Doctor Vikatan: திடீரென குறையும் உடல் எடை... ஆரோக்கியத்தின் அறிகுறியா... நோய் பாதிப்பா?

Sep 11, 2026 - 08:31
0
Doctor Vikatan: திடீரென குறையும் உடல் எடை... ஆரோக்கியத்தின் அறிகுறியா... நோய் பாதிப்பா?

Doctor Vikatan: என் வயது 34. எனக்கு கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைந்து கொண்டே வருவதை உணர்கிறேன். எடைக்குறைப்பு என்பது ஒருவகையில் சந்தோஷமாகத் தோன்றினாலும், இன்னொரு பக்கம் இந்தத் திடீர் எடையிழப்பு ஏதேனும் நோயின் அறிகுறியாக இருக்குமோ என்ற பயத்தையும் கொடுக்கிறது.

திடீரென உடல் எடை குறைவதை ஆரோக்கியமாகப் பார்க்க வேண்டுமா... நோய் என்று அலெர்ட் ஆக வேண்டுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் ஐஸ்வர்யா முரளி.

டயட்டீஷியன் ஐஸ்வர்யா முரளி
டயட்டீஷியன் ஐஸ்வர்யா முரளி

திடீரென உடல் குறைவதாகச் சொல்லும் நீங்கள், முதலில் பின்வரும் கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் தெரிந்தால்தான் மருத்துவரால் உங்களுக்கான சரியான சிகிச்சையை, தீர்வை வழங்க முடியும்.

-கடந்த 1-2 மாதங்களில் நீங்கள் எவ்வளவு எடை இழந்தீர்கள்?
-நீங்கள் ஏதேனும் சிகிச்சைக்காக மருந்துகள் எடுத்துக்கொள்கிறீர்களா?
-உங்கள் உணவுப் பழக்கத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா?
- நீங்கள் அடிக்கடி சோர்வடைகிறீர்களா?
-நீங்கள் மன அழுத்தத்தில் அல்லது கவலையில் இருக்கிறீர்களா?
- உங்களுக்கு உணவை விழுங்குவதில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா?
- நீங்கள் சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தீர்களா?

அதிக தைராய்டு ஹார்மோன்களை சுரக்கும் ஹைப்பர் தைராய்டு பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் எடை இழப்பு இருக்கும்.

திடீர் எடையிழப்பின் பின்னணியில் தசைச்சிதைவு (Muscle atrophy) என்ற பாதிப்பு இருக்கலாம். இந்தப் பாதிப்பு, நீண்ட காலத்திற்கு தசைகளைப் பயன்படுத்தப்படாததால் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை பெரும்பாலும்  அடிபட்டு ஓய்வில் இருப்போரையும், நீண்டகாலமாக படுக்கையில் இருப்போரையும் சகஜமாகப் பாதிக்கக்கூடியது.

அதிக தைராய்டு ஹார்மோன்களைச் சுரக்கும் ஹைப்பர் தைராய்டு (Hyperthyroidism) பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் எடை இழப்பு இருக்கும். ஹைப்பர் தைராய்டிசம் பாதிப்பு உள்ளவர்களுக்கு நல்ல பசி உணர்வு இருக்கும். ஆனாலும் மற்றவர்களோடு ஒப்பிடும்போது இவர்களது உடல் அதிக  கலோரிகளை விரைவாக எரிக்கும் தன்மையுடன் இருப்பதால் எடை இழப்பு இருக்கும்.

ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் (Rheumatoid arthritis) பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது சொந்த நோய் எதிர்ப்பாற்றலே மூட்டுகளின் உள்புறத்தைத் தாக்கி உடலில் அழற்சிக்கு வழிவகுக்கும். அதனால்  இவர்களுடைய வளர்சிதை மாற்றச் செயல்பாட்டின் வேகம் அதிகரித்து வேகமாக எடையை இழப்பார்கள்.  

மனச்சோர்வில் இருக்கும்போது பெரும்பாலானவர்களும் உணவு உண்பதைத் தவிர்ப்பார்கள் அல்லது பசியே இல்லாதது போல உணர்வார்கள். மனச் சோர்வையும் மன அழுத்தத்தையும் கையாளவும் அவற்றிலிருந்து விடுபடவும் முயற்சிகள் எடுக்காத நிலையில், இவர்களுக்கு உடல் எடை குறைதல் என்பது தொடர் நிகழ்வாகவே இருக்கும். 

நீரிழிவால் பாதிக்கப்பட்ட பலருக்கும் எடை குறைவு என்பது கண்கூடான நிகழ்வாக இருப்பதைப் பார்க்கலாம். குளுக்கோஸை உடலின் செல்களுக்குள் நகர்த்துவதற்குப் போதுமான இன்சுலின்  சுரப்பு இல்லாததால், குளுக்கோஸ் ரத்த ஓட்டத்தில் சேரத் தொடங்குகிறது. உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பு குறையும்போது ரத்தத்திலிருந்து திசுக்களுக்குப் போக வேண்டிய ஆற்றல் ரத்தத்தில் மட்டுமே அதிகரிக்கிறது.

ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்

திசுக்களுக்கு சர்க்கரை போகாதபோது,  மூளை சிக்னல் கொடுத்து பசி உணர்வைத் தூண்டி, சாப்பிட வைக்கிறது. அதிகம் சாப்பிடுவதால் ரத்தச் சர்க்கரை அளவும் அதிகமாகும்.  ரத்தத்தில் சர்க்கரை அளவு 180-ஐ தாண்டிவிட்டால் சிறுநீரகம் அதை ஃபில்டர் செய்து வெளியே தள்ளும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக உடலில் நீர்ச்சத்தின் அளவும் குறையும். திசுக்களும் பலமிழந்து, நீர்ச்சத்தும் இல்லாதபோது உடல் எடையும் குறையும்.

அனோரெக்ஸியா (anorexia nervosa) அல்லது புலிமியா (bulimia) போன்ற உண்ணும் குறைபாடுகள் உள்ளவர்கள் பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக விரைவாக எடை இழக்கின்றனர்.  எதைச் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரித்துவிடுமோ என்ற அச்சத்திலும், தோற்றம் பற்றிய கவலையிலும் இவர்கள் பெரும்பாலும் உணவைத் தவிர்ப்பார்கள். அதனால் எடை குறைந்து காட்சியளிப்பார்கள். 

மேற்குறிப்பிட்டவற்றில் உங்களால் சில காரணங்களை உணர முடியும். வேறு சிலவற்றுக்கு மருத்துவப் பரிசோதனையும் ஆலோசனையும் தேவைப்படும். எனவே, காரணமின்றி எடை குறைந்தால் அதை அலட்சியப்படுத்தாமல் சரியான நேரத்தில் சரியான சிகிச்சையைப் பின்பற்றுவதுதான் ஆரோக்கியமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User