ஆபரண யோகம் தரும் சுவர்ண கெளரி பூஜை: விநாயகர் சதுர்த்திக்கு முன்பு செய்யவேண்டிய அம்பாள் பூஜை!

Sep 13, 2026 - 18:31
0
ஆபரண யோகம் தரும்  சுவர்ண கெளரி பூஜை: விநாயகர் சதுர்த்திக்கு முன்பு செய்யவேண்டிய அம்பாள் பூஜை!

நம் நாட்டில் முக்கியமான பண்டிகை தினங்களை ஒட்டியவாறு அமையும் கௌரி விரதங்களைப் பெண்கள் நோற்பது வழக்கம். கௌரியின் திருவடிவங்கள் 108. இவை அனைத்திற்கும் தனித் தனியான பூஜை முறைகள் உண்டு. ஆயினும், நம் முன்னோர்கள் நமது வசதி கருதி `ஷோடச கௌரி விரதங்கள்’ என்று 16 கௌரி விரதங்களைத் தெரிவு செய்து அளித்திருக்கிறார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்கது சொர்ண கெளரி விரதம்.

நகை யோகம்

பொன் ஆபரணங்கள் சேர்க்கைக்காகவும், தீர்க்க சௌபாக்கிய நலனுக்காகவும் கடைப்பிடிக்கக்கூடிய அபூர்வ விரதம் இந்த சுவர்ண கௌரி விரதம். ஒரு பெண்ணிற்கு ஆபரணங்கள் என்பன அலங்காரத்திற்கு மட்டும் அல்லாது, மங்களத் தன்மையைக் குறிக்கும் அடையாளமாகவும் இருக்கின்றன. இந்தத் தன்மை குறையாமல் இருக்க அனுஷ்டிக்க வேண்டிய விரதம்தான் இந்த சுவர்ண கௌரி விரதம்.

எப்படி வழிபடுவது?

இதனை விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய தினம், திரிதியை திதி அன்று செய்வது மரபு. ஏனைய கௌரி நோன்புகளைப் போலவே பூரண விரதம் இருந்து செய்யப்படுகிற பூஜை இது. ஆனால், இதற்கென்று உள்ள சில விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

அதாவது, இந்த விரதத்திற்குரிய நிவேதனங்களின் எண்ணிக்கை 16 என்ற எண்ணிக்கையில் இருக்கவேண்டும். குறிப்பாக, பச்சரிசி மாவில் செய்த 16 தோசைகளை நைவேத்தியம் செய்வது மிக முக்கியம். இந்தத் தோசைகள் கருகக் கூடாது. நிறம் மாறாமல் வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டியது அவசியம்.

திருமணமான முதல் வருடத்தில் புகுந்த வீட்டிற்கு வந்த பெண்ணிற்கு, ‘தோசை வாயனம்’ என்று சொல்லி இந்தத் தோசை களை வழங்குவது சம்பிரதாயம். ஆந்திர மற்றும் கன்னட மக்கள் இதனைத் தவறாது கடைப்பிடிக்கின்றனர். கூடுதலாக இயன்ற பலகாரங்கள், பலவித பழங்கள், தேங்காய், வெற்றிலை ஆகியவற்றையும் சேர்த்து 16 எனக் கணக்கில் கொள்ளலாம்.

முன்னதாக, கிழங்கு மஞ்சளுடன் அரிசியும் சேர்த்து கலசச் செம்பினை நிரப்பிக் கொள்ள வேண்டும்.

சுவர்ண கௌரி

பொதுவாக மற்ற பூஜைகளின்போது கலசத்தின் மீது மாவிலைக் கொத்துடன் தேங்காய் வைப்பது வழக்கம். ஆனால், இந்தப் பூஜையில் ஒரு புதிய மஞ்சள் துணியில் சிறிதளவு சுத்தமான மணலை வைத்துக் கட்டி, கலசச் சொம்பின் மீது வைத்து, அதில் அம்பிகையை எழுந்தருளச் செய்வது மரபு.

நோன்பிற்குண்டான மங்களச் சரடுகளில் 16 முடிச்சுகளை இட வேண்டும். இவற்றையும் கலசத்திற்கு அருகிலேயே வைத்து, ஷோடச கௌரி வடிவங்களாக நினைத்து பூஜிக்க வேண்டும்.

பூக்களில் தாமரை மிகவும் விசேஷம். அத்துடன் காதோலை, கருகுமணி சாற்றுவதும் வழக்கத்தில் உண்டு.

கௌரிதேவியை அர்ச்சிக்க குங்குமத்தைப் பயன்படுத்த வேண்டும். மங்கள ஆரத்தியுடன் பூஜையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

பூஜை நிறைவில் இந்தச் சரட்டினைத் தரித்துக் கொள்வது அவசியம். அதேபோல், மற்ற பெண்களுக்கு சௌபாக்கியத் தாம்பூலத்துடன் சரடு மற்றும் தோசைப் பிரசாதத்தையும் அளிப்பது புண்ணியம். விநாயகர் சதுர்த்திக்கு உண்டான மண் விநாயகரை இந்தக் கலசத்திற்கு அருகிலேயே வைத்து பூஜிக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த தினம் மண் விநாயகரை விசர்ஜனம் செய்வோம் அல்லவா? அப்பொழுது, இந்தக் கௌரிப் பூஜை மூட்டையில் உள்ள மண்ணையும் சேர்ந்தாற்போல நீர் நிலைகளில் கரைத்து விடுவது மரபு.

இப்படி முறையாகச் செய்வதன் மூலம் சுவர்ண கௌரி அருளுடன் விநாயகர் அருளும் சேர்ந்து, பன்மடங்கு பலன்கள் பெருகிடும் என்பது ஐதீகம். கணவரின் ஆயுள் பலம் கூடும்; பொன் பொருள் குறையாமல் நீடித்திருக்கும்.

ஶ்ரீசொர்ண கெளரி வழிபாடு

சுவர்ண கௌரி விரதத்தின் மகிமை!

முற்காலத்தில் கங்கைக் கரையில் விமல நாட்டில் வாழ்ந்திருந்த சந்திரப்பிரபன் என்கிற அரசனுக்கு இரு மனைவியர் இருந்தனர்.ஒருநாள், அப்சரப் பெண்கள் செய்து கொண்டிருந்த இந்தப் பூஜையைப் பற்றி அறிந்தான் அரசன்.

கௌரி பிரசாதமாகக் கிடைத்த நோன்புச் சரட்டைக் கொண்டு வந்து தனது பட்டத்தரசிக்கு அளித்தான். அவளோ அதனை அலட்சியப்படுத்தித் தூக்கி வீசினாள். அந்தத் தோஷத்தின் விளைவாக, கணவனால் வெறுக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.

ஆனால், அந்தச் சரடு போய் விழுந்த பட்டுப்போன மரம் துளிர்த்த அதிசயத்தைக் கண்டாள் இளைய அரசி. உடனே போய் அந்தச் சரட்டினைத் தனது கைகளில் தரித்துக் கொண்டாள். கூடவே, இந்த நோன்பின் மகிமையை அறிந்து கடைப்பிடிக்கத் தொடங்கினாள். அதன்பிறகு, மன்னனுக்கும் மக்களுக்கும் பிரியமான அரசியாக விளங்கினாள்.

சில வருடங்கள் கழித்து, தன் தவறினை உணர்ந்த மூத்த அரசியும் கங்கைக் கரையில் விரதமிருந்த முனிபத்தினிகள் வாயிலாக இந்த சுவர்ண கௌரி பூஜையின் மகிமைகளை அறிந்து கொண்டாள். தன் தவறினை உணர்ந்தாள்.

அப்பெண்களுடன் வழிபாடாற்றி, அவர்கள் அளித்த பிரசாதத்தை ஏற்றாள். அதன் பலனாக, மன்னனால் கண்டுபிடிக்கப் பட்டு, பழைய வளமான வாழ்வை அடைந்தாள்.

ஆக, இந்த வழிபாட்டை முறைப்படி கடைப்பிடித்து அம்பாளை வணங்குவதுடன், விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாரையும் வழிபட, சகலவிதமான செல்வ சுபிட்சங்களும் கைகூடும். ஆபரண யோகம் தேடி வரும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User