`நடிகராக இருக்கும்போது ஆறுதல் சொல்வது; ஆட்சிக்கு வந்து அதிகாரிகளை காப்பாற்றுவதா?'- கே.பாலகிருஷ்ணன்

Sep 17, 2026 - 20:01
0
`நடிகராக இருக்கும்போது ஆறுதல் சொல்வது; ஆட்சிக்கு வந்து அதிகாரிகளை காப்பாற்றுவதா?'- கே.பாலகிருஷ்ணன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது  துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பான அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது  தமிழக அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எம்., கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், ”தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஜனநாயக முறையில் மக்களால் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையால்  துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.  

கே.பாலகிருஷ்ணன்

பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், துப்பாக்கிச்சூட்டுக்கு முன்பு கூட்டத்தை கலைந்து செல்லுமாறு உரிய  முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதா?  சட்டப்படி பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பது குறித்து அருணா ஜெகதீசன் ஆணையம் விரிவாக ஆய்வு செய்து, கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு, வானத்தை நோக்கி சுடுதல் உள்ளிட்ட எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் நேரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக ஆணையத்தின்  அறிக்கை கூறியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மக்கள் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கப்பட்ட விதம் குறித்தும் ஆணையம் ஆய்வு செய்துள்ளது. அருணா ஜெகதீசன் ஆணையம் சம்பவத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளது. ஆணைய அறிக்கையில் காவல்துறையைச் சேர்ந்த 17 பேர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கில் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மற்றும் அதன்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை தொடர்ந்து விசாரித்து வருகிறது. 

ஆர்ப்பாட்டம்

வழக்கு விசாரணையில், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  வெங்கடேஷ், அப்போதைய ஐஜி ஷைலேஷ் குமார் யாதவ், டிஐஜி கபில் குமார் சி. சரத்கர் உள்ளிட்ட மூன்று மூத்த அதிகாரிகளுக்கு எதிரான துறைரீதியான நடவடிக்கைகள் முந்தைய அரசால் கைவிடப்பட்டதாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த நடவடிக்கைகளை மீண்டும் பரிசீலிப்பது குறித்து தற்போதைய த.வெ.க. அரசின் நிலைப்பாட்டை உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது.

”அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டிய சட்டப்பூர்வ கட்டாயம் இல்லை” என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் முந்தைய தி.மு.க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. தற்போதைய த.வெ.க அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் முந்தைய அரசின் நிலைப்பாட்டைத் தொடர்வது என்பது தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும். குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம். அதிகாரிகள் என்பதற்காக நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது.

ஆர்ப்பாட்டம்

ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற காலகட்டத்தில் நடிகராக இருந்த விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.  தற்போது அவர் முதலமைச்சராக உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு ஆதரவாக இருப்பது போல் உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User