'ஃப்ளோர் அசிஸ்டண்ட் டூ தேனிசைத் தென்றல்' - தேவாவின் தூர்தர்ஷன் நாள்களை நினைவுகூரும் எம்.எஸ்.பெருமாள்
சினிமாவுக்கு வரும் முன் சுமார் எட்டு ஆண்டுகள் தூர்தர்ஷனில் ஃப்ளோர் அசிஸ்டண்டாக வேலை செய்தவர் மறைந்த இசையமைப்பாளர் தேவா.
தேவா தூர்தர்ஷன் வந்த காலத்தை நினைவு கூர்கிறார் தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குநர் எம்.எஸ். பெருமாள்..

‘’தூர்தர்ஷன் தமிழ் 1975 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மறு வருஷம்னு நினைக்கிறேன். தொலைக்காட்சி இயக்குநரா நிகழ்ச்சிகளுக்கு அமைக்கப்படுகிற செட்களைப் பார்வையிட்டு ஒப்புதல் தர வேண்டியது என் வேலை. அப்படியொரு நாள் ஆர்ட் டைரக்டர் கூப்பிட்டார்னு போய் ஒரு செட்டைப் பார்வையிட்டுட்டுத் திரும்புகிற வழியில பியானோ சத்தம். சத்தம் வந்த பக்கம் போய் பார்த்தா அந்த இளைஞன் வாசிச்சுட்டிருந்தான். அந்த முதல் சத்தமே எனக்குப் பிடிச்சிருந்தது.
என்னைப் பார்த்ததும் எழுந்து நின்ன அந்தப் பையனைக் காட்டி நம்ம ஃப்ளோர் அசிஸ்டண்ட் பேரு தேவநேசன்னு சொன்னார் ஆர்ட் டைரக்டர்.
‘எனக்கு இதுல இண்ட்ரஸ்ட் உண்டு சார்’னு சொன்ன அந்தப் பையனின் வாசிப்பு என்னை ரொம்பவே ஈர்த்துச்சு.
மறுநாளே அவனைப் பத்தி விசாரிச்சேன். மனோரமா ஆச்சி நாடகங்கள்ல சந்திரபோஸ் கூடச் சேர்ந்து மியூசிக் போட்டுட்டிருக்கிறார்ங்கிற தகவலும் கிடைச்சது.

அந்தச் செட் டீம்ல தொண்டாரம்பட்டு வாசுனு ஒருத்தர் இருந்தார். பாட்டு எழுதுவார். அவரைக் கூப்பிட்டு தேவநேசனைக் கூப்பிட்டு வரச் சொன்னேன்.
சந்திப்புக்குப் பிறகு ’வயலும் வாழ்வு’ நிகழ்ச்சியில வாசு எழுத தேவநேசன் என்கிற தேவா இசையமைச்சார்.
தொடர்ந்து தூர்தர்ஷன்ல ஒளிபரப்பான நாடகங்கள்ல ஒர்க் பண்ணினார். நல்ல நெருக்கமாகிட்டார். அவருடைய சகோதர்கள் ஐந்து பேரையும் சேர்த்து நாங்க பஞ்ச பாண்டவர்கள்னு சொல்வோம்.
தேவாவுக்கு நான் வாய்ப்பு தருவது என் அலுவலகத்துலயே பலருக்குப் புகைச்சலைத் தந்தது. ஃப்ளோர் அசிஸ்டண்டையெல்லாம் கூப்பிட்டு பாட்டெழுதவும் மியூசிக் போடவும் வைக்கிறார்னு என்னைப் பத்தியே உயரதிகாரிகளுக்கு புகார் அனுப்பினாங்க.
ஆனாலும் அவருக்கும் எனக்குமான நட்பு அப்படியே இருந்தது.

ஒருகட்டத்துல சினிமா வாய்ப்புகள் வர, எங்கிட்ட வந்து கேட்டார். தூரதர்ஷன்ல இருந்துகிட்டே சினிமாவுல ஒர்க் பண்ண முடியாதுனு சொல்லி ராஜினாமா செய்துட்டுப் போங்கனு சொல்லி வாழ்த்தி அனுப்பினேன். சினிமாவுக்குப் போனார். தனக்குனு ஒரு பாதையை உருவாக்கினார். தமிழின் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேர் படங்களுக்கும் இசையமைச்சுட்டார்.
காலம் கடந்து நிற்கிற எத்தனையோ பாடல்களைத் தந்திருக்கிறார். எனக்கு அவருடைய மெலடி சாங்ஸ்தான் பிடிக்கும். தேனிசைத் தென்றல்னு மக்கள் அவரைக் கொண்டாடினப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. கலைமாமணி விருது வாங்கினதோட, இயல் இசை நாடக மன்றத் தலைவரா இருந்தப்ப நூற்றுக்கணக்கான கலைஞர்கள் கலைமாமணி விருது பெற்றபோது அவற்றை வழங்குகிற இடத்தில் இருந்தார்.

மனுஷன்கிட்ட அவ்வளவு பணிவு இருக்கும். தம்பிகள் மேல அவ்வளவு பாசமா இருப்பார். சினிமாவுல தம்பிங்கதான் எனக்கு சீனியர்னு பெருமையாச் சொல்வார். ஏன்னா சபேசன், முரளி இவருக்கு முன்னாடியே டி.ஆர் கிட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் வாசிச்சிட்டிருந்தாங்க. எங்க எப்ப பேட்டி தந்தாலும் என் பெயரைக் குறிப்பிட மறக்க மாட்டார்.
மூணு மாசம் இருக்கும். பேசினார். ’உடலைப் பார்த்துக்கோங்க’னு எனக்குச் சொன்னார். ஆனா இன்னைக்கு காலை இப்படியொரு செய்தி பார்த்ததுல இருந்து மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு’’ என உடைந்து போய் பேசுகிறார் பெருமாள்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)