மயிலாடுதுறை: பள்ளியில் கழிவறை இருந்தும் காவிரி படுகையை நாடும் மாணவர்கள்; அவலநிலைக்கு காரணம் இதுதான்!
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நூறு ஆண்டுகளைக் கடந்த இந்தப் பள்ளியில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளில் ஒன்றான கழிவறை வசதி போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது.

பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகளில் சில மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கும் சில கழிவறைகளும் முறையாகச் சுத்தம் செய்யப்படாமல் அசுத்தமாகக் காணப்படுகின்றன. இதனால் இயற்கை உபாதைகளுக்காக கழிவறையைப் பயன்படுத்துவதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சூழலில், பள்ளியின் பின்புறம் ஓடும் காவிரி ஆற்றுப் படுகையை சில மாணவர்கள் சிறுநீர் கழிப்பதற்குப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பள்ளிக்குள் போதுமான வசதி இல்லாததால், மாணவர்கள் வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்படுவது அவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் வந்து செல்லும் பள்ளியில், பயன்படுத்தக்கூடிய அளவில் கழிவறைகள் இருப்பதும், அவை தொடர்ந்து சுத்தமாகப் பராமரிக்கப்படுவதும் அவசியம். குறிப்பாக, மாணவர்கள் தங்களுடைய இயற்கைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பள்ளிக்கு வெளியே செல்ல வேண்டிய நிலை இல்லாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.










தற்போது இருக்கும் கழிவறைகளில் பழுதடைந்தவற்றைச் சரிசெய்து, பயன்படுத்த முடியாதவற்றைச் சீரமைத்து, முறையாக சுத்தம் செய்து, பராமரிப்பை உறுதி செய்தால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பள்ளியின் இந்த அடிப்படைப் பிரச்னையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு விரைவில் சரிசெய்து கொடுக்க வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)