ஆம்னி பஸ்களில் பெண்களின் கைப்பையே குறி; தொடர் நகைக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் சிக்கியது எப்படி?

Sep 15, 2026 - 12:32
0
ஆம்னி பஸ்களில் பெண்களின் கைப்பையே குறி; தொடர் நகைக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை பிலிப் காலனியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் சகாயராஜ். இவரது மனைவி ஜூலியட் லதா, தனியார் கல்லூரி உதவி பேராசிரியர். இருவரும் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு நெல்லையில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்தில் சென்றனர்.

பேருந்து, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகிலுள்ள கரிசல்குளம் விளக்கில் சாலையோர உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது கணவருடன் ஜூலியட் லதா இரவு உணவு சாப்பிடச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது தனது கைப்பையில் வைத்திருந்த 40.08 சவரன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட மக்சூத்கான்
கைது செய்யப்பட்ட மக்சூத்கான்

இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் அந்தப் பேருந்தில் பயணித்த பயணிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் உணவகத்தில் இருந்த சி.சி.டி.வி பதிவுகள், அப்பகுதியில் பதிவாகி இருந்த செல்போன் அழைப்புகள் விபரங்களையும் ஆய்வு மேற்கொண்டனர். அதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்தின் உத்தரவுப்படி கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வானமாமலை தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படை போலீஸார் மத்தியப்பிரதேச மாநிலத்துக்குச் சென்று உள்ளூர் போலீஸாரிடம் சி.சி.டி.வி காட்சிகளைக் காண்பித்து விசாரணை நடத்தினர்.

தார் மாவட்டம், மணவால் தாலுகா, கேர்வா கிராமத்தைச் சேர்ந்த மக்சூத்கான்தான் சி.சி.டி.வி காட்சிப் பதிவுகளில் உள்ள நபர் என உள்ளூர் போலீஸார் கூறினர்.

கயத்தாறு காவல் நிலையம்
கயத்தாறு காவல் நிலையம்

மத்தியப் பிரதேச போலீஸார் மக்சூத்கான் வசித்து வரும் கிராமத்திற்கு தனிப்படை போலீஸாரை அழைத்துச் சென்றனர். போலீஸாரைக் கண்டதும் பைக்கில் மக்சூத்கான் பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றார். பின்னர் அவரைச் சுற்றி வளைத்து கைது செய்தனர். கேர்வா புறக்காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் நடத்திய விசாரணையில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆம்னி பேருந்தில் நகைகளைத் திருடியதை ஒப்புக் கொண்டார். அவரிடமிருந்து திருடிச் செல்லப்பட்ட 40.08 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

இதுகுறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசினோம், “நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட மக்சூத்கான் மற்றும் அவரது கூட்டாளிகளான ரபீக், முகைதீன் ஆகியோர் மத்தியப்பிரதேசத்தில் இருந்து 3 மாதங்களுக்கு ஒருமுறை தமிழ்நாட்டிற்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

சென்னையில் இருந்து நெல்லை வரை உணவுக்காக நிறுத்தப்படும் ஆம்னி பேருந்துகளைக் குறி வைத்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். பேருந்தில் இருந்து பயணிகள் கீழே இறங்கியதும், 3 பேரில் ஒருவர் பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் நின்று கொண்டும், மற்ற இருவர் பேருந்திற்குள் ஏறி சீட்டுகளில் வைக்கப்பட்டிருக்கும் கைப்பைகள், ஜிப் பைகளைத் திறந்து பார்த்து அதில், நகைகள், பணம் இருந்தால் திருடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

கயத்தார் காவல் நிலையம்
கயத்தார் காவல் நிலையம்

பெண்களின் கைப்பைகளையே அதிகம் குறி வைக்கிறார்கள். மக்சூத்கான் மற்றும் அவனது கூட்டாளிகள் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் 23 சவரன் நகை, வத்தலகுண்டுவில் 8.5 சவரன் நகை, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 21.5 சவரன் நகை, உளுந்தூர்பேட்டையில் 80 சவரன் நகை இறுதியாக கயத்தாறில் 40.08 சவரன் நகை என கொள்ளையடிக்கப்பட்ட 173 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

கயத்தாரில் திருடிய பிறகே காரில் மத்தியப் பிரதேசம் சென்றுள்ளனர். மக்சூத்கானின் கூட்டாளிகள் இருவரைத் தேடி வருகிறோம்” என்றனர்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User