குண்டுகள் முழக்கம் இல்லாத அரசு மரியாதை; உயிலின்படி தகனம் செய்யப்பட்ட சாலமன் பாப்பையாவின் உடல்

Sep 12, 2026 - 17:30
0
குண்டுகள் முழக்கம் இல்லாத அரசு மரியாதை; உயிலின்படி தகனம் செய்யப்பட்ட சாலமன் பாப்பையாவின் உடல்

தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையாவின் உடல், அவரது இறுதி விருப்பப்படியே மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

தனது உடல் தகனம் செய்யப்பட வேண்டும் என அவர் ஏற்கனவே உயில் எழுதி வைத்திருந்த நிலையில், அவரது விருப்பப்படியே இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

மதுரையைப் பூர்விகமாகக் கொண்ட சாலமன் பாப்பையயாவின் இயற்பெயர் சுந்தரம் சாலமன் பாப்பையா. இவர் 1936-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி பிறந்தார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற சாலமன் பாப்பையா, பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றிய சாலமன் பாப்பையா, பட்டிமன்ற நடுவராகவும் பேச்சாளராகவும் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.

பள்ளிப் பருவத்திலேயே பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற அவர், திராவிட இயக்கப் பேச்சாளர்களால் ஈர்க்கப்பட்டு, தொடர் வாசிப்பு மற்றும் மேடை அனுபவம் மூலம் தன்னை சிறந்த பேச்சாளராக வளர்த்துக் கொண்டார்.

1961-ல் புதுக்கோட்டையில் தனது முதல் மேடைப் பேச்சை தொடங்கிய அவர், பின்னர் 7,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் தமிழைக் கொண்டு சென்றார்.

தொலைக்காட்சி பட்டிமன்றங்கள் மூலம் பட்டிமன்றத்தை குடும்ப நிகழ்ச்சியாக மாற்றியதில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.

திருக்குறள், புறநானூறு, அகநானூறு உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியதுடன், பல்வேறு இலக்கியக் கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவரது நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடநூலாகவும் இடம்பெற்றது. தமிழுக்கான பங்களிப்புக்காக கலைமாமணி மற்றும் பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஆழமான இலக்கிய அறிவை எளிய பேச்சுத்தமிழிலும் நகைச்சுவையுடனும் அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களோடு இணைத்து மக்களிடம் கொண்டு சென்றதே சாலமன் பாப்பையாவின் தனிச்சிறப்பு. சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை வகுப்பறைகளுக்குள் இருந்த தமிழைச் சாதாரண மக்களிடமும் கொண்டு சேர்த்த முக்கியமான தமிழ் பேச்சாளராக அவர் திகழ்ந்தார்.

தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் மற்றும் சமூக சிந்தனைகளுக்காக அர்ப்பணித்தவர்

90 ஆண்டுகள் வாழ்ந்த சாலமன் பாப்பையா நேற்று உடல்நலக்குறைபாடு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்து போனது.

இதன் பின் மதுரை ஞானஒளிபுரத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள், தமிழ் அறிஞர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வெப் சர்ச்சில் இறுதி பிரார்த்தனை நடைபெற்றது.

சாதி மத வெறுப்பின்றி பெரியார் கொள்கையில் வளர்ந்தவர் என்பதால் தனது உடல் தகனம் செய்யப்பட வேண்டும் என அவர் ஏற்கனவே உயில் எழுதி வைத்திருந்த நிலையில், அவரது விருப்பப்படியே இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

பின்னர் அவரது உடல் இறுதி ஊர்வலமாக தத்தனேரி மின் மயானத்திற்குக் கொண்டு வரப்பட்டது. வழிநெடுகிலும் திரண்ட பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர். வாழ்க தமிழ்... வாழ்க தமிழ்...என முழக்கமிட்டு அவரது தமிழ்ப் பணியை நினைவுகூர்ந்தனர்.

தத்தனேரி மின் மயானத்தில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் முன்னிலையில் காவல்துறையினரின் Guard of Honour எனப்படும் கௌரவ அரசு மரியாதை வழங்கப்பட்டது. துப்பாக்கிக் குண்டுகள் முழக்கம் இல்லாமல் கௌரவ மரியாதை மட்டும் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இதனிடையே, சாலமன் பாப்பையாவின் அஸ்தியை திருப்புவனம் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் கரைக்க உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். அங்கு புனித நீரில் அஸ்தியைக் கரைத்த பின்னர், அந்தப் புனித நீரை எடுத்துக்கொண்டு வந்து, அவரது மனைவி ஜெயபாயின் கல்லறை மீது தெளிக்கவும் உறவினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User