`குப்பை மண்ணிலிருந்து 1 மில்லி தங்கம் எடுக்க 10 நாள்..!' தங்க மண் சலிக்கும் தொழிலில் ஈடுபடும் மக்கள்
“குப்பை, மண்ணுல இருந்து தங்கம் எடுக்குறாங்கன்னா நம்புவீங்களா?”
கொஞ்சம் ஆச்சர்யமா தான் இருக்கும். ஆனா, இது உண்மை. நகைக் கடைகள்ல இருந்து வெளியேறுற குப்பை மண்ணைச் சேகரிச்சு, அதைத் தண்ணீர்ல அலசி, சல்லடை போட்டு, பல கட்டங்களா பிரிச்சு, அதுக்குள்ள ஒளிஞ்சிருக்குற தங்கத்தைக் கண்டுபிடிக்கிற ஒரு தொழில் தமிழ்நாட்டோட பல மாவட்டங்கள்ல நடக்குது.

திருநெல்வேலியிலயும் இந்த தங்க மண் சலிக்கும் தொழிலை நம்பி வாழுறவங்க இருக்காங்க. நகை செய்யும்போது தெரியாம கீழே விழுந்த தங்கத்தூள், சின்னச் சின்ன துண்டுகள் எல்லாம் கடை குப்பையோட சேர்ந்து போயிடும். கடைக்காரர்களுக்கே தெரியாம போற அந்தத் தங்கத்தைத் தேடித்தான் இவர்களோட பல நாள் உழைப்பு தொடங்குது.
வெளியில இருந்து பார்க்குறதுக்கு, மண்ணையும் குப்பையையும் அலசுற ஒரு சாதாரண வேலை மாதிரிதான் தெரியும். ஆனா, அந்த மண்ணுக்குப் பின்னாடி பல மணி நேர உழைப்பு இருக்கு. அதைவிட முக்கியமா, “இன்னைக்கு ஏதாவது தங்கம் கிடைக்குமா?”ங்கிற ஒரு எதிர்பார்ப்பும் இருக்கு.

அப்படித்தான் திருநெல்வேலியில இந்தத் தொழில் செஞ்சிட்டு இருக்குற அப்துல்காதரைச் சந்திச்சோம். ஏழு வயசுல இருந்து இந்த தொழில் செஞ்சிட்டு வர்றார்.
அவர்கிட்ட பேசினோம்.
``சின்ன வயசுலயே இந்த வேலைக்கு வந்துட்டேன். இப்ப வரைக்கும் இதைத்தான் பண்ணிட்டு இருக்கேன்…”னு அவர் சொல்லும்போது, அவரோட கைகள்ல இருந்தது மண். ஆனா, அந்த மண்ணுக்குள்ள இருந்தது பல வருஷ வாழ்க்கை.
மண்ணை அலசுற வேலை… அவ்வளவு சுலபம் இல்ல!
காலையில 3:00 மணிக்கே எழுந்து, கடையில இருந்து குப்பையோட சேர்ந்து வர்ற மண்ணை அள்ளிட்டு வந்து, ஓடையில போய் அலசுவோம். பார்க்குறதுக்கு சாதாரண மண்ணு மாதிரிதான் இருக்கும். ஆனா, அதுக்குள்ள எங்களுக்கு தேவையானது ஒளிஞ்சிருக்கும்.
முதல்ல அந்த மண்ணை ஒரு இடத்துல போட்டு தண்ணீர் ஊத்தி அலசுவோம். அதுல இருக்குற மணல், மண் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பிரிய ஆரம்பிக்கும். அதுக்கப்புறம் சல்லடை போட்டு திரும்பத் திரும்ப சலிச்சு எடுப்போம்.

மண்ணை அரைச்சு, அலசி, சலிச்சு எடுத்துக்கிட்டே போகும்போது, அளவு கொஞ்சம் கொஞ்சமா குறையும்." இவர்களுக்கு வேண்டியது மண் இல்ல… அதுக்குள்ள கலந்திருக்குற உலோகங்கள்தான்.
செம்பு, ஈயம், நாகம், இரும்புத்தூள் என பல உலோகங்கள் அதுல கலந்திருக்கும். அதிலிருந்து தங்கத்தை மட்டும் பிரிச்சு எடுக்குறதுதான் அடுத்த வேலை.
தங்கத்தைப் பிரிக்க இன்னும் பல கட்டங்கள்
``வாய்க்கால்ல வச்சு முதல்ல அந்த மண்ணை சுத்தம் பண்ணுவோம். அதுக்கப்புறம் வீட்டுக்கு எடுத்துட்டு வந்து மறுபடியும் மண்ணைக் குறைப்போம்.
அதுக்கப்புறம் ரசாயன முறையில சுத்தப்படுத்துற வேலை நடக்கும். நைட்ரிக் ஆசிட் பயன்படுத்தி, தங்கத்தோட கலந்திருக்குற மற்ற பொருள்களைப் பிரிச்சு எடுப்போம். கடைசில மணலும் தங்கமும் மட்டும்தான் மிஞ்சும்.
அதோட வேலை முடிஞ்சிடாது. அடுத்த கட்டத்துல பாதரசம், உப்பு மாதிரியான பொருள்களையும் பயன்படுத்துவோம். இப்படிப் பல கட்டங்களைக் கடந்து, கடைசியா கிடைக்குற அந்தச் சின்ன தங்கத்துகளுக்காகத்தான் இத்தனை நாள் உழைப்பு."

தினமும் தங்கம் கிடைக்குமா?
``நகைக் கடையில ஒரு நகை செய்யும்போது தவறி கீழே விழுந்த தங்கத்தூள், சின்னச் சின்ன துண்டுகள் குப்பையோட சேர்ந்து போயிருக்கலாம். சில நேரம் சுத்தம் செய்யும்போது அது கிடைக்கும்.
ஆனா, எல்லா கடை குப்பையிலயும் தங்கம் இருக்காது.
தெருவுல அஞ்சு கடை, பத்து கடை இருக்கும். எல்லா இடத்துலயும் இப்படிக் கிடைக்காது. எப்பவாவது எதிர்பாராம கிடைக்கும்”னு சொல்றாரு.
அதனாலதான் இந்தத் தொழில்ல உழைப்போட சேர்ந்து பொறுமையும், அதிர்ஷ்டமும் ரொம்ப முக்கியம்.
ஏழு வயசுல தொடங்கிய அப்துல்காதரோட வாழ்க்கையைப் பற்றி கேட்கும்போது, இந்தத் தொழிலுக்குப் பின்னாடி இருக்குற இன்னொரு கதை தெரியுது.

“எனக்கு படிப்பு இல்லை. சின்ன வயசுலயே அப்பா விட்டுட்டுப் போயிட்டாரு. அம்மாவைக் காப்பாத்தணும். அதனால ஏழு வயசுலயே இந்த வேலைக்கு வந்துட்டேன். வேற வழி இல்ல. வேலை பார்த்தாத்தான் வீட்டைக் காப்பாத்த முடியும்.”
ஏழு வயசுல அன்னைக்கு கையில் எடுத்த மண், இத்தனை வருஷத்துக்குப் பிறகும் அவரோட வாழ்க்கையைத் தாங்கிக்கிட்டு இருக்கு.
``பத்து நாள் உழைப்புக்கு கிடைப்பது 1.800 மில்லி கிராம் தங்கம்."
எண்ணிக்கையில பார்த்தா ரொம்பச் சின்ன அளவு.
ஆனா, அந்த மில்லி கிராம் தங்கத்துக்கு பின்னாடி இருக்குற உழைப்பை நினைச்சுப் பார்த்தா, அதன் மதிப்பு வேற மாதிரி தெரியும்.

“இது எப்பவும் கிடைக்காது. கிடைக்கும்போது அதுதான் எங்களுக்கு பெரிய விஷயம். மண்ணு மாதிரி தெரிஞ்சதுக்குள்ள தங்கம் இருக்கும்னு யாருக்குத் தெரியும்? எங்களுக்கு அந்த மண்ணுதான் வாழ்க்கை.”
அவர் சொன்ன இந்த வார்த்தைகள்தான் இந்தத் தொழிலோட மொத்தக் கதையையும் சொல்லிடுது.
நாம பார்க்குறதுக்கு அது வெறும் குப்பை மண்ணா இருக்கலாம்.
அவங்களுக்கு அதுதான் நம்பிக்கை... அதுதான் வாழ்க்கை!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)