, ஊரில் மழை பெய்த ஒரு மணி நேரத்திற்குள் மழை நீர் அனைத்தும் தரையில் ஓடிச் சென்று ஆற்றில் கலந்து விடுகிறது.

மேட்டூரில் ஓடும் காவிரி ஆறு வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பாயும். இது சுமார் 1200 அடி அகலம் கொண்டது. ஆனால், வெள்ளம் அதிகம் வராத கோடை காலங்களில் சீத்தாமலையின் அடிவாரத்தில் 200 அடி அகலம் மட்டுமே ஆற்றில் நீர் இருக்கும். ஆற்றின் படுகை முழுவதும் பாறைகள் மற்றும் மணல்மேடுகள் நிறைந்திருக்கும் பகுதியாகும் இது. வெள்ளம் வடிந்து குறைவாக ஓடும் காலங்களில் ஆங்காங்கே நீர் தேங்கி கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய, மிகவும் வசதியான இடங்களாக இவை மாறிவிடுகிறது. இந்த சிறு குளங்களில் சரியான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் அவை விரைவாக கொசு "லார்வாக்களாக" மாறிவிடும்.

கொசுக்கள் உற்பத்தியாவதற்கும், பெருகுவதற்கும் வாய்ப்புகள் உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டது. ஆற்றுப்படுகை, மலையிலிருந்து ஆறு நோக்கி வரும் நீரோடைகள், மழை நீரினால் ஏற்படும் ஆழமற்ற குளங்கள், மதகுகள் வழியே செல்லும் கால்வாய்கள், கொத்து வேலை நடக்கும் கட்டடப் பகுதிகளில் தேங்கி நிற்கும் நீர், மலைகளில் உள்ள பாறைகளில் தேங்கும் சிறிய குளங்கள், பாசனக் கிணறுகள் மற்றும் குடிநீர் கிணறுகள் போன்றவை அந்த இடங்களாகும்!

எடுக்கப்பட்ட மலேரியா எதிர்ப்பு நடவடிக்கைகளை பின்வருமாறு விளக்கலாம்:-

கச்சா எண்ணெய் மற்றும் மண்ணெண்ணெய் கலவையுடன் தேங்கி நிற்கும் குளங்களில் தெளிப்பான் மூலம் தெளிக்கப்பட்டது. ஒரு கேலன் கலவை 4500 சதுர அடி பரப்பளவுக்கு தெளிக்க அப்போது 7 அனா செலவு பிடித்தது!

"பாரிஸ் கிரீன் "என்ற ரசாயனம் தெளிப்பதன் மூலம் மலேரியா பரப்பும் கொசுக்களின் முட்டைகளை அழித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஓடைகளை நீட்டித்து கால்வாய்கள் அமைத்து மழை நீர் ஓரிடத்தில் தேங்கி நிற்காமல், அதன் மூலம் கொசுக்களின் உற்பத்தி தடுக்கப்பட்டது.

கால்வாய்களின் குறுக்கே "எண்ணெய் தட்டிகள்" வைக்கப்பட்டு அதன் மூலம் கச்சா எண்ணெய் கசியும் படி அமைத்து சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் நீரோடைகள் சுத்தப்படுத்தப்பட்டது.

நீர்த்தேக்கத்தில் கோடை காலங்களில் ஏற்படும் தேங்கி நிற்கும் குளங்களில் எண்ணெய் மிதவைகள் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு குடியிருப்புகளிலும் கண்காணிப்பு செய்வதற்கு கூலி "பணியாளர்கள்" பணிக்கு அமர்த்தப்பட்டனர். காய்ச்சல், தலைவலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் எவரிடத்திலும் தென்பட்டால் உடனடியாக அவர்களை இனங்கண்டு துப்புரவு ஆய்வாளரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது அவர்களது முக்கிய கடமையாகும். (உளவுத்துறை?) தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களிடம் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 21 நாட்கள் அவர்கள் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டனர்.

( கொரோனா தொற்று சமயத்தில் கிபி 2020-ல் செய்தது போலவே இந்த நடவடிக்கைகள் ஒத்து இருக்கின்றன).

மருந்துகள் நேரடியாக சுகாதார ஊழியர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி மலேரியா பரவலின் "கண்ணிகள்" உடைக்கப்பட்டு பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தடுப்பு மருந்துகளும் அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டது.

மேட்டூரில் மேற்கொள்ளப்பட்ட மலேரியா தடுப்பு பணிகளின் முடிவுகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ஒரிஜினல் பழைய மேட்டூர் கிராமத்தில் சுமார் 200 பேர் கொண்ட மக்கள் தொகையே ஆரம்பத்தில் இருந்தது. அணை கட்டுமானம் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருந்த ஒரு சமயத்தில் சுமார் 18000 பேர் மேட்டூரில் வசித்தார்கள்.

வளர்ச்சி விகிதத்தில் கூறுவதானால் சுமார் நூறு மடங்கு. இவ்வளவு பெரிய மக்கள் தொகை அதிகரிப்பு இருந்தபோதிலும் இவர்களில் குறிப்பிடத்தக்க அளவு மக்கள் மேட்டூரைச் சுற்றியுள்ள மலேரியா பாதிப்புக்குள்ளான கிராமங்களில் இருந்து மேட்டூருக்கு வந்து குடியேறியவர்களே! எனினும் மேட்டூர் குடியிருப்புகள் மலேரியா தொற்றிலிருந்து விடுபட்டது மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகள், கொசுக்களை அழிப்பது மற்றும் லார்வாக்கள் பெருகாமல் தடுப்பது போன்ற முறையான நடவடிக்கைகள் மூலம் மட்டுமே மலேரியாவை கட்டுக்குள் கொண்டு வந்து ஒரு கட்டத்தில் மலேரியா கிட்டத்தட்ட மறையும் நிலைக்கு தள்ளப்பட்டது.

மக்களில் "மண்ணீரல்" பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம், 25 சதவீதத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு சதவீதமாக குறைந்தது. மலேரியாவால் ஏற்படும் இறப்பு மற்றும் நோயுற்ற தன்மை வெகுவாக குறைந்தது. இதனால் தொழிலாளர்கள் விடுமுறை எடுப்பது குறைந்து கட்டுமானப் பணிகள் தொய்வின்றி வேகமாக நடைபெற உதவியாக இருந்தது.

மலேரியா எதிர்ப்பு பணிகள் மட்டுமின்றி மற்ற சுகாதார நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஒட்டுமொத்த குடியிருப்புகளுக்கு நல்ல பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது.

சிறந்த வடிப்பான்கள் (FILTERS) பொருத்தப்பட்டு குளோரின் கலந்த சுத்தமான நீர் வேலை நடக்கும் அனைத்து பகுதிகளுக்கும், குடியிருப்புகளுக்கும் விநியோகிக்கப்பட்டது.

மேட்டூரில் மூன்று விதமான குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் முறைகள் செயல்படுத்தப்பட்டன.

1. மேட்டூர் முகாமின் முக்கியப் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் என்ற அமைப்பு இருந்தது. கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்படும் நீரின் மூலம் வாழை, மிளகாய், ஆமணக்கு மற்றும் யானை புல் வகைகள் பயிரிடப்பட்டு வெற்றிகரமாக வளர்க்கப்பட்டன.

2. அதிகாரிகளின் பங்களாக்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், பங்களாக்களின் இணைக்கப்பட்ட தோட்டங்களுக்குள் திருப்பி விடப்பட்டு அங்கு பராமரிப்பு செய்யப்பட்டது.

3. குடிசைகளில் இருந்து வெளியேறும் நீர் ஆற்றில் விடப்பட்டது. "சேலம் கேம்ப்" பகுதியில் வடிகால் தரை மேற்பரப்பில் செல்லும்படி அமைக்கப்பட்டது. ஒரு பெரிய "செப்டிக் டேங்கில்" சேகரிக்கப்பட்டு அதிலிருந்து வெளியேறும் நீர் ஒரு சிறிய கழிவுநீர் பண்ணையில் அடையும்படி அமைக்கப்பட்டன.

கழிவு நீர் அமைப்பு - மேட்டூர் நகரியம்

குப்பைகள் எரியூட்டிகள் மூலம் அகற்றப்பட்டன. தகுந்த விகிதத்தில் களிமண்ணுடன் கலந்து பிறகு தோட்ட எருவாக பயன்படுத்தப்பட்டன. மேட்டூரில் "கூலி லைன்" என்று கூறப்பட்ட தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளில் சிறப்பாக தண்ணீர் குழாய்களுடன் அமைக்கப்பட்ட கழிவறைகள் அமைக்கப்பட்டன. இந்த பொது கழிப்பறைகள் கட்டப்பட்ட காலத்தில் நவீன கழிப்பறைகளாக மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருந்தது.

பழங்காலத்திலிருந்து வெட்டவெளியை கழிப்பறையாக உபயோகப்படுத்திய கிராம மக்களுக்கு, மேட்டூரில் கட்டப்பட்ட கழிப்பறைகள் மிகவும் நவீனமாக புதிய ஆச்சரியத்தை அளிக்கக் கூடியதாக தோன்றியது. இதை மக்கள் முழுமையாக பயன்படுத்தினர்.

இது 2000 வது ஆண்டு வரைக்கும் கூட பல கழிப்பறைகள் பயன்பாட்டில் இருந்து வந்தன என்பதை யான் நேரில் கண்டிருக்கிறேன். இந்தக் கழிப்பறைகள் மக்களின் சுகாதார மேம்பாட்டுக்கு பெரும் உதவி புரிந்தது என்று கூறினால் மிகையல்ல!

தொலைநோக்குப் பார்வை கொண்ட இந்த ஏற்பாடுகள் திட்ட செயலாக்கத்தின் பெருமையை பறைசாற்றுகிறது!

தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் வலிமையான கட்டமைப்பு அமைக்கப்பட்டது. அனைத்து தொற்று நோய்களையும் கையாளும் விதத்தில் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வல்ல தனி கொட்டகைகள் அமைக்கப்பட்டன. மேட்டூரில் பணிபுரிந்த தொழிலாளர்களில் எந்த ஒரு தனி நபரும் தடுப்பூசி போட்டு போட்டுக்கொள்ள மறுப்பாரேயானால் அவர் முகாமில் இருந்து வெளியேற்றப்படுவார் என்ற உத்தரவு இருந்தது. தொற்றுநோய் பரவும் காலங்களில் தடுப்பூசி மற்றும் மருந்துகள் முதலியவை அனைவருக்கும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அபூர்வமாக ஒன்றிரண்டு நபர்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்தாலும் பெரும்பாலும் மிகுந்த கட்டுக்குள் வைக்கப்பட்டு தொற்றுநோய் பரவாமல் தடுக்கப்பட்டது ஒரு அரிய சாதனை என்றே கூற வேண்டும்.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் மிகவும் கவனமாக பதிவு செய்யப்பட்டது. இறந்தவர்களின் உடலை கூராய்வு செய்து இறப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறியாமல் எந்த சடலத்தையும் அப்புறப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. மேட்டூர் அணை கட்டுமானத்தை ஆய்வு செய்த கர்னல். வெப் , IMS., பொது சுகாதார முன்னாள் இயக்குனர் தனது கருத்தை பதிவிடும் போது, “மேட்டூர் அணையின் பொறியியல் திறமைக்கு இணையாக மலேரியா தடுப்பு நடவடிக்கைகளும் சிறந்த சாதனை” என்று புகழ்ந்து பதிவிட்டிருக்கிறார் என்பது வரலாற்றுப் பதிவு. சுகாதார அதிகாரிகளின் பணியைப் பாராட்டி நாம் நன்றியுடன் நினைவு கூறுவோம்.

மருத்துவமனை மற்றும் மருத்துவ உதவி

திட்டத்தின் தொடக்கத்திலிருந்தே மேட்டூரில் ஒரு நல்ல வசதி உள்ள மருத்துவமனை மிகவும் அவசியமான ஒன்றாகும் என்று அதிகாரிகள் கருதினார்கள். மேட்டூரைச் சுற்றியிருந்த, வடக்கே பூமனூர் மற்றும் தெற்கே சின்னப்பள்ளம் போன்ற கிராமங்கள் மலேரியா பாதிக்கப்பட்டிருந்த இடங்களாக இருந்தன. சின்னப் பள்ளம் கிராமம் 1933 ஆம் வருடத்தில் கூட அதிக மலேரியா பாதிப்படைந்த பகுதியாகவும் 93 சதவீதம் பேர் மலேரியாவில் பாதிப்படைந்த வர்களாகவும் இருந்தனர்!

மேட்டூரில், இதற்கு எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மேலும் மேம்படுத்த வழக்கமான மருந்தகம் ஒன்று 1926-ம் ஆண்டு மே மாதம் பழைய தேவாலயம் ஒன்றின் ஒரு பகுதியில் தொடங்கப்பட்டு, துணை உதவி சர்ஜன் நியமிக்கப்பட்டார்.

அந்த சமயத்தில், பாதுகாப்பற்ற நீர் விநியோகம் போன்றவை, காட்டுப்பகுதிகளில் வாழும் வாழ்க்கைக்கு ஒப்பானதாக இருந்தது. இது மிகவும் கடினமானதாக மக்களுக்கு அமைந்தது. இது போதாமல் மேலும் 1926- ம் வருடம் ஜூலை மாதம் இங்கு காலரா பாதிப்பு ஏற்பட்டு பலர் இறந்தனர். இது தொழிலாளர் வர்க்கத்தினர் இடையே பெரும் பீதியை உண்டு பண்ணியது. நூற்றுக்கணக்கான கூலி ஆட்கள் உருக்குலைந்தனர். அந்த சமயத்தில் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் வளங்கள் பயன்படுத்தப்பட்டு இந்த தொற்று நோய் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது ஒரு இமாலய சாதனை ஆகும்! அந்த சமயத்தில் 27 காலரா பாதித்த தொழிலாளர்கள் உள்நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இது போன்ற தீவிர சிகிச்சை தேவைப்படுவோரை ஈரோடு கொண்டு செல்ல "ஆம்புலன்ஸ்" வண்டி தேவை என முடிவு செய்யப்பட்டு, அதை வாங்கி பயன்படுத்தப்பட்டது. மேலும் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டவர்கள் மற்றும் உடல் நலம் குன்றியவர்களை, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டது.

இதற்கிடையில் மேட்டூரில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வந்து மேட்டூர் ஒரு ‘நகரம்’ என்ற அளவுக்கு முன்னேறியது. ஒரு துணை உதவி அறுவை சிகிச்சை மருத்துவரால் சமாளிக்க முடியாத அளவிற்கு மருந்தகத்தில் பணி பெரும் சுமையானது!

இதற்கிடையில் அனைத்து வசதிகளுடன் ஒரு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் 1927 ஆம் வருடம் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த மருத்துவமனை "காவிரி - மேட்டூர் திட்டத் தலைமை மருத்துவமனை" என்று அழைக்கப்பட்டது. இது ஆற்றின் கோயம்புத்தூர் செல்லும் பக்கத்தில் உள்ள பணியிடத்திற்கும், குடியிருப்புகளுக்கும் நடுவில் ஒரு சிறந்த இடத்தில் அமைந்தது. இந்த மருத்துவமனை நாட்டுப்புறத்தில் அமைந்த ஓர் சிறந்த மருத்துவமனை என்று கூறலாம். இதில் ஒரு மைய கட்டிடம் அமைந்துள்ளது. இதில் ஒரு திறந்த வெளி மண்டபம், இரு புறங்களிலும் மருத்துவர்களுக்கான அறைகள், "ஸ்டோர் ரூம்கள்" மற்றும் "ஐரோப்பிய வார்டு", இதனுடன் குளியல் அறைகள் போன்றவையும் மிக நவீன அறுவை சிகிச்சை அறை, மற்றும் இட வசதியுடன் கூடிய நோயாளிகள் அறை போன்றவை அமைக்கப்பட்டது.

ஆண்கள் 24 பேரும் பெண்கள் 20 பேரும் தங்கி சிகிச்சை பெறக் கூடிய வகையில் இந்த வார்டுகள் அமைந்தன. பெண்கள் பகுதியில் பிரசவ அறை மற்றும் அதனுடன் இணைந்த மூன்று படுக்கைகள் கொண்ட வார்டும் அமைக்கப்பட்டிருந்தது. இது தவிர, ஆண்களுக்கு ஒன்று மற்றும் பெண்களுக்கென்று ஒன்று என இரண்டு கொட்டகைகள் அமைக்கப்பட்டு அதில் பாலியல் மற்றும் தொற்று நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஐரோப்பிய வார்டு குறுகிய கால அளவில் அனைவருக்குமான "ஸ்பெஷல் வார்டு" என்று மாற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இந்த வார்டை பயன்படுத்த வாடகையாக, இந்தத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ஒரு நாளைக்கு எட்டு அனாவும், வெளி ஆட்களுக்கு ஒரு ரூபாயும் வசூலிக்கப்பட்டது. பிரதான கட்டிடத்தின் வலதுபுறத்தில் வெளி நோயாளிகளுக்கு என்று ஒரு பகுதியும் அதில் மருத்துவர் ஆலோசனை அறை, கம்பவுண்டர்கள் அறை, மருந்தாளர்கள், அறுவை சிகிச்சை அறை மற்றும் காயங்களுக்கு கட்டு போடும் அறை, (Dressing room) போன்றவை ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டது.

ஐரோப்பிய மற்றும் இந்திய அதிகாரிகளின் குடியிருப்புகள்.

பிரதான கட்டிடத்தின் இடதுபுறத்தில் செவிலியர்கள் தங்குவதற்கான குடியிருப்பு அமைந்தது. இந்த வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களும் ஒன்றுக்கொன்று தாழ்வாரத்தின் மூலம் இணைக்கப்பட்டிருந்தது. எனவே, வெயில் அல்லது மழை எதையும் பொருட்படுத்தாமல் செல்ல வேண்டிய பகுதிக்கு சுலபமாகவும், சுதந்திரமாகவும் சென்றடைய முடியும். ஏதேனும் அவசரக்காலத் தேவை இருப்பின் இந்த கட்டிடங்களின் வராண்டாக்களில் நிறைய நபர்களை அனுமதித்து அங்கு சிகிச்சை அளிக்க இயலும். இந்த மருத்துவமனையில் இருந்து இரண்டு பர்லாங் தூரத்தில் இரண்டு கொட்டகைகள் அமைக்கப்பட்டு அங்கு காலரா மற்றும் பெரியம்மை பாதித்த நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு கொட்டகைகளும் ஆறு நோயாளிகள் வரை அனுமதிக்க இயலும்படி இவை இருந்தன. சேலம் கேம்ப் என்ற அணையின் இடது பக்க கரையில் அமைந்த குடியிருப்பு வாசிகளுக்கு அங்கு ஒரு மருத்துவமனை அமைக்கப்பட்டது. மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் மருத்துவமனைகளுக்கு அருகிலேயே குடியிருப்பு வசதிகள் செய்து தரப்பட்டது. எனவே, தேவைப்பட்ட நேரத்தில் உடனடியாக அவர்களை மருத்துவ தேவைக்கு அழைக்க வழிவகை செய்யப்பட்டது.

1926 - 1935 வரை சிகிச்சைப் பெற்ற வெளி நோயாளிகளின் எண்ணிக்கை - 2,85,814, உள் நோயாளிகளின் எண்ணிக்கை -7285, அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் -767, முக்கிய அறுவை சிகிச்சைகள்(Major) – 526, காயங்களுக்கு சிகிச்சை - 24,224, காய்ச்சலுக்கு சிகிச்சை

(டைபாய்டு மற்றும் நிமோனியா தவிர்த்து) -35,908, டைபாய்டு சிகிச்சை- 96, நிமோனியா சிகிச்சை -78, காலரா -122, வயிற்றுப்போக்கு- 4560, சின்னம்மை – 79, பிரசவ எண்ணிக்கை - 694

மேற்கண்ட தரவுகளில், காயங்களுக்கு சிகிச்சை அளித்த விவரம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், 24,224 காயம்பட்டவர்களில் 420 பேருக்கு பெரும் காயங்கள் அணை கட்டுமானத்தின் போது ஏற்பட்டதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மீதமுள்ள 23,084 பேர்களுக்கு சிறிய அளவு காயங்களுக்காக அணை கட்டுமான வேலையின் போது ஏற்பட்டதும் மற்றும் வெளியிடங்களில் கிராமத்தில் ஏற்பட்ட காயங்களுக்காகவும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

1929- ம் வருடத்திற்கு பிறகு காலரா பாதிப்பு ஏற்படுவது பெருமளவு குறைந்தது. ஏனெனில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைத்து இடங்களிலும் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. வயிற்றுப்போக்கு அதிக அளவு நடந்த வருடம் 1929. அதற்கு அடுத்த வருடங்களில் கணிசமான அளவு இது குறைந்தது.

1934 ஆம் ஆண்டு வாக்கில் மேட்டூர் நகரை சுற்றியுள்ள சுமார் 30 - 40 மைல் சுற்றளவில் அல்லது அதற்கும் அதிகமாக உள்ள தூரத்தில் இருந்தெல்லாம் மக்கள் இந்த மருத்துவமனையின் சேவையை பெற வந்து கொண்டிருந்தனர். மெட்ராஸ் மாகாண "சர்ஜன் - ஜெனரல்" ( தலைமை அறுவை சிகிச்சை நிபுணர்) 1934 -ம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி மேட்டூருக்கு வந்து மருத்துவமனையை சுற்றிப் பார்த்து ஆய்வு செய்த பின் இந்த மருத்துவமனையின் முக்கியத்துவத்தை பெரிதும் புகழ்ந்து பதிவு செய்து உள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான உணர்வு ஏற்பட்டு, பெருமளவில் ஆர்வத்துடன் அணை கட்டுமானப் பணியில் பங்கேற்றனர் என்றால் அது மிகையல்ல!

குடியிருப்புகள்

முக்கிய பொறியாளர்களின் குடியிருப்புகள்

இரண்டு மாடி பங்களாக்கள், சமையலறை, வரவேற்பு அறை, டைனிங், அலுவலக அறை, மேல் தளத்தில் படுக்கையறைகள், குளியலறை, துணி மாற்றும் அறைகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டன. விரிவான வராண்டா, மின்விளக்குகள், விசிறிகள், நீர் குழாய்கள், சுத்திகரிப்பு அமைப்புகள் அனைத்தும் இருந்தன. 4–8 ஏக்கர் வளாகம், மரங்கள், புல்வெளிகள், பூங்கா போன்ற அழகிய சூழல் உருவாக்கப்பட்டது. சில குடியிருப்புகள் 100 ஆண்டுகள் ஆகியும், இன்னமும் பயன்பாட்டில் உள்ளன என்பது சிறப்பம்சமாகும்.

செயற் பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்களுக்கான வீடுகள்

ஐரோப்பிய முறையில் மூன்று வீடுகள் கட்டப்பட்டன. 10 ஆண்டுகள் ஆயுள் என்ற நோக்கில் கட்டப்பட்டாலும் பல தசாப்தங்கள் பயன்பாட்டில் இருந்தன. உதவி பொறியாளர்கள், சூப்பர்வைசர்கள், ஃபோர்மேன் களுக்கு ஒற்றை மாடி வீடுகள் கட்டப்பட்டன. இந்திய ஊழியர்களுக்கு தொகுப்பு வீடுகள் (4 வீடுகள் கொண்ட குழு) சமூக வாழ்விற்கு ஏற்றவாறு கட்டப்பட்டது.

ஐரோப்பிய மற்றும் இந்திய அதிகாரிகளின் குடியிருப்புகள்.

எழுத்தர்கள் மற்றும் கீழ்நிலை ஊழியர்களுக்கான வீடுகள்

4 முதல் 20 வீடுகள் கொண்ட தொகுப்புகளாக, சுண்ணாம்பு சாந்து பூச்சு, எரிந்த செங்கற்கள், பில்லமருது கதவுகள், ஜன்னல்களுடன் கட்டப்பட்டது. பொதுக் கழிப்பறைகள் (flush system), சாக்கடை, நீர் குழாய்கள் போன்ற சுத்திகரிப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

பொது கட்டிடங்கள்

மத்திய அலுவலகம், நீதிமன்றம், கருவூலம், காவல் நிலையம், பள்ளிக்கூடம், தபால் நிலையம் என முழுமையான குடியிருப்பு நகரம் உருவாக்கப்பட்டது. மத்திய அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமைந்திருந்ததால் நிர்வாகம் விரைவாகவும் திறமையாகவும் செயல்பட்டது.

நிலைத்தன்மை

மேட்டூரில் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின்னரும் பெரும்பாலான கட்டிடங்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. ஒர்க்‌ஷாப், மின் நிலையம் போன்றவை பின்னர் மின்சார வாரியத்திற்கு ஒப்படைக்கப்பட்டன. இன்றும் அந்த இடங்களில் பணிகள் நடைபெற்று வருவதிலிருந்து அந்த கட்டடங்களின் உறுதித்தன்மையின் சிறப்பை எவரும் உணரலாம்!

நீர் விநியோகம்

மேட்டூர் அணை திட்டத்தின் தொடக்கத்திலேயே, பணியாளர்கள் மற்றும் குடும்பங்களின் சுகாதாரத்தை உறுதி செய்ய “சுத்தமான நீர் வழங்கும் அமைப்பு” அவசியம் எனக் கணிக்கப்பட்டது. அருகிலுள்ள கிராமங்களில் காலரா, கொக்கிப்புழு, கினியாப்புழு போன்ற நீர்வழி நோய்கள் பரவியிருந்ததால், பாதுகாப்பான குடிநீர் விநியோகம் அவசரமாக அமைக்கப்பட்டது.

1925-ல் ஆற்றின் வலது கரையில் நீரேற்று நிலையம் திட்டமிட பட்டாலும், புவியியல் சிக்கல்களால் 1928-ல் இடது கரையில் பொருத்தமான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கு இயற்கையாக அமைந்த குளத்திலிருந்து நீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் தற்காலிகமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேலன் அளவிலான சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. பின்னர் நிரந்தர நிலையம் உருவாக்கப்பட்டு தினசரி “12 லட்சம் கேலன்” நீர் குளோரினேசன் முறையில் சுத்திகரிக்கப்பட்டு குடியிருப்புகளுக்கும் பணிகளுக்கும் வழங்கப்பட்டது.

பம்புகள் முதலில் ஆயில் என்ஜின்களால் இயக்கப்பட்டு, பின்னர் மின்சாரத்தால் மாற்றப்பட்டன. சென்னையின் “கிங் இன்ஸ்டிடியூட்” தொடர்ந்து தண்ணீர் மாதிரிகளை சோதித்து தரமான குடிநீர் வழங்கப்பட்டதைக் உறுதி செய்தது. தண்ணீருக்கான கட்டணம் அதிகாரப்பூர்வ குடியிருப்புகளில் வசூலிக்கப்படவில்லை. ஆனால் கடைகள், தனியார் குடியிருப்புகள் மற்றும் தென்னிந்திய ரயில்வே போன்றோரிடமிருந்து ஆயிரம் கேலனுக்கு 1 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. Water works Superintendent என்ற பதவியில் ஒருவர் ஒட்டுமொத்த கண்காணிப்பையும் நிர்வகித்தார்.

1925-ல் மேட்டூர் அணை திட்டத்தின் தொடக்கத்திலேயே, “கழிவு நீர் மேலாண்மை” முக்கியமாகக் கருதப்பட்டது. திறந்த வெளிச் சாக்கடைகள் காலரா போன்ற நோய்களை ஏற்படுத்தும் என்பதால், நிலத்தடி சாக்கடை அமைப்பு திட்டமிடப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.

1927-ல் திட்டம் இறுதி செய்யப்பட்டு 1928-ல் பணிகள் தொடங்கின. ஆரம்ப வடிவமைப்பு “5000 பேர் கொண்ட மக்கள் தொகைக்கு” ஏற்ற வகையில், ஒரு நபருக்கு தினமும் 20 கேலன் என கணக்கிட்டு வடிவமைக்கப்பட்டது. மொத்த வெளியேற்றம் தினமும் 1,25,000 கேலன்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது. 1929-ல் மேட்டூர் முகாமில் அமைப்பு முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. கூலி லைன், பியூன், ஃபிட்டர், போலீஸ் குடியிருப்புகள் அனைத்தும் நிலத்தடி சாக்கடைகளுடன் இணைக்கப்பட்டன. கல்கத்தாவின் BURN & Co. குழாய்களை வழங்கியது. இதனால் சுகாதாரம் மேம்பட உதவியது.

கழிவு நீர் தூக்கணாம் பட்டி அருகே 10–18 ஏக்கர் நிலங்களில் பம்ப் செய்து பண்ணைகளில் பாசனமாக பயன்படுத்தப்பட்டது. அங்கு மிளகாய், வாழை, பப்பாளி, தீவனப்புல், கரும்பு, சோளம், காய்கறிகள் உள்ளிட்ட பல பயிர்கள் வளர்க்கப்பட்டன. இது முதன்மையாக சுத்தத்தைக் காப்பதற்காக இருந்தாலும், விவசாயப் பொருட்களை விற்று “ஆண்டு லாபமும்” கிடைத்தது ஓர் அதிசயம். அதன் லாப விவரம்: 1930–31: ரூ. 679, 1931–32: ரூ. 1,798, 1932–33: ரூ. 1,774, 1933–34: ரூ. 1,694

மேட்டூர் மற்றும் சேலம் கேம்ப் பகுதிகளுக்கான கழிவு நீர் திட்டம் ரூ. 1,70,000 செலவில் அமைக்கப்பட்டது; 1934 வரை பராமரிப்பு செலவு ஆண்டுக்கு ரூ. 70,000 ஆனது. சேலம் கேம்ப் அமைப்பு பிறகு மூடப்பட்டாலும், மேட்டூரில் திட்டம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தது.

பணிமனை (WORKSHOP)

1926-ல் தொடங்கிய மேட்டூர் ஒர்க் ஷாப், அணை கட்டுமானத்திற்கு தேவையான கருவிகள் பழுது நீக்கம் மற்றும் எஃகு கட்டமைப்புகள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தது. 1927–28-ல் விரிவுபடுத்தப்பட்டு, ரயில் இன்ஜின் பழுது நீக்கம், ஸ்டீல் ஃபேப்ரிகேஷன், கிரேன்கள், கலவை இயந்திரங்கள் உள்ளிட்ட பணிகளை செய்தது. உச்சத்தில் 380 பேர் பணியாற்றி, மாத சம்பளம் 45 முதல்–600 ரூபாய் வரை வழங்கப்பட்டது. 1933 வரை 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேலைகள் செய்யப்பட்டு, 99,257 ரூபாய் லாபம் கிடைத்தது. அனைத்துப் பிரிவுகளும் ஒழுங்கான விதிமுறைகளுடன் இயங்கி, திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு அளித்தன.

கூலிகளுக்கு ஒரு நாளைக்கு ஏழு அனாவிலிருந்து இரண்டு ரூபாய் வரை தரப்பட்டது. சிறுவர்களுக்கு ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஆறு அனா கூலி தரப்பட்டது. அந்த சமயத்தில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. மேலும் குடும்பம் குடும்பமாக வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து தங்கி இங்கு அணை கட்டுமானப் பணியில் ஈடுபட்டு இருந்ததால் இது தவிர்க்க இயலாததாகவும் இருந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டாலும் இவை குறித்து எண்ணிப் பார்க்கும்போது மனக்கவலை அளிப்பதாக உள்ளது. அரவங்காடு (ஊட்டி), கோலார் சுரங்கம் போன்ற இடங்களில் இருந்து வந்தவர்களும் இங்கு பணி புரிந்துள்ளார்கள்.

இந்த ஒர்க் ஷாப்பில் கீழ்க்கண்ட பிரிவுகள் செயல்பாட்டில் இருந்தது. கார்பென்டரி, பவுண்டரி, கொல்லர், மெஷின் ஷாப், ஃபிட்டிங் ஷாப், ஸ்டீல் ஃபேப்ரிகேஷன், ரயில் பழுது நீக்கம், ரோலிங் ஸ்டாக் பழுது நீக்கம் போன்றவை இவை. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு பொறுப்பாளர் இருந்தார். இங்கு செய்யப்படாத வேலைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து வேலைகளும் செய்யப்பட்டன. காவிரி ஆற்றுப் பாலத்துக்குத் தேவையான ஸ்டீல் வேலைகளும் இங்கு செய்யப்பட்டன என்பது முக்கியமான தகவலாகும்.

ரயில் இன்ஜின்களை பராமரிப்பது, ஆறு மாதம் ஒரு முறை பரிசோதிப்பது மற்றும் பாய்லர்களை பரிசோதிப்பது என இந்த பிரிவு எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இவர்களின் சிறப்பான சேவையால் என்ஜின்கள், பாய்லர்கள் மற்றும் பம்புகளில் எப்போதும் பெரிய தொந்தரவுகள் ஏற்பட்டதே இல்லை.

இதோடு அனைத்துக் கார்களும், லாரிகளும், ஸ்டீம் மற்றும் ஆயில் இன்ஜின்களும் இங்கு பராமரிப்பதும் நடந்தேறியது. ஒர்க் ஷாப்பில் உள்ள அனைத்துப் பிரிவுகளும் எப்போதும் முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருந்தன என்றே கூற வேண்டும். மார்ச் மாதம் 1933 வரை இந்த ஒர்க்ஷாப் மூலம் செய்த வேலைகளின் அவுட்டர்ன் (Out turn) மதிப்பு ரூபாய் 20 லட்சம் ஆகும். மொத்த லாபம் என்று கணக்கிட்டால் 99,257 ரூபாய் லாபம் ஏற்படுத்தி தந்திருக்கிறது.

இது எப்படி சாத்தியமாயிற்று என்று ஆய்வு செய்தால் ஒர்க்ஷாப் ஆரம்பித்த போதிலிருந்து ஒரு அமைப்பு விதிகள் உருவாக்கப்பட்டு (SYSTEM), அதன்படியே ஆர்டர்கள் பெறப்படுவது, வேலைக்கான மதிப்பீடு செய்தல், தேவையான பொருட்களை கொள்முதல் செய்தல் மற்றும் ஆட்களிடம் வேலையை பகிர்ந்தளித்து பெறுவது போன்ற அனைத்தும் விதிகளின்படி செயல்படுத்தப்பட்டதன் விளைவே ஆகும் என உறுதியாக புரிந்து கொள்ள முடிகிறது!

மேலும் பயணிப்போம்.

காவிரி நன்னீர் சிறப்பு

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User