''கள் விற்பனையை அரசு ஏன் அனுமதிக்கக் கூடாது?'' - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

Jun 08, 2026 - 22:02
0
''கள் விற்பனையை அரசு ஏன்  அனுமதிக்கக் கூடாது?'' - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் சேட் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், '‘எனது மகன் மணிகண்டனை ஆலங்குளம் எஸ்.ஐ இசக்கிராஜா மற்றும் போலீசார், பனைத் தோப்புக்கு அழைத்துச் சென்று, மரத்தில் கட்டப்பட்டுள்ள பானைகளில் கள் உள்ளதா அல்லது பதநீர் உள்ளதா எனச் சோதிக்க கட்டாயப்படுத்தினர்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து எஸ்.ஐ இசக்கிராஜா, மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்தால் எங்களுக்கு நியாயம் கிடைக்காது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ - க்கு மாற்ற வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, இந்த வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கும் வரை சம்பந்தப்பட்ட போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தார்.

விசாரணை அதிகாரியான சப்-கலெக்டர், சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நீதிபதி, அறிக்கையைப் படித்து பார்க்க கால அவகாசம் தேவை எனக்கூறி விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.ஐ. இசக்கி சுப்பையா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய, கால அவகாசம் கோரப்பட்டது.

கள்

இதைத் தொடர்ந்து நீதிபதி. பிறப்பித்த உத்தரவில், ''நாம் பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கள்  விற்பனைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கனிமம், டாஸ்மாக் உள்ளிட்டவற்றில் அரசு கவனம் செலுத்தி வருவாய் ஈட்டுகிறது. கள் விற்பனையை அரசு ஏன் அனுமதிக்கக் கூடாது? அரசு செயல் திட்டத்தை வகுத்து கள் விற்பனைக்கு அனுமதிக்கலாம், அதில் வருவாயும் கிடைக்கும்.

கள்ளின் மருத்துவப் பயன்கள் என்ன என்பது குறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும்“ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User