'திருநெல்வேலி செல்லும் விஜய்; வருத்தத்தில் கட்சி நிர்வாகிகள்!' - காரணம் என்ன?

Apr 6, 2026 - 15:02
 0
'திருநெல்வேலி செல்லும் விஜய்; வருத்தத்தில் கட்சி நிர்வாகிகள்!' - காரணம் என்ன?

தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் திருநெல்வேலியில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். ஆனால், கட்சித் தலைவரின் வருகையால் குஷியாக வேண்டிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கடும் அப்செட்டில் இருக்கின்றனர். காரணம் என்ன?

விஜய்
விஜய்

தவெக தலைவர் விஜய் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார். சென்னை, திருச்சி, புதுச்சேரியை தொடர்ந்து நாளை மறுநாள் திருநெல்வேலியில் ஒரு கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். இதற்கான அனுமதி வாங்கும் பணிகளும் இடத்தை தயார் செய்யும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

ஆனால், இந்த விவகாரத்தில் லோக்கல் மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளும் கடும் அப்செட் என்கின்றனர் தென்மாவட்டங்களை சேர்ந்த தவெகவினர். இதுசம்பந்தமாக தென்மாவட்ட நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். 'கட்சி ஆரம்பித்ததிலிருந்து தலைவர் தென் மாவட்டங்கள் பக்கம் பெரிதாக வரவே இல்லை. மதுரை மாநாட்டோடு சரி. இப்போது கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக திருநெல்வேலி வரவிருக்கிறார். அதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், தலைவர் எங்கள் மாவட்டத்துக்கு வருகிற விஷயம் எதோ மாற்றுக்கட்சியினர் போல செவி வழியாகத்தான் எங்களுக்கு தெரிய வருகிறது.

முருகன்
முருகன்

கட்சித் தரப்பிலிருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை. நாங்களாக விசாரித்ததில் சுத்தமல்லி அருகே ஒரு இடத்துக்கு தலைவர் வரவிருப்பதாகவும் அங்கே தென் மாவட்டங்களை சேர்ந்த 22 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் கூறுகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் கூட சில இளைஞர்கள் வீடியோ போட்டிருந்தார்கள். அவர்களுக்கு சொல்லப்பட்ட தகவல்கள் கூட எங்களுக்கு சொல்லப்படவில்லை . எல்லா தகவல்களும் திருநெல்வேலி வேட்பாளர் ஆர்.எஸ்.முருகனுக்கும் பாளை வேட்பாளர் மரிய ஜானுக்கு மட்டுமே சொல்லப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து எந்த மா.செக்கும் மற்ற வேட்பாளர்களுக்கும் அழைப்போ தகவலோ செல்லவே இல்லை. ஆர்.எஸ்.முருகன் மார்ச் 28 ஆம் தேதிதான் கட்சிக்கே வந்தார்.

மரிய ஜான்
மரிய ஜான்

மரிய ஜான் ஒரு வருடம் முன்பாக பதவியை குறிவைத்து மட்டுமே கட்சிக்குள் வந்தவர். இருவருமே பணம் படைத்தவர்கள். அதனால் அவர்களாகவே கைகோத்து கொண்டு எல்லாவற்றையும் செய்கிறார்கள். ஏற்பாடுகளை மேற்பார்வையிட செங்கோட்டையன் திருநெல்வேலி வந்திருக்கிறார். அந்தத் தகவலையும் எங்களிடம் சொல்லவில்லை. 'உழைத்தவர்களுக்குதான் பதவி, மற்றபடி ஹெலிகாப்டரில் வந்தால் கூட இங்கே பதவி கிடைக்காது' என்றனர். எல்லாமே வாய் வார்த்தையாகத்தான் இருக்கிறது. கண்முன்னே சீட்டுக்காகவும் பதவிக்காகவும் கட்சிக்குள் வந்தவர்களுக்கு எல்லா முக்கியத்துவமும் கிடைக்கிறதே. நாங்கள் அழையா விருந்தாளியை போல கையறு நிலையில் நிற்கிறோம்' என்றனர்.

தென்மாவட்ட நிர்வாகிகளின் குமுறலை தவெக தலைமை கவனிக்குமா?

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0